Last Updated : 28 Sep, 2013 04:41 PM

 

Published : 28 Sep 2013 04:41 PM
Last Updated : 28 Sep 2013 04:41 PM

உறவின் நீளம் மூன்று கஜம்

தன்னுடைய சம வயதுப் பெண்கள் எல்லாரையும் போலவே ரானுவுக்கும் கனவு இருந்தது. கொஞ்சம் வசதியான வாழ்க்கை; தன்னைப் புரிந்து கொண்டாடுகிற கணவன். இவைதாம் அவளுடைய தேவைகள். ஆனால் நடைமுறையில் அது நிறைவேறவே இல்லை. பெற்றோரின் வற்புறுத்தலும் சமூகக் கட்டுப்பாடுகளும் தான் அவளுடைய வாழ்க்கையைத் தீர்மானித்தன. ஏக்கா (ஒற்றைக் குதிரை பூட்டிய வண்டி) ஓட்டியான திலோக்காவை மணந்து கொள்ள நேர்கிறது. குதிரைக்குக் கொள்ளுக்கும் குடும்பத்தினருக்குக்கு ரொட்டிக்கும் வருவாய் ஈட்டவே திணறுகிற குடும்பத்தில் புகுந்த பின்னர், பிறந்த வீட்டுத் தரித்திரம் இதை விடக் குறைவானது என்று படுகிறது. கணவனாக வந்த திலோக்காவோ குடிகாரன்; போதையேறினால் உதையப்பனாகிறவன். திருமணமாகி போதைக்கும் சச்சரவுகளுக்கும் இடையில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பின்னும் கொண்டு வராத சீதனத்தைப் பற்றிச் சொல்லி, மாமியார் குத்திக் காட்டுகிறாள். தன்னுடைய எளிய கனவுகள் கூட நிறைவேறாத வாழ்க்கையை ரானு குல தெய்வமான வைஷ்ணோ தேவியின் தீர்மானம் என்று ஏற்றுக் கொள்கிறாள். இந்த ஏற்றுக் கொள்ளும் உணர்வுதான் அவளைத் தொடர்ந்து வாழ வைக்கிறது. அவளும் எல்லாப் பெண்களையும் போல வம்பு பேசியும் திருவிழாக்களில் பங்கேற்றும் தனது சமரசத்தை நியாயப்படுத்திக் கொள்கிறாள்.

''நான் பிறந்து வளர்ந்த பஞ்சாபி கிராமப் புறங்களில் பார்த்த பெரும்பான்மையான பெண்கள் அப்படித்தான் இருந்தார்கள். ஒருவேளை இன்னும் இருக்கிறார்கள். தங்களுடைய சங்கடங்களையே தங்களுக்குக் கிடைத்த வாழ்க்கையாகப் பார்க்கிறார். அவர்கள் எல்லாரின் ஒட்டு மொத்த வடிவம்தான் ரானு.'' என்று நாவலாசிரியர் ரஜீந்தர் சிங் பேடி (1915 1984)குறிப்பிடுகிறார். அவர் எழுதிய 'ஏக் சதர் மாலி சி' நாவலின் இழைதான் மேலே குறிப்பிடப்பட்டது.

ரஜீந்தர் சிங் பேடி உருது மொழியில் எழுதிய நவீன எழுத்தாளர்களில் முக்கியமானவர். அஞ்சல்துறை எழுத்தராகப் பணி புரிந்தவர் இலக்கிய ஆர்வத்தால் வேலையைத் துறந்து எழுத்தாளரானார். உருது மொழியில் சதாத் ஹசன் மண்டோவுக்கு நிகராகக் கதைகள் எழுதியவர். 'ஏக் சதர் மாலி சி' நாவலுக்காக 1967 இல் சாகித்திய அக்காதெமிப் பரிசும் பெற்றார். பஞ்சாபிக் கிராம வாழ்க்கையின் நுட்பமான இழைகளை கோர்த்து அந்த மண்ணின் மனிதர்களைப் பற்றிய கதைகளை உருவாக்கியவர் பேடி. கீழ்த் தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கையை கரிசனத்துடன் பதிவு செய்தவர். முதன்மையாகப் பெண்களின் வாழ்வை.

இந்திய சமூக அமைப்பில் தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் இல்லா பிறவிகள் பெண்கள். ரானுவும் அப்படித்தான் இருக்கிறாள். ஆனால் இக்கட்டான சூழ்நிலையை அவள் சமாளிக்கும் பக்குவம்தான் அவளைக் கதாநாயகியாக மாற்றுகிறது.

ஒருநாள், ஊர்ப் பிரமுகருக்காக ஒரு பெண்ணைத் தனது ஏக்காவில் அழைத்து வந்து சேர்க்கிறான் திலோக்கா. மறு நாள் வல்லுறவுக்கு ஆளாக்கப் பட்டு இறந்து கிடக்கிறாள். அவளுடைய சகோதரர்கள் அந்தப் பாதகத்துக்குக் காரணம் திலோக்கா என்று பழி சுமத்தி அவனைக் கொன்று விடுகிறார்கள். ஆதரவற்ற குடும்பம் மேலும் வறுமையில் ஆழ்கிறது. ஊர்ப் பஞ்சாயத்து - ஐந்து பேர் கொண்ட சபை ஒரு நிவாரணத்தை முன்வைத்து அதை ஏற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்துகிறது. திலோக்காவின் தம்பி மங்களை, ரானு திருமணம் செய்து கொள்ள வேண்டும். ரானுவுக்கு அந்தத் தீர்மானம் அதிர்ச்சியை தருகிறது. மங்கள் அவளை விடப் பதினான்கு வயது இளையவன். கிட்டத்தட்ட மகனைப் போலவே அவளால் வளர்க்கப்பட்டவன். ஆனால் பஞ்சாயத்தின் தீர்ப்பு மாற்ற முடியாதது. எனவே 'மாலி சி சிதர்' என்ற சடங்குக்கு உடன்படுகிறாள். திருமணமல்லாத திருமணச் சடங்கு அது. மூன்று முழம் நீளமுள்ள துணியை பெண்ணின் மேல் மைத்துனன் போர்த்தி விட்டால் அவள் அவனுக்கு மனைவியாகி விடுவாள். இந்தச் சடங்குக்குப் பிறகு மங்களுடனான தன் உறவை எப்படி ரானு கையாளுகிறாள் என்பது அவளை வழக்கமல்லாத பாத்திரமாக்கும் ஒரு செயல்.

ரானுவின் ஒரே எண்ணம் மகள் சன்னூவுக்கு பணக்காரனும் அழகனுமான மாப்பிள்ளையைப் பார்த்து மணமுடித்து வைக்க வேண்டும் என்பதே. அதுவும் கைகெட்டும் தூரத்தில் வருகிறது. ஆனால் மாப்பிள்ளையைப் பார்த்ததும் நிலை குலைகிறாள். கணவன் திலோக்காவைக் கொன்றவன் அவன். இந்த இக்கட்டான நிலைமையில் எடுக்கும் முடிவே அவளை நிஜத்தின் வடிவமாக மாற்றுகிறது.

மிக எளிய கதை. ஆனால் பஞ்சாபி கிராம வாழ்வின் எல்லா நுட்பங்களையும் சேர்த்துக்கொண்டு அசாதாரமான ஒன்றாக இந்தக் கதையை மாற்றியிருக்கிறார் ரஜீந்தர் சிங் பேடி. அண்ணிக்கும் மைத்துனனுக்குமான உறவின் கதைவோ கணவனைக் கொன்ற பணக்காரனை ஏழைப் பெண் பழிவாங்கும் கதையாகவோ எழுதப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய விரசத்தையும் பிரச்சாரத்தையும் பேடியின் மானுடக் கரிசனம் தவிர்த்திருப்பதே இதை முக்கியமான நாவலாக ஆக்குகிறது.

ஐ டேக் திஸ் உமன் (நாவல்) 2007

உருது மூலம்: ரஜீந்தர் சிங் பேடி

ஆங்கிலத்தில் : குஷ்வந்த் சிங்

ஓரியண்ட் பேப்பர் பேக்ஸ், நியூ டெல்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x