

வழக்கமாகத் தொழிலதிபர்களைப் பற்றி எழுதப்படும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சம்பிரதாயமானவையாகவும் சுவாரசியமில்லாமலும் இருக்கும். இந்த வாழ்க்கை வரலாற்று நூலின் பேசுபொருளான டி.டி.கே. வாசுவும் சரி இந்த நூலை எழுதிய முத்தையாவும் சரி குறையாத சுவாரசியத்தை நமக்கு அளிக்கக்கூடியவர்கள்.
திருவள்ளூர் தட்டை கிருஷ்ணமாசாரி (டிடிகே) பொருளாதாரம், சட்டம் படித்தவர், தொழிலதிபர், கலா ரசிகர், சமூக சேவகர், படிப்பாளி என்ற பன்முகங்களைப் பெற்றவர். (அவருடைய தந்தை டி.டி. ரங்காசாரி, ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர்.) டிடிகே ராஜலட்சுமி (ராஜம்மாள்) தம்பதிக்கு 4 மகன்கள். நரசிம்மன், ராகவன், ரங்கசாமி, வாசுதேவன். வாசுவின் 2 வயதிலேயே தாயார் ராஜம்மாள் காலமானார். மனைவி இறந்த பிறகு கிருஷ்ணமாசாரி 4 குழந்தைகளையும், தனது தாயார் பட்டம்மாவின் பொறுப்பில் விட்டு விட்டு தொழில் வியாபாரத்தைக் கவனிப்பதிலேயே மனதைச் செலுத்தினார். தாய் தந்தை இருவரின் அரவணைப்பும் இல்லாமலேயே வளர்ந்த நரசிம்மன், ரங்கசாமி, வாசு மூவரும் தந்தையின் தொழில் நிறுவனப் பொறுப்புகளைக் கவனித்தனர். ராகவன் ராணுவத்தில் சேர்ந்தார்.
வாசு இளைஞராக இருந்தபோது மேற்கத்திய இசையின்பால் ஈர்ப்பு அதிகம். ஹாலிவுட் நடிகர் எரால் ஃப்ளைன், பிராங்க் காப்ரா ஆகியோரின் விசிறி. எரால் ஃபிளைனுக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். ஹாலிவுட் திரைப்பட ரசிகர்களுக்காக ‘யூ அண்ட் த மூவீஸ்’ என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தினார். அது 6 அணா விலையில் 5,000 பிரதிகள் விற்றுச் சாதனை படைத்தது. ‘மாசுமி கார்ப்ப ரேஷன்’ என்ற திரைப்பட விநியோக நிறுவனத் தையும் தொடங்கினார். டெல்லிக்குத் தூதரக வேலையில் வந்த ஸ்டினா ஆஸ்ட்லேண்ட் என்ப வருடன் அறிமுகமாகி, காதலித்து 1963-ல் ஸ்டாக் ஹோம் நகரில் கிறிஸ்தவ தேவாலயத்தில்திருமணம் செய்துகொண்டார். அது அப்பாவுக்குத் தெரியாது.
டி.டி. வாசு, குடும்ப நிறுவனத்துக்காகவும் நண்பர் களுக்காகவும் ஓடி அலைந்து எவ்வளவோ பணி களைச் செய்தவர். சென்னை மியூசிக் அகாடமி, மாம்பலம் ஹெல்த் சென்டர், பாலவிகார் என்ற மூன்று நிறுவனங்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய அக்கறை, உழைப்பு போன்றவை அளப்பரியவை. உதவி கேட்டுவந்தவர்களை வெறுங்கையுடன் அனுப்ப மனமில்லாமல் தாட்சண்யப் பட்டதாலேயே வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர். முத்தையா எழுதியுள்ள இந்த வரலாற்று நூல், அவரை வெறுமனே புகழாமல் அவருடைய குறைகளையும் தவறுகளையும் ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய நூல்.
இல்லையென்று சொல்ல விரும்பாத டி.டி. வாசு
டிடி வாசு: த மேன் ஹூ குட் நெவர் சே ‘நோ’
எஸ். முத்தையா
ரேன்பார் பப்ளிஷர்ஸ், சென்னை-17.