Last Updated : 06 May, 2017 10:15 AM

 

Published : 06 May 2017 10:15 AM
Last Updated : 06 May 2017 10:15 AM

பிரபஞ்ச ராமாயணம்

இந்திய இதிகாசங்களில் மகாபாரதம் கவர்ந்த அளவுக்கு ராமாயணம் நவீன எழுத்தாளர்களைக் கவரவில்லை. புதுமைப்பித்தன் முதல் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன்வரையிலும் மகாபாரதத்தின் மீதான படைப்பூக்கம் கொண்ட எதிர்வினைகள் இங்கே இருக்கின்றன. ஆனால், ராமாயணத்தின் மீதான படைப்பாளிகளின் எதிர்வினை என்பது அந்த அளவுக்கு இல்லை. இந்தப் பின்னணியில் பிரபஞ்சனின் ‘ராமாயணம்’ முக்கியத்துவம் பெற்றுத் தனித்து நிற்கிறது.

இதற்கு முன்பு மகாபாரதம் குறித்த நூலை எழுதிய பிரபஞ்சன் தற்போது ராமாயணத்தை எழுதியிருக்கிறார். மகாபாரதத்தை விமர்சனபூர்வமான அலசலுக்கு உட்படுத்திய பிரபஞ்சன் ராமாயணத்தை ரசனைபூர்வமான அணுகுமுறைக்கு உட்படுத்துகிறார். மகாபாரதக் கதையின் அடர்த்தியும் பல்வகைப் பாத்திரங்களும் படைப்பாளிகளைக் கவரக்கூடியவை. பாத்திரங்களின் பரிமாணங்களும் அகச் சிக்கல்களும் வியக்கவைக்கும் கதை முடிச்சுகளும் தீவிரமான சிந்தனைக்கும் அலசலுக்கும் இயல்பாகவே வழி வகுப்பவை.

இந்தப் பன்முகத்தன்மையையும் அடர்த்தியையும் அகச் சிக்கல்களையும் உள்வாங்கித் தனது பிரதிபலிப்பை நிகழ்த்திய பிரபஞ்சன் ராமாயணத்தை முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் அணுகுகிறார். விமர்சனப் பார்வையையோ அறிவுபூர்வமான அலசலையோ செலுத்தாமல் ரசனையுடனும் நெகிழ்ச்சியுடனும் அணுகுகிறார். மகாபாரதம் அவருடைய சிந்தனையையும் ராமாயணம் அவருடைய ரசனையையும் தூண்டியிருக்கின்றன என்று சொல்லலாம்.

ராமாயணம் லட்சிய நிலைகளின் கதை. கிட்டத்தட்ட அனைத்துப் பாத்திரங்களுமே தத்தமது நிலைகளில் ஆதரிசமாக விளங்குகிறார்கள். அரசன், அரசி, கணவன், மனைவி, தந்தை, மகன், நண்பன், சேவகன், குரு, சிஷ்யன் ஆகிய நிலைகளில் ஒவ்வொன்றும் தனது உச்சத்தைத் தொடுவதை ராமாயணத்தில் காணலாம். எதிரியும்கூட ஆதரிச நிலையைப் பெற்றிருப்பதை உணரலாம். ராமாயணத்தின் ஆதார சுருதியான இந்த லட்சிய நிலையை நன்கு உள்வாங்கிக்கொண்ட பிரபஞ்சன், இந்த ஆதரிசங்களின் ஊடாட்டமாக விளங்கும் காவியத்தின் தன்மைக்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிடுகிறார்.

மகாபாரதக் கதையின் காலப் பின்னணி, விழுமியங்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் சமகாலப் பார்வையுடன் மகாபாரத நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் கேள்விக்கு உட்படுத்தும் பிரபஞ்சன் ராமாயணத்தை அதன் எல்லைக்குள் நின்று ரசிக்கிறார். தன் ரசனையின் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

வேடன் வால்மீகியாக மாறுவதிலிருந்து தொடங்கி ராமாயணக் கதையைக் கூறும் பிரபஞ்சன், ஒவ்வொரு கட்டத்தையும் நிறுத்தி நிதானமாக ரசித்துச் சொல்லியபடி செல்கிறார். ஒவ்வொரு கட்டத்தையும் வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார். கம்பருக்கு முன்பே ராமாயணத்தின் கணிசமான பகுதியை எழுதியிருக்கும் குலசேகர ஆழ்வாரின் பாடல்களிலிருந்தும் ராமாயணச் சித்தரிப்பை எடுத்தாள்கிறார். பல்வேறு பகுதிகளில் புழங்கிவரும் ராமாயணக் கதைகளையும் பொருத்தமான இடங்களில் சேர்த்துச் சொல்கிறார். அகலிகைக் கதைக்கு உள்ள பல்வேறு வடிவங்களையும் சொல்கிறார். இவர் தரும் விவரங்கள் அனைத்தும் சேர்ந்து ராமாயண வாசிப்பைப் பன்முகத்தன்மை கொண்டதாக ஆக்குகின்றன.

பொதுவாகவே செவ்வியல் பிரதிகளைப் படிப்பவர்களுக்குப் பல ஐயங்களும் கேள்விகளும் எழக்கூடும். உதாரணமாக, சத்தியவிரதம் காக்கும் அரிச்சந்திரனுக்குக் கடவுள்கள் ஏன் இவ்வளவு சோதனைகளைத் தருகிறார்கள்? ஒரு பாவமும் அறியாத நளன் ஏன் இத்தனை துன்பங்களுக்கு ஆளாகிறான்? இதுபோன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவால் மட்டும் விடைகண்டுவிட முடியாது. கதையின் அமைதியை அதன் பின்னணியோடும் அது பிரதிபலிக்கும் விழுமியங்களோடும் காவியச் சுவையோடும் உள்வாங்கிக் |கொள்பவர்களாலேயே இவற்றின் மெய்ப்பொருள் அறிய முடியும்.

காவியத்தில் இடம்பெறும் ஒரு நிகழ்வைக் காவியம் குறித்த ஆழமான புரிந்துணர்வுடன் காவிய எல்லைக்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறை தேவை. விமர்சனப் பார்வையும்கூட இப்படிப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் அமையும்போதுதான் நியாயமான விமர்சனமாக அமையும். அப்படி அமைந்ததால்தான் புதுமைப்பித்தன் ‘சாப விமோசனம்’ கதையில் ராமனைக் கேள்விக்கு உட்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.

காவியத் தன்மையை உள்வாங்கிய வாசிப்பின் வலிமையைப் பிரபஞ்சனின் ஒவ்வொரு சொல்லிலும் காணலாம். பல களம் கண்ட வீரன் தசரதனை விட்டுவிட்டு 16 வயதே ஆன ராமனை விஸ்வாமித்திரர் தனது யாகத்தைப் பாதுகாக்க அழைத்துச் சென்றது ஏன் என்னும் கேள்விக்குப் பொருத்தமான பதிலை அவரால் தர முடிவதற்குக் காரணம் காவியத்துடன் அவருக்கு இருக்கும் நெருக்கம்தான். ராமாயணக் காவியத்தில் அவருக்கு இருக்கும் மனத்தோய்வும் ராமாயணத்தின் பல்வேறு பிரதிகளைக் கற்றுணர்ந்த அனுபவமும் சேர்ந்திருப்பதால்தான் அவரால் ராமனைக் காட்டுக்கு அனுப்பும் நிகழ்வை தசரதன், கைகேயி, மந்தரை, கோசலை, ராமன், லட்சுமணன், பரதன், சுமத்திரா ஆகியோரின் கண்ணோட்டங்களில் பார்க்க முடிகிறது.

சாதாரணமாக ராமாயணத்தைப் படிப்பவர்களின் கண்களிலும் கருத்திலும் படாமல் போகக்கூடிய பல அம்சங்களைத் துல்லியமாகவும் காரண-காரிய விவரிப்புடனும் சொல்வது இதனால்தான் அவருக்குச் சாத்தியமாகிறது. இவையெல்லாம் சாத்தியமாவதால்தான் இந்தப் புத்தகம் வெறும் ராமாயணக் கதையாக மட்டுமல்லாமல் ராமாயணத்தைப் பல்வேறு கோணங்களுடன் உணர்த்தும் பிரதியாக மாறுகிறது.

ராமாயணக் கதையை அதன் உள்ளார்ந்த அமைதி மாறாமல் சொல்லும் பிரபஞ்சன், காவியத்திலோ மொழியிலோ தனக்கிருக்கும் புலமையை முன்னிறுத்தாமல் தன் ரசனையை அழகும் எளிமையும் மிகுந்த மொழியில் படையலாக்குகிறார். வாசகருடன் நட்பார்ந்த முறையில் பேசுவதுபோன்ற அவரது நடை வாசிப்பதற்குச் சுகமான அனுபவத்தைத் தருகிறது. சின்னச் சின்ன வாக்கியங்கள், உரையாடல் தொனி, அழகு ததும்பும் வர்ணனைகள் ஆகியவற்றுடன் மகாகவிகளின் கவித்துவ தரிசனங்களை சினேகமான முறையில் தருகிறார்.

கதையை மட்டுமல்லாமல் கதைப் போக்கின் சூட்சுமங்களையும் காவியச் சுவையையும் ராமாயணத்தை எழுதிய கவிகளின் மேன்மையையும் உணர்த்தும் இந்தப் பதிவைப் பிரபஞ்சன் விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. ராமாயணத்தின் தொடக்கக் கட்டங்களை மிக நிதானமாகச் சொல்லிச் செல்லும் பிரபஞ்சன், அதன் பிற்பகுதிகளை அவசரமாகக் கடந்துவிடுகிறார். அயோத்தியா காண்டம் அளவுக்குப் பிற காண்டங்கள் பிரபஞ்சனின் பார்வையில் விரிவுபெறவில்லை. மார்க்ஸிய, பெரியாரியவாதியாக அறியப்படும் பிரபஞ்சன் ராமாயண காவியத்தில் கொண்டிருக்கும் மனத்தோய்வை இந்த நூல் அழகாகக் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை என்பது காவிய நுகர்ச்சிக்குத் தடையல்ல என்பதை நிரூபிக்கும் இந்தப் பிரதியைப் பிரபஞ்சன் விரிவுபடுத்தி எழுதினால் அது தமிழுக்கு அவர் செய்யும் இன்னொரு முக்கியமான பங்களிப்பாக இருக்கும்.

ராமாயணம்
பிரபஞ்சன்
டிஸ்கவரி புக் பேலஸ்,
சென்னை-78. விலை: ரூ. 300
044-65157525

-அரவிந்தன்,
தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x