

கவிதை ஒரு தூல உருவம் அல்ல என்பதை உணரத்தான் அதில் ஆழ்ந்து கவனிப்பு செலுத்தப்பட்டது. அந்த சமயத்தில் கவிதை சம்பந்தமாக மட்டுமல்ல கலையுலகின் முழு அறைகளினுள்ளும் புது வெளிச்சங்கள் பாய்ந்தன. அதற்கு மூலகாரணமாக, பௌதிக உலகில் வஸ்துதான் அநாதியானது என்ற கொள்கை ஐன்ஸ்டீனின் பின்னால் தகர்ந்து முழுவிஞ்ஞானமே தூல ரூபத்துக்கு அடியில் ஓடும் சக்தியினுள் நுழைந்ததையும், அதுவரை மனித மனத்தின் உள்நெகிழ்ச்சிகளை நிராகரித்து வந்த அறிவியலை, உள்மனம் பற்றிய தனது அற்புத நிரூபணங்களால் மனவியல் துறையுள் பிராய்ட் இழுத்ததையும் கூறலாம்.
கலாரூபங்களும் தம்மைப்பற்றி ஆராய எழுந்தன. ரூபங்களின் கனபரிமாண நிலையை ஓவியத்தின் இரட்டைப் பரிமாணமான தட்டை நிலைக்குக் கொண்டுவந்தான் பிக்காசோ. இவனை, பௌதிக விஞ்ஞானத்தின் நாலாவது பரிமாணம் பற்றிய விளக்கம் பாதித்தது. எனவே ஓவியத்தின் உண்மைப் பரிமாணத்தை ஆராய்ந்தான். ஜேம்ஸ் ஜாய்ஸ், இலக்கியத்தில் மனசின் உள்பிரக்ஞை நிலைக்கு ஆழ்ந்து சென்றான்- நினைவுகளின் தொடர்ச்சியினூடே, அதன் பிரக்ஞைச் சரட்டைக் கண்டுபிடித்தான். பொதுவாகக் கலைத்துறை முழுவதுமே அறிவியலின் போக்கில் விழித்தது. கவிதையும், அது பிறக்கும் அடிப்புறையைத் தேடி நுழைந்தது. அங்குதான் கவிதை, தான் இதுவரை தன்னை ஒரு தூல உருவம் எனக் கண்டு வந்ததின் தவறை உணர்ந்தது.