

எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சிறுகதைகளை முதன்முறையாக ஆங்கில நாடக மேடையேற்றியிருக்கின்றனர் ‘தி மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நாடகக் குழுவினர். சூடாமணியைச் சிறப்பிக்கும் விதமாக இந்த நாடகம் அவருடைய பெயரிலேயே நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீ தேவனின் மொழிபெயர்ப்பிலும், நிகிலா கேசவனின் நாடகக் கதையாக்கத்திலும் பி.சி. ராமகிருஷ்ணா இயக்கத்திலும் ‘சூடாமணி’ உருவாகியிருந்தது.
இந்த நாடகத்துக்கான சிறுகதைகளின் தேர்வு பாராட்டத்தக்கது. ஏழு சிறுகதைகளையும் இணைக்கும் புள்ளியாக சூடாமணியையே வைத்து நிகிலா கேசவன் நாடகமாக்கியிருந்த விதம் புதுமையாகவும் இருந்தது. ஏழு சிறுகதைகளும் ஏழு பெண்களின் திருமண வாழ்க்கையை ஒவ்வொரு கோணத்தில் அலசுவதால், ஒரு முழு நீள நாடகம் பார்த்த அனுபவம் பார்வையாளர்களுக்குக் கிடைத்தது.
நாடகத்தில் ஐந்து சிறுகதைகளும் தனித்தனிக் கதைகளாகவே அரங்கேறின. ‘அடிக்கடி வருகிறான்’ (The Visitor) என்ற சிறுகதையும், ‘விருந்தாளிகளில் ஒருவன்’ (He came as a guest) என்ற சிறுகதையும் ஒரே சமயத்தில் இணையாகப் பயணிக்கும் காட்சிகளாக அரங்கேறியது நாடகத்தின் தனித்துவமான அம்சம். அரங்கேற்றப்பட்ட கதைகளில் வசனங்கள், ஆசிரியரின் சித்தரிப்புகள் ஆகியவற்றை மேடையில் கையாண்ட லாவகம் வியக்கவைக்கிறது. கால மாற்றத்தைக் காட்டிய விதம் பாராட்டுக்குரியது. பாத்திரங்களின் நினைவுகூரலும் சமகாலத்துக்கு மீண்டு வருதலும் துல்லியமாக உணர்த்தப்படுகின்றன. மேடை வடிவிலோ ஒளி அமைப்பிலோ வலிந்து எதையும் செய்யாமல் மிக எளிமையாக இதைச் சாதித்திருப்பது நாடகமாக்கத்தின் படைப்பாற்றலுக்குச் சான்று.
புவனாவும் வியாழக் கிரகமும் (Bhuvana and the star sign) என்ற நாடகத்தில் ‘அந்த நாள்’ திரைப்பட ‘போஸ்டரையும்’, ‘ஆபூர்வ ராகங்கள்’ திரைப்பட போஸ்டரையும் வைத்துக் கால இடைவெளியைச் சுட்டிக்காட்டியிருந்த விதம் நல்ல முயற்சி. இந்தச் சிறுகதையில் பதினைந்து ஆண்டுகள் இடைவெளி என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ‘அந்த நாள்’ படத்துக்கும் ‘ஆபூர்வ ராகங்கள்’ படத்துக்கும் இருபத்தியொரு ஆண்டுகள் இடைவெளி. இந்த அம்சம் மட்டும் நாடகத்தில் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. மற்றபடி, எந்த இடத்திலும் காலம், இடம், நபர்கள் போன்ற குழப்பம் இல்லாமல் சீரான காட்சிகளுடன் பயணிக்கிறது ‘சூடாமணி’. பி.சி.ராமகிருஷ்ணாவின் இயக்கமும், நிகிலாவின் கதையாக்கமும் இதைச் சாத்தியப்படுத்தியிருந்தன.
பெண்களை மையமாகக் கொண்ட இந்தக் கதைகளில் நடித்திருக்கும் பெண்கள் மிக நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சுகந்தியாக வரும் கிருத்திகா ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலைப் பாடியபோது அரங்கம் கைதட்டலால் நிரம்பியிருந்தது. சூடாமணியாகவும் ஷோபனாவாகவும் நிகிலா, மீனாட்சியாகப் பிரியங்கா, பேராசிரியராக எஸ்.ராம், டி.ராமச்சந்திரன், ஹைமா ராமகிருஷ்ணா, பி.சி. ராமகிருஷ்ணா போன்றவர்களின் நடிப்பு மனதில் நிற்கிறது. நாடகத்தின் மேடை அமைப்பும், ஒளி அமைப்பும் சிறப்பு.
எளிமையான ஆங்கிலம், தேர்ந்த நடிப்பு, இன்றைய காலத்துக்கும் பொருந்தும் கதைக்களத்தில் அமைந்திருந்த சிறுகதைகள் போன்ற அம்சங்களால் ‘சூடாமணி’ நூறு நிமிடங்களுக்குப் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தது. எல்லாக் கதைகளும் பெண் வாழ்வின் வெவ்வேறு பரிமாணங்களை நுட்பமாகத் தொட்டுக் காட்டுகின்றன. கதைகளில் வெளிப்படும் கூர்மையான பெண்ணிய நோக்கும் வாழ்க்கைப் பார்வையும் இந்தப் படைப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன.
ஒவ்வொரு பெண்ணும் நமக்கு ஒவ்வொரு செய்தியைச் சொல்கிறார். பெண்களின் வாழ்வைப் பற்றியும் அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களின் போக்கு பற்றியும் இவர்கள் சிந்திக்கவைக்கிறார்கள்.