இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம்
Updated on
2 min read

கலீல் ஜிப்ரானின் நெருங்கிய நண்பரும் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவருமான மிகேய்ல் நைமி எழுதிய ‘மிர்தாதின் புத்தகம்’ குறித்து ஓஷோ கூறிய புகழாரம் இது: “உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”

ஊழிப் பெருவெள்ளம் வழிந்த பின்னர் நோவாவின் கலம் நின்ற இடமாகக் கருதப்படும் துறவியர் மடத்தின் தலைவனான மிர்தாதுக்கும் அங்குள்ள சீடர்களுக்கும் நடைபெறும் உரையாடல்கள்தான் இந்த நூல். காதல், பணிவு, கடன் கொடுத்தல் மற்றும் வாங்குதல், பாவமன்னிப்பு, வயோதிகம், வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிய ஆன்மிக வழிகாட்டு நூல் இது. நீட்சேயின் ‘ஜராதுஷ்டிரா இவ்வாறு கூறினான்’ என்ற நூலை இத்துடன் ஒப்பிட முடியும். வேதாகமத்தில் வரும் நோவாவின் கதையின் பின்னணியில் இந்த நூல் படைக்கப்பட்டிருந்தாலும் இது எந்த சமயத்தோடும் தொடர்புடைய நூல் அல்ல.

இயற்கையிலிருந்தும் பிரபஞ்சத்தின் பெரு விருப்பத்திலிருந்தும் தான், தனது தனி ஆசைகள், தனி லட்சியங்களைப் படைத்துக்கொண்டு வாழ் வோடு போராடும் மனித மனங்களை நோக்கிப் பேசும் புத்தகம் இது என்றும் சொல்லலாம். மனிதர் கள் தம்முள் கடவுளை அறிவதைப் பேரியற்கையின் ஒரு பகுதியாக விழிப்புடன் மாற்றுவதற்கான அறைகூவலை மிர்தாத் விடுக்கிறார்.

பிரபஞ்சத்தின் விருப்பத்தை மிர்தாத், பேரியற்கையின் விருப்பம் என்கிறார். பேரியற்கையின் விருப்பத்திலிருந்து மனிதர்களின் விருப்பம் தனிப்பட்டதாக இருக்கும்போதுதான் அவர்கள் தோல்விகளால் துயரடைய நேர்கிறது என்கிறார். அந்தத் தனிவிருப்பம் எல்லாமே மனிதர்களைக் காயப்படுத்தும் என்றும் அவர்களது கோப்பை நஞ்சால் வழியும் என்றும் எச்சரிக்கிறார். நம்மைக் குறித்த சர்வவல்லமையின் விருப்பத்தை நம்மால் தெரிந்துகொள்ள முடியாதபோது தனிவிருப்பத்தைக் கொள்ளாமல் இருப்பது நலம் என்றும் எச்சரிக்கிறார். நன்மை- தீமை, அழகு-அழகின்மை, ஆண்-பெண், வாழ்வு-மரணம் என்ற எல்லா இருமைகளையும் நமது விழிப்புணர்வால் அழிக்க முடியும் என்பதுதான் மிர்தாத் சொல்லும் செய்தி.

சகல உயிர்கள், இயற்கை மற்றும் பொருட்கள் மீது நமது விருப்பத்தை அகற்றிய நேசமும் பிரபஞ்சம் நம் மீது வைத்திருக்கும் விருப்பத்தின் மீதான விசுவாசத்தையும் கோருகிறது மிர்தாதின் புத்தகம். அந்தப் புரிதல் வந்துவிட்டால், சர்வ வல்லமை கொண்ட விருப்பம் நமது தாதியாகச் செயல்படும் என்கிறார்.

“தோல்வி தவிர்த்து வெற்றி கொள்ள, சர்வவல்ல விருப்பத்தை ஒப்புக்கொள்ளும்படி நான் வேண்டுகிறேன். அதன் மர்மப் பையிலிருந்து அதை, முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொள்ளுங்கள். நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்; நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்க ளுக்குச் சேர வேண்டிய நியாய மான பங்கு என்று ஏற்றுக்கொள் ளுங்கள்; அவற்றின் மதிப்பை யும் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உமது விருப்பத்தின் மறைந்திருக்கும் வழிகளை நீங்கள் புரிந்துகொள்ளும்போது உங்களுடைய சர்வ வல்லமை கொண்ட விருப்பம் எது என்று புரிந்துவிடும்” என்று 20-ம் அத்தியாயத்தில் ஒரு பத்தி வருகிறது.

இந்தப் புத்தகத்தை வைத்திருப்பதோ, வாசிக்க வாய்ப்பு கிடைப்பதோகூடப் பெரியதல்ல; மிர்தாதின் வாசகங்களைக் கேட்பதற்கு அறிவொடுங்கிய மவுனம் வேண்டும் என்று சொல்லப்படுகிறது. சரியான சந்தர்ப்பத்தில் கிடைத்தால் ஒருவரது வாழ்க்கையையே மாற்றிவிடக்கூடிய புத்தகம் என்று உலகம் முழுவதும் புகழப்படுகிறது.

தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ உள்ளிட்ட அரிய படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் கவிஞர் புவியரசு இப்புத்தகத்தை மொழிபெயர்த்திருக்கிறார். கவிஞர் புவியரசின் அரிய கொடை இந்நூல்.

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம்
மிர்தாதின் புத்தகம்
மிகெய்ல் நைமி
தமிழில்: கவிஞர் புவியரசு
விலை: ரூ. 170.
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
சென்னை-17
தொடர்புக்கு: 044- 24332682

-ஷங்கர், தொடர்புக்கு
sankararamasubramanian.p@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in