

சித்தரிப்பு என்பதுதான் தற்காலத் தமிழ். 'சித்திரி'என்ற வினைச்சொல்தான் அடிப்படை வடிவம். இந்த வினைச் சொல்லிலிருந்து உருவான பெயர்ச் சொல்தான் சித்திரிப்பு. காலப்போக்கில் இந்தச் சொற்கள் மாற்றமடைந்து 'சித்தரி', 'சித்தரிப்பு'என்று நிலைபெற்றுவிட்டன.
நிலைபெற்றுவிட்ட சொற்களை மாற்றி, அவற்றின் தொடக்க கால வடிவத்தை மறுபடியும் நிலைப்படுத்த முயல்வது மொழி வளர்ச்சியில் சாத்தியமில்லாத செயல். மாற்றம் என்பது மொழி வளர்ச்சியில் மிக முக்கியமானது.
தவறான பயன்பாடும் காலப்போக்கில் நிலைபெற்றுவிடுவது தவிர்க்க முடியாதது. எனவே, 'சித்தரி', 'சித்தரிப்பு'ஆகிய சொல் வடிவங்களைப் பயன்படுத்துவதுதான் இயல்பான ஒன்றாக இருக்கும்.