

பிரபல இந்திய - ஆங்கில எழுத் தாளர் சல்மான் ருஷ்டியின் தன்னம் பிக்கை அசாத்தியமானது என்று தோன்றுகிறது. அவர் அமெரிக்கப் பத் திரிகை ஒன்றில் எழுதுகிறார்: ‘ஆங்கிலத் தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களின் படைப்புக்கள், அதிகாரபூர்வமாக ஏற் றுக்கொள்ளப்பட்ட 16 இந்திய மொழி களில் கிடைக்கிற தற்கால இலக்கியங் களைக் காட்டிலும் மிகவும் உயர் வானவை. உலக இலக்கியங்களோடு ஒப்புவைத்துப் பேசக்கூடிய இந்திய ஆக்கங்கள், முதல் தடவையாக இப் போதுதான் இந்த இந்திய - ஆங்கில எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன!'
நான் 1989-ல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் அறக்கட்டளைச் சொற் பொழிவு ஆற்றச் சென்றிருந்தேன். நான் பேசி முடித்ததும் ஓர் இளைஞர் (அந்தக் காலகட்டத்தில்) எழுந்து நின்று சொன்னார்: ‘நீங்கள் சங்கம், சங்கமென்று முழங்குகிறீர்கள். ஆனால், உண்மையான தமிழ்க் கவிதை எப்போது பிறந்தது தெரியுமா?'
‘‘எப்போது?’’ என்றேன் நான்.
‘‘1977, ஜூன் மாதம், 18-ம் தேதி!’’
‘‘அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?’’
‘‘என் முதல் கவிதை அப்போதுதானே பிரசுரமாகியது..!’’
அந்தத் தமிழ்க் கவிஞருக்கு இருந்த தன்னம்பிக்கை ருஷ்டிக்கும் இருப்பது பற்றி மகிழ்ச்சிதான். இதற்கு இந்தியர் களாகிய நாம் மெக்காலே பிரபுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ருஷ்டி எதிர்பார்க்கக் கூடும். மெக்காலேதான் இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க வேண்டும் என்று 1835-ல் ஒரு குறிப்பு எழுதினார். பைபிளில் வருகிறது: ‘‘இறைவன் சொன்னார்: ஒளி உண் டாகட்டும் என்று. உடனே ஒளி வந்தது. ‘அது போல், மெக்காலே பிரபு சொன் னார்: ‘இந்தியாவில் ஆங்கிலப் படிப்பு உண்டாகட்டும்’ என்று.”
அதன் விளைவு: 146 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நள்ளிரவு குழந்தைகள்' (ருஷ்டி எழுதிய ‘Midnight Children') பிறந்தது.
இந்திய - ஆங்கில எழுத்தாளர்களிலே நான் மிகவும் போற்றும் எழுத்தாளர் ருஷ்டி. புக்கர் பரிசு பெற்ற நாவல்களிலேயே மிகச் சிறந்த புக்கர் படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவருடைய ‘நள்ளிரவு குழந்தைகள்', உயர்ந்த கலை ஆக்கம் என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
ஆனால், சமீப காலமாக எழுதப் பட்டுவரும் இந்திய - ஆங்கிலப் படைப்புக்கள்தான் முதல் தடவையாக, இந்திய இலக்கியத்தை உலக இலக்கிய வரைபடத்தில் இடம்பெறச் செய்திருக்கின்றன என்று கூற அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் என் கேள்வி. ஏளனக் குரலில் அவர் குறிப்பிடும் ‘இந்திய வட்டார மொழி’களில் உள்ள (‘Vernacular languages') மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப் படுவனவற்றை எல்லாம் படித்த பிறகு இந்த முடிவுக்கு வந்தாரா அல்லது ‘குறுகிய எல்லைக்குள் புழங்கும் குழு சார்ந்த மொழிகளில்' (அவர் வார்த்தைகளில்) என்ன உயர்ந்த இலக்கியம் இருந்துவிட முடியும் என்று அவர் நினைக்கிறாரா? தெரியவில்லை.
இந்திய - ஆங்கில எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது, அவர் கள் இந்திய சமூகத்தைப் பற்றி எழுதுவது, அவர்கள் தங்கள் வாசகர் களாக பாவித்துக்கொண்ட இந்தியரல் லாத மேற்கத்தியர்களையும் அல்லது, இந்தியர்களாக இருந்தும் சிந்தனை யிலும், கலாச்சார பாவனைகளிலும் மேற்கத்திய நகல்களாக மாறிவிட்டவர் களுக்குத்தான். காலனி ஆட்சியின் போது, இந்தியாவைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சாம்ராஜ்ய நாவல்கள் போலல்லாமல், தங்களுடைய பிரத்யேக இந்திய அடையாளத்தை அவர்கள் (ஆங்கில) மொழியிலேயே அவர்களுக்கு உணர்த்தும் பதிலடி படைப்புகள் என்று (‘talking back to the colonizers in their own language'- Edward Said) இவ்வெழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டாலும், இவற்றின் அடையாளம், உலகமயமாகிவிட்ட நகர்சார்ந்த - எம்.டி.வி- கொக்ககோலா - பூர்ஷ்வா - மேட்டிமை ( elitism) கலாசார அடையாளம்தான்.
இந்திய மொழிகளில் இந்தியச் சமூகம் சார்ந்த சிறந்த நாவல்களின் தரத்துக்கு ஈடாக ஓர் இந்திய - ஆங்கில எழுத் தாளனால் இந்திய சமூகம் சார்ந்த ஒரு படைப்பை ஆங்கிலத்தில் தந்து விட முடியாது. காரணம், மொழி கலா சாரம், ஒரு சமூகக் கட்டமைப்பின் ஓர் இன் றியமையாத அம்சம், பாரம்பரிய மரபு நினைவுத் தொடரின் உள் அடையாளம். இந்தியாவின் முக்கிய மொழிகளில் பிரசுரமாகியிருக்கக் கூடிய மிகச் சிறந்த நாவல்களின் தரத்துக்கு ஈடாக, இந்தியர்களாலோ, அல்லது காலனிய ஆங்கிலேயர்களாலோ இந்தியச் சூழ் நிலையைப் பின்னணியாகக் கொண்டு ஆங்கிலத்திலோ நாவல்கள் எழுதப் படவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
இந்திய மொழிகளில் எழுதும் படைப் பாளி, தான் எழுதுவது அவன் மொழி அறியாத மற்றைய மொழிக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்ற மன அவஸ்தையில் கஷ்டப்பட மாட்டான். இதுவே அவன் எழுத்தின் சுதந்திரம். மனத் தடை ஏதுமில்லாமல் அவனால் எழுத முடி கிறது. இந்திய - ஆங்கில எழுத்தாளர் களில் பலருக்கு, இந்தியாவைப் பற்றி எழுதும்போது, அதை மேல்நாட்டு வாசகனின் கவனத்தை ஈர்ப்பது எப்படி என்பதுதான் பெரிய அக்கறை. மேல்நாட்டு வாசகனுக்கு, அந்நியமான, விநோதமான இந்தியாவுக்கே மட்டும் உரிய (exotic) விஷயங்களைச் சொல்ல வந்த கதையில் புகுத்தி, வாசகனின் கவனத்தைப் பெற வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. கதையின் கலை அம்சம் இதனால் பாதிக்கப் படுவதில் ஆச்சரியமில்லை.
பிரிட்டனிலோ, அமெரிக்காவிலோ இருக்கும் இரண்டாம் தலைமுறையினர் எழுதும் நாவல்கள், முன் தலைமுறை யினரிடம் இருந்து வித்தியாசமாக இருந் தாலும், முன் தலைமுறையினரால் அவர்கள் பிரக்ஞையில் ஏற்றப்பட்டிருக் கும், கலாசாரச் சுமைகளில் இருந்து (Cultural cargo) முற்றிலும் விடு பட்டதை எடுத்துக் காட்டுவனவாக அமையவில்லை.
ஸோயின்கா, சின்னுவா அச்சபே (Chinua Achebe) போன்ற ஆப்பிரிக்க (நைஜீரியா) எழுத்தாளர்கள் ஆங்கிலத் தில் எழுதினாலும், அவர்கள் எழுத்தைப் படிக்கும்போது, நைஜீரிய இனக் குழுக்களுடன் நம்மால் நேரடியாக உறவுகொண்டு உரையாடுவதுபோல் தோன்றுகிறது. அவர்கள் எழுத்தை ஆங்கிலத்தில் படிக்கிறோம் என்று நமக்குத் தோன்றுவதே இல்லை. ஆனால் இந்திய - ஆங்கில நாவல்களில் நம்மைக் கவர்வது, ஆசிரியர்களின் ஆங்கில நடைதான். இதுவே அந்நாவல் முழு கலை வடிவத்தைப் பெறுவதற்குத் தடையாகவும் இருக்கலாம்.
ஆனால், ஒரே இந்திய - ஆங்கில எழுத்தாளர் இதற்கு விதிவிலக்காக இருந்தார். அவர்தான் ஆர்.கே.நாராயண். காரணம், அவர் எழுதியவை ஆங் கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்கள்!
- பயணிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com