Published : 19 Mar 2017 10:17 AM
Last Updated : 19 Mar 2017 10:17 AM

மார்ச் 19: இர்விங் வல்லாஸ்; பிறப்பு நூற்றாண்டு நிறைவு - சமகாலத்தின் மனிதன்!

‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்பார் ஜி.நாகராஜன். இன்னொரு பக்கம் ஷேக்ஸ்பியர் ‘மனிதன் ஒரு மகத்தான பிறவி’ என்பார். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்த இரண்டு நிலைகளும், எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

இனம், நிறம், மொழி, மதம் என்ற வேறுபாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதரைக் கைகொடுத்துத் தூக்குவதும், அவரைக் கைகழுவி விடுவதும் உலகம் முழுக்கவும் பரவியிருக்கும் பிரச்சினை. மேற்கண்ட வேறுபாடுகளைத் தாண்டி ஒருவர் எப்படி உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதுதான், அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்து கிறது.

இன்று பல முன்னேற்றங்களுக்கும் முன்னோடியாகக் காட்டப்படும் அமெரிக்கா, ஒரு காலத்தில் நிறவெறி எனும் கறுப்புப் பக்கத்தைக் கொண்டி ருந்தது. ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு, வரலாற்றில் எந்த நிறம் பூசினாலும் அது தன் கோர முகத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தவே செய்கிறது. அப்போது நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்கள் எல்லாம் இந்த‌ முழக் கத்தை முன் வைத்தனர்: ‘இவர்கள் எல்லாம் கீழ்மையானவர்கள் அல்ல. வித்தியாசமான தோற்றம் கொண்ட வர்கள், அவ்வளவே’.

ஆனால், அமெரிக்கர்கள் அந்த வித்தியாசத்தை, எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை, ‘தி மேன்’ எனும் ஒரே ஒரு புத்தகத்தின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழின் சுமார் 80 ஆண்டுகால வரலாற்றில், அதன் ‘பெஸ்ட் செல்லர்’ வரிசையில், தன் புனைவு, அபுனைவு புத்தகங்களுக்காக முதலிடத்தைப் பிடித்த எர்னெஸ்ட் ஹெமிங்வே உள்ளிட்ட ஆறு எழுத்தாளர் களில் ஒருவரான இர்விங் வல்லாஸ் என்பவர் எழுதிய இந்த நாவல் 1964-ம் ஆண்டு வெளிவந்தது.

ஓரிரவில் அதிபர்

அமெரிக்க அரசியல் வரலாற்றில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்கர் ஜனாதிபதியாக வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இந்த நாவலை எழுதினார் இர்விங் வல்லாஸ். சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கற்பனை பராக் ஒபாமாவின் வடிவில் நிஜமாகும் என்பதை இர்விங் வல்லாஸ் நினைத்துப் பார்த்திருப்பாரா என்பது சந்தேகம்தான். இந்த ஒரு காரணத்துக்காகவே தீர்க்கதரிசியாகப் போற்றப்படும் இவர் 1916-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சிகாகோவில் பிறந் தார். இந்த ஆண்டு அவரின் பிறப்பு நூற்றாண்டு நிறைவடைகிறது.

ஆஃப்ரோ அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையை அலங்கரித்து விட்டு ஓய்வுபெற்ற பிறகு, ஊடகங்களின் சகல கருத்துக் கணிப்புகளையும் தகர்த்துவிட்டு மீண்டும் ஒரு வெள்ளையர் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப் பேற்றிருக்கும் நிலையில், அவரின் பதவியேற்பு உலகின் பல முற்போக்குப் பார்வைகளுக்கு அபாய மணி அடித் திருக்கும் இந்தத் தருணத்தில், இர்விங் வல்லாஸ் எழுதிய ‘தி மேன்’ நாவலை நாம் மறுவாசிப்புச் செய்வது முக்கியமாகிறது. ‘ஒரே இரவில் அமெரிக்காவின் அதிபர்!’ இதுதான் ஒரு வரிக் கதை. ‘ஒரு நாள் முதல்வன்’ போல, நேருக்கு நேராகச் சவால் விட்டு ஆட்சியைப் பிடிக்கும் கதையல்ல. அமெரிக்காவின் அதிபராக ஒரு வெள்ளையர் இருக்கிறார். அவர் அலுவலகப் பயணமாக வெளி நாடுக்குச் செல்லும்போது ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். அவருக்குப் பின் பொறுப்பேற்கும் துணை அதிபரும் அந்த விபத்தில் இறந்துவிடுகிறார். எனவே, அலுவலக நடைமுறையின்படி, துணை முதல்வருக்கும் அடுத்த நிலை யில் உள்ள ட‌க்ளஸ் தில்மன் எனும் ஆஃப்ரோ அமெரிக்க செனட்டர், அதி பராகப் பொறுப்பேற்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரது பதவிக்காலம் சுமார் 14 மாதங்கள்தான்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் நிறவெறி காரணமாக, வெள்ளையர்கள் அவரை எப்படி எல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள் என்பதை இந்த நாவல் பதிவுசெய்கிறது.

வெள்ளை மாளிகை அரசியல்

1868-ம் ஆண்டு ஆண்ட்ரூ ஜான் சன் எனும் அதிபர் மீது ‘அரசியல் குற்றச்சாட்டு’ சுமத்தப்பட்டது. அதற்குப் பிறகு சுமார் 130 வருடங்களுக்குப் பிறகு 1998-ம் ஆண்டு அன்றைய அதிபர் பில் கிளிண்ட்டன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பில் கிளிண்ட்டனுக்கு முன்பு, இந்தப் புனைவு இலக்கியத்தில் ஒரு ஆஃப்ரோ அமெரிக்க அதிபர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதையின் மையம்.

இந்தப் புத்தகம் சொல்லும் அரசி யலைத் தவிர, இலக்கிய ரீதியாக இந்தப் புத்தகம் கொண்டாடப்படுவதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. அது இர்விங் வல்லாஸின் அளப்பரிய கள ஆய்வு. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி நடக்கும் கதை என்பதால், ஒரு பரந்த அஸ்திவாரத்தைக் கட்டமைத்துவிடுகிறார். அமெரிக்க வெள்ளை மாளிகை எப்படியிருக்கும், அங்கு பின்பற்றப்படும் நடைமுறைகள் எல்லாம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் ஒரு வழிகாட்டி என்று சொன் னால் அது நூறு சதவீதம் உண்மை.

இந்த நாவலில் வரும் அதிபர் என்ன கொடுமையை எல்லாம் சந்தித்தாரோ, அதே கொடுமையை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமாவும் சந்தித்திருப்பதற்கு அநேக சாத்தியங்கள் உண்டு. வெளி உலகத் துக்கு வேண்டுமானால், ஒபாமா பெரிய வீரர் போலச் சித்தரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்க செனட்டிற்குள் அவர் எப்படியான விமர்சனங்களைச் சந்தித்திருப்பார்?

‘இங்கு இரண்டு கால் உள்ள ஜீவன்கள்தான் ஆள வேண்டும். உன்னைப் போன்ற நான்கு கால் ஜீவன்கள் அல்ல!’ என்று கறுப்பான அதிபரை, ஒரு விலங்காகச் சித்தரிக்கும் ஒரு இடம் நாவலில் உண்டு. அதே விமர்சனத்தை ஒபாமாவும் சந்தித்திருக்கலாம். ஏனென் றால், அமெரிக்கர்கள் ‘வித்தியாசமான தோற்றம்’ கொண்டவர்களின் வித்தி யாசத்தை, அவ்வளவு தூரத்துக்குத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை என்பதற்கு, அவ்வப்போது நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களே சாட்சி. இந்த சமகாலத் தன்மைதான் இந்த ‘மனிதனை’, புத்தகம் வெளியாகி 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை வாசிக்க வைக்கிறது. நேசம் கொள்ள வைக்கிறது!

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x