

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவராக இருந்தார். அம்மா மங்கையற்கரசி நிறையப் படிக்கக்கூடியவர். எனது நற்குணங்கள் யாவும் அவர் உருவாக்கியதே.
நாங்கள் ஆறு பிள்ளைகள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம். அடுத்தவன் நான். தங்கைகள் கமலா, கோதை, உஷா. கடைசித் தம்பி பாலகிருஷ்ணன். அப்பா அரசாங்க வேலையில் இருந்தபோதும் நாங்கள் விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்துவந்தோம். சூலக்கரையில் வயலும் கரிசல் காடும் எங்களுக்கு இருந்தன.
நான் எழுத வேண்டும், இலக்கியவாதியாக வேண்டும் என்று பெரிதும் ஊக்கபடுத்தி யவர்கள் நா. சுப்ரமணியம், பரமசிவம் ஆகிய இரண்டு சித்தப்பாக்களே. கேட்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அரவணைத்துக்கொண்டவர் அண்ணன் டாக்டர் வெங்கடாசலம்.
எந்த வேலைக்கும் போகக் கூடாது. முழு நேர எழுத்தாளராக மட்டுமே வாழ வேண்டும் என்று கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் முடிவு செய்துகொண்டேன். இதற்காகப் பல்வேறு அவமானங்களையும் நெருக்கடிகளை யும் சந்தித்தேன். ஆனால், எழுத்து மட்டுமே என்னை வாழ வைத்தது; எனக்கான அடை யாளங்களை உருவாக்கித் தந்தது.
நான் காதல் திருமணம் செய்துகொண்ட வன். என் மனைவி சந்திரபிரபா, என் தங்கையோடு படித்தவள். அவளது அண்ணன் கார்த்திகேயன் எனது நண்பன். புத்தகம் படிப்பதில் என் மனைவிக்கு இருந்த ஆர்வமே எங்கள் காதலுக்கான தொடக்கம். சிவகாசியில் என் மனைவி டி.ஆர்க் படித்துக்கொண்டிருந்த நாட்களில் காதல் தொடங்கியது. அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதித்துப் பணம் அனுப்பி எனது தேவைகளுக்கானதை வாங்கிக்கொள்ளச் செய்தாள். அப்படித்தான் சென்னையில் வாழ்ந்தேன். எப்படியும் எழுதி ஜெயித்துவிடுவேன் என்று உற்சாகப்படுத்தி னாள். அந்த நம்பிக்கையே என்னை இயக்கியது. அறையில்லாமல் சென்னையில் சுற்றிய லைந்த நாட்களில் எனது ஒரே கனவு எனக்கென ஒரு வீடு வேண்டும் என்பது. எதிர்காலம் எப்படி இருக்கும் எனத் தெரியாத குழப்பம். எழுதி மட்டுமே வாழ வேண்டும் என்ற பிடிவாதம். இரண்டும் ஒன்று சேர சென்னை நகரில் அடையாளமற்ற நிழலைப் போலத் திரிந்துகொண்டிருந்தேன். எத்தனையோ நண்பர்கள், முன் அறியாத மனிதர்கள் உண்ணவும் உறங்கவும் தங்கவும் உதவி செய்தார்கள்.
சென்னை ஒரு அற்புதமான நகரம். என்னை எழுத்தாளனாக உருவாக்கியதும் வாழ வைத்ததும் இந்த நகரமே. எனக்கு மட்டுமில்லை, நம்பிக்கையுள்ள எவரையும் இந்த நகரம் கைவிடுவதில்லை. அவரவ ருக்கான இடத்தை உருவாக்கித் தரவே செய்கிறது. அதைக் காப்பாற்றிக்கொள்வது நம் கையில் இருக்கிறது.
வேலைக்கே போகக் கூடாது என நினைக்கிற ஒருவனை நம்பி ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள முன்வந்தது எனது அதிர்ஷ்டமே. கொந்தளிக்கும் உணர்ச்சி நிலைகளுக்குள் வாழுகிற ஒருவனைப் புரிந்து கொண்டு அரவணைத்து அன்பு செலுத்தி இலக்கியத்திலும் வாழ்விலும் நிகரற்ற துணையாக என் மனைவி இருப்பது எனது நல்லூழ். வீட்டில் சந்தோஷமும் அன்பும் நிரம்பியிருந்தால் போதும் ஒரு மனிதனால் இந்த உலகை எளிதாக எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியும்.
எழுத்தாளனின் மனைவியாக இருப்பது வரமும் சாபமும் ஒன்று கலந்தது. எவ்வளவோ கஷ்டங்களையும் நெருக்கடிகளையும் வறுமையையும் தாண்டியே வந்தேன். எனக் காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு எவ்வளவோ விட்டுக்கொடுத்து வாழ்க்கையை எதிர்கொண்டவள் என் மனைவி. எழுத்து மட்டுமே எனது உலகம் என மூழ்கிக் கிடப்பவன் நான். என்னைப் பார்க்க வேண்டி வீடு தேடி வரும் வாசகர்கள், நண்பர்களுக்கு அன்றாடம் சிற்றுண்டியும் உணவும் கொடுத்து உபசரிப்பது, என்னுடைய சந்திப்புகள், நான் பேசும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளை ஒருங் கிணைப்பது, பதிப்பகங்களுடன் தொடர்பு கொள்வது, புத்தகங்களைப் பிழைதிருத்துவது, வங்கிக் கணக்கு வழக்குகளைப் பராமரிப்பது, சினிமா ஒப்பந்தங்கள், படப்பிடிப்பு விபரங்கள், பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பது எல்லாமே என் மனைவிதான். வீட்டு வேலைகள் அத்தனையும் சுமந்துகொண்டே இவ்வளவையும் கூடச் சுமக்கிறாள். இவை எல்லாமும் இப்போது அவளது முழுநேர வேலையாகிவிட்டது. அவள் படித்த கட்டிடக் கலை சார்ந்த துறையில் அவளால் இப்போது ஈடுபட இயலவில்லை. ஆனால், நான் வேறு, அவள் வேறு அல்ல என்ற புரிதல் இருவருக்கும் இருக்கிறது.
எங்களுக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத். அண்ணா பல்கலைக்கழகத்தில் மீடியா சயின்ஸ் படிக்கிறான். சின்னவன் ஆகாஷ். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். எழுத்தில் ஆர்வம் கொண்டவன். என்னோடு இணைந்து சிறுவர்களுக்காக ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான்.
அன்றாடம் இரவு ஒன்பது மணிக்கு வீடே ஒன்றுகூடி ஏதாவது ஒரு திரைப்படத்தைத் தினமும் பார்ப்போம். உள்ளூர் சினிமாவோ, உலக சினிமாவோ குடும்பமே பார்ப்போம். யாருக்கும் எந்தத் தடையும் கட்டுபாடுமில்லை. தமிழ், இந்தி பாடல்கள். கர்னாடக சங்கீதம். ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை என நிறையச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றைக் கேட்போம். இதைத் தவிரச் செய்தி, கிரிக்கெட், அரிதாகப் பாடல்கள் பார்ப்பதற்கு மட்டுமே டி.வி. வீட்டில் எல்லோர் கையிலும் எப்போதும் புத்தகம் இருப்பதால், யாருக்கும் டி.வி.யில் விருப்பம் இல்லை.
தினமும் மாலையில் கே.கே.நகரிலுள்ள சிவன் பூங்காவுக்கு மனைவியோடு நடைப் பயிற்சிக்குப் போவது வழக்கம். காலையில் யோகா, சில நாட்கள் ஷட்டில்காக் விளை யாடுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுமையான விடுமுறை. பள்ளிப் பிள்ளைகளைப் போலவே நானும் ஒய்வு எடுத்துக்கொள்கிறேன். எழுத்து, படிப்பு என ஒரு வேலையும் கிடையாது. பயணம், ஒய்வு, சினிமா, விளையாட்டு என ஜாலியாகச் செலவழிப்பது வழக்கம். இந்த ஒரு மாத காலத்தில் என்னுடைய எல்லா நண்பர்களையும் சந்தித்துவிடுவேன்.
ஒரு எழுத்தாளனாக எனது கிளைகள் வான் நோக்கி விரிந்திருக்கலாம். ஆனால் என்னைத் தாங்கும் நிலமாக, என் வேர்களாக இருப்பது வீடே!
- எஸ்.ராமகிருஷ்ணன்
தொடர்புக்கு: writerramki@gmail.com
(அடுத்த வாரம் பேசுவோம்)