

கோபத்தை வெளிப்படுத்தத் தன்னையே வருத்திக்கொண்ட காந்தியின் உள்ளமும், இரமேஷ் பிரேதனின் கவிதை உள்ளமும் கலைமனம் கொண்டவைதாம்.
எதிர்ப்பைக் காட்டும் முக்கியமான வழிகளுள் கவிதையும் ஒன்று. கவிதை எழுதுதல் தனி மனித செயல்பாடாக இருப்பினும் அது தோற்றுவிக்கும் தாக்கம் அதைச் சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வைக்கிறது. டி.எஸ். எலியட்டின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென் றால் ரமேஷ் பிரேதன் அவருடைய எதிர்ப்பை, கோபத்தை தன் பண்பட்ட மொழியில் நித்திய மானிட உணர்ச்சியைத் தூண்டும்படி கவிதையாக்கி இச்சமூகத்திற்குக் கையளிக்கிறார்.
இவ்வகையில் இவரது சமீபத்திய ‘மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்’ கவிதைத் தொகுப்பை நாம் வாழ நேர்ந்த இக்காலத்தின் ஒரு கவி ஆகிருதியின் மாபெரும் துயரக்குரல் அல்லது சாபத்தின் கலை வடிவம் என வரையறுக்கலாம். ‘பசிக்கிறது என்ன செய்ய/யாரைத் தொலைபேசியில் அழைக்கலாம்/முழுநேர எழுத்தாளன் என்று சொல்வது/தமிழில் எவ்வளவு பெரிய பொய்/முழுநேரப் பிச்சைக்காரன்/ எவ்வளவு பெரிய மெய்/மனக்குகையில் சிறுத்தை எழும்/எவ்வளவு வறிய காமெடி’ என்று கவிஞர் கூறுவதுதான் இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஸ்தூல நிலைமை.
எழுத்து கொல்லும் என்பார் புதுமைப்பித்தன். எழுத்தாளனின் சுயத்தை அழித்துதான் பிரம்மாண்ட படைப்புகள் உருக்கொள்கின்றன.ஒரு கவிதையில் கவிஞனின் ஆயுள் கரைந்திருக்கிறது. காஃப்கா கூறுகிறபடி எழுதுவதென்பதே இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதுதான். ரமேஷ் போன்றவர்களின் கவிதையும் வாழ்வும் இப்படித்தான் இருக்கிறது.
ரமேஷ் கவிதைகள் புதிர்த் தன்மையும் ஃபான்டசியும் கொண்டவை. நடுக்காட்டில் வழியைத் தொலைத்த ஒருவித மனநெருக்கடியை வழங்குபவை. பாதை தேடும் ஆர்வத்தோடு பயணத்தைத் தொடர்பவர்களுக்கு ஒரு புதிய உல கத்தைக் காட்டும் வல்லமை படைத்தவை. அது விடுதலை நிறைந்த உலகமாக இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.
மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
ரமேஷ் பிரேதன் | புது எழுத்து, 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம்–635112 | ரூ.200/- | தொலைபேசி: 9042158667