

வனராஜ கார்ஜான் இது ஒரு படத்தின் தலைப்பு. இப்படம் எடுக்கப்பட்டு, வெளியிடப்பட்ட காலத்தில் தணிக்கை காவல் துறை யிடம் இருந்தது. இப்படத்துக்கு எதிர்ப்பு ஏதாவது இருந்தால் அது நடிக, நடிகையர் உடை பற்றித்தான் இருந்திருக்கும்.
கிட்டத்தட்ட அதே காலத்தில் இன் னொரு வனப் படம் வந்தது.. ‘வன மோஹினி.’ இதில் எம்.கே.ராதா நடித் திருந்தார். பகவான் என்பவர் டைரக்ட் செய்திருந்தார். அப்போது இவர் பம்பாய்க்காரர் என்று எனக்குத் தெரி யாது. என் கணக்கு வாத்தியார் பிரகாஷ் ராவும் இன்னொரு கணக்கு வாத்தியார் வீராசுவாமியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. “ஏமிரா, ஸ்டண்ட் கிங்க் போதாமா?” (என்னப்பா, ஸ்டண்ட் கிங்க் போக லாமா?) ‘ஸ்டண்ட் கிங்க்’ என்பதும் ஒரு திரைப்படம். டைரக்ஷன் பகவான். இதெல்லாம் நான் ஏழாவது எட்டாவது படிக்கும்போது. இதே பகவான் நான் சென்னை வந்த ஆண்டு நடித்து, டைரக்ட் செய்த ‘அல்பேலா’ என்ற படம் மாதக்கணக்கில் ஓடியது. அதன் பாட்டுகளைக் கேட்க நான் அந்த சினிமாக் கொட்டகைக்குப் பின்னால் இருந்த சந்தில் காத்திருப்பேன். அதற்கு இசை கொடுத்தவர் சி.ராமச் சந்திரா. இவர் ஒரு தமிழ் ஸ்டண்ட் படத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். அது ‘வனமோஹினி.’
இந்த ‘வனமோஹினி’ காலத்தில் எங்கள் வீட்டுக்கு இரண்டு மூன்று இதழ்கள் ‘சந்திரோதயம்’ வந்தது. அன்று எனக்கு அந்த வெளியீட்டின் சிறப்புகள் தெரியாது. அதில் க.நா.சு, சி.சு.செல்லப்பா இருவரும் பணி புரிந்திருக்கிறார்கள். எனக்கு அந்த இரு இதழ்களில் ‘பெரும் பங்கு' வகித்த இலங்கை குயில் தவமணிதேவி புகழ்தான் நினைவில் இருக்கிறது. அந்த இலங்கைக் குயில்தான் ‘வனமோஹினி’ படத்தில் வனமோஹினி!
இந்தப் படத்தையும் நான் பார்க்க முடியவில்லை. நான் வசித்த செகந் திராபாத்தில் இருந்த மூன்று முக்கிய திரைப்படக் கொட்டைகளில் சித்ரா என்ற கொட்டகையில்தான் தமிழ் சினிமா காட்டப்படும். கொட்டகை சொந்தக்காரர் கரன்சிங் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார்.
தமிழ்ப் படங்களில் முக்கியமானவை எல்லாம் அவர் தேர்ந்தெடுத்துக் காட்டுவார். நாங்கள் ஒரு முறை டிக்கட் இல்லாமல் போய்விடுவோம். ஆனால் இரண்டாம் முறை, மூன்றாம் முறைக்கெல்லாம் டிக்கட் வாங்கியாக வேண்டும்.
காட்டு மக்களிடையே வளரும் ராணி ஒரு நாள் ஒரு ராஜகுமாரனைச் சந்திக்கிறாள். அவளுக்குக் காட்டு மிருகங்கள் உதவும். தவமணிதேவி ‘வனமோஹினி’ தவிர எம்.எஸ். நடித்த ‘சகுந்தலை’ படத்திலும் நடித்திருக்கிறார். வசதியான யாழ்ப்பாணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்படங்களுக்கு மூலம் ஒரு ஹாலிவுட் படம். அது ‘டார்ஜான் தி ஏப்மேன்.’ குரங்கு மனிதன் ‘டார்ஜான்’. பத்திரிகைகளில் தொடர் படக் கதைக்காக எட்கர் ரைஸ் பர்ரோஸ் என்பவருடைய கற்பனையில் உதித்தவன் ‘டார்ஜான்’. திரைப்படத்தில் டார்ஜான் தோன்ற ஆரம்பித்தவுடன் பர்ரோஸ் பெரும் பணக்காரராகிவிட்டார். ஹாலிவுட்டுக்கும் அப்போது சண்டைப் படங்களின் தேவை இருந்தது. இப்படங்களின் களம் ஆப்பிரிக்கா என்றாலும் இவை முழுக்க முழுக்க ஹாலிவுட் ஸ்டுடியோவிலேயே எடுக்கப் பட்டவை. ஒரு முக்கிய தகவல், காட்டிலேயே வளர்ந்து வனவிலங்கு களின் நன்மதிப்பைப் பெறும் ‘டார்ஜான்’ ஒரு வெள்ளைக்காரன்.
நான் பார்த்த முதல் டார்ஜான் படம், ‘டார்ஜான்ஸ் நியூ யார்க் அட்வென்சர்.’ இப்படத்தை எம்.ஜி.எம் என்ற பெரிய கம்பெனி தயாரித்திருந்தது. எங்கள் ஊரில் தினம் இரண்டே ஆட்டங்கள். மாலை 6.30, 9.30. வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் பகலில் ஒரு கூடுதல் ஆட்டம். 3.30. இந்தப் பகல் ஆட்டத்துக்குப் பாதிக் கட்டணம். ஆங்கிலப் படங்கள் காட்டும் கொட்டகைகளில் பிரிட்டிஷ் பணம். அதாவது ஒரு பிரிட்டிஷ் ருபாய்க்கு நிஜாம் பணம் ஒரு ரூபாய் பத்தணா. இந்தப் பணமாற்ற விகிதத்தில் இன்று இங்கு சவரன் விலை ஏறி இறங்குவது போல ஏற்றம் இறக்கம் இருக்கும். எங்கள் கணக்குப் பாடத்தில் இந்த ஹாலி பிஜி (ஹைதராபாத், பிரிட்டிஷ்) நாணய விகிதம் ஒரு முக்கிய பகுதி. பரீட்சையில் 10 மதிப்பெண்கள் கேள்வி.
எனக்கு வெள்ளி சனி ஞாயிறு கால் ரூபாய் டிக்கட் கிடைக்கவில்லை. ஆனால், நான்கு நாட்களுக்கு அது நீட் டிக்கப்பட்டது. அப்போது பார்த்து விட்டேன். ஜானி வெயிஸ்மல்லர் என்பவர் டார்ஜான். குழந்தையாக ஆப்பிரிக்கக் காட்டில் கைவிடப்பட்டவர் மிருகங்களின் உதவியால் வளர்கிறார். அவரால் ஒரு பெண் கவரப்பட்டு காட்டில் தங்கிவிடுகிறார். அப்புறம் ஒரு மகன். ஒரு சிம்பன்ஸி. வினோத நகைச்சுவையில் அதற்கு ‘சீட்டா’ என்று பெயர். டார்ஜான் வரிசையில் 30 படங்களாவது வந்திருக்கும். ஜேம்ஸ் பாண்ட் வேஷம் போடுபவர் மாறுவது போல, டார்ஜானும் மாறியிருக்கிறார். இவ்வளவு அமெரிக்க டார்ஜான்கள் நடுவில் இந்தியாவில் இரண்டு மூன்றாவது வேண்டாமா?
இந்த டார்ஜான் படங்கள் பொழுது போக்கு சாகசப் படங்கள் மட்டும் அல்ல; அவை ஒரு மனிதனின் ரகசிய அபிலாஷைகளைப் பூர்த்திசெய்கின் றன. சில மிருகங்கள் மனிதனுக்கு நகரங்களில் இசைவாக இருப்பதைப் போல நகர நாகரிகம் இல்லாத காட்டிலும் அவன் வாழ முடியும் என்பது போலத் தோற்றம் தரும். ருட்யார்ட் கிப்ளிங்க் என்ற ஆங்கில எழுத்தாளர் இந்தியர்களைக் கதாநாயகர்களாக வைத்து நாவல்கள் எழுதிப் பெரும் பேரும் புகழும் அடைந்துவிட்டார். ஆங்கிலேயர் செய்ய முடிந்ததை இன்னும் விரிவாக்கி, அமெரிக்கனான டார்ஜான் ஒரு குடும்பதோடு காட்டில் வசிப்பவனாகக் காட்ட வேண்டும். காட் டில் ஒரு பெரிய மரத்தின் மீது வீடு அமைத்து டார்ஜான் அவன் குடும் பத்தோடு உணவு அருந்துவான். குச்சிகளை ஸ்பூன் மாதிரி செய்து உணவைக் கையால் தொடாமல் சாப்பிடுவான்.
இப்போது டார்ஜான் இடத்தை இயந்திர மனிதர்கள் பிடித்துவிட்டார்கள். மேலும், ஆப்பிரிக்காவில் பல நாடுகள் மேலை நாடுகள் போல வளர்ந்துவிட்டன. ஆப்பிரிக்கர்கள் இலக்கியத்தில் நோபல் பரிசு பெறும் உயர் நிலையில் இருக்கிறார்கள். இப்போது அவர்களை ‘மம்போ ஜம்போ’ என நடனம் ஆடுவதாகக் காட்டுவது அபத்தமாக இருக்குமல்லவா?
- புன்னகை படரும்…