குன்றாத செயலூக்கம்!

குன்றாத செயலூக்கம்!
Updated on
2 min read

'உலராது பெருகும்

உலகின் விழிநீர்த் துடைக்க

ஒரு விரல் தேவை'

- என்றெழுதிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தேங்கி நிற்காமல் இயங்கிவரும் செயலூக்கமிக்க படைப்பாளி.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் செ.இரா. நடராசன் - வள்ளியம்மாள் தம்பதி யினரின் மகனாக 1933-ல் (செப்டம்பர்-28) பிறந்த செகதீசன், விடிவெள்ளி, மலையமான் என பல புனைபெயர்களில் எழுதத் தொடங்கி, ஈரோடு தமிழன்பனாக நிலைபெற்றார்.

சங்க இலக்கியம் தொடங்கி, சமகாலம் இலக்கியம் வரை ஆழ்ந்த வாசிப்பு, உலக இலக்கியங்களின் மீதான தீராத காதல், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் (1954 முதல் 1964 வரை) பழகிய அனுபவம் போன்றவை ஈரோடு தமிழன்பன் படைப்புத்தளத்தில் தொடர்ந்து செயல்படக் காரணிகளாக அமைந்தன. கவிஞராக அறியப்பட்டிருந்தாலும், சிறுகதை, புதினம், உரைநடை, ஆய்வுரை, சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் மொழிபெயர்ப்பு என பல தளங்களிலும் தன் எழுத்துப் பணியை உத்வேகத்தோடு செய்துகொண்டேயிருப்பவர்.

பள்ளி மாணவனாக இருந்தபோதே 'சுய சிந்தனை' என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தியவர். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் வெளிவந்திருந்தாலும், முதல் கவிதை நூல் 1968-ல் 'கொடி காத்த குமரன்' வில்லுப்பாட்டு நூலாக வந்தது.

இவரது 'நெஞ்சின் நிழல்கள்' புதினத்தை வாசித்த பாரதிதாசன், "ஆகா… எவ்வளவு நல்லா எழுதியிருக்கே. இதை நூலாக வெளியிடணும்” என்று, சென்னை பாரி நிலையத்தில் கொடுக்க, அது 1965-ல் நூலாக வெளியானது.

1985-ல் வெளியான 'சூரியப் பிறைகள்' ஹைக்கூ கவிதை நூலில், ஈரோடு தமிழன்பன் எழுதியிருக்கும் மிக நீண்ட முன்னுரை, ஹைக்கூ பற்றிய புரிதலைப் பலருக்கும் தந்தது. அந்நூலிலுள்ள ஓவியங்களையும் கவிஞரே வரைந்திருப்பார்.

ஹைக்கூ மட்டுமல்ல, சென்ரியு, லிமரிக், புதுக்கவிதையில் பயண இலக்கியம், முழுக்க வினாக்களாலேயே கவிதை, குறள் வெண்பாவில் பேரப்பிள்ளைத் தமிழ், கஜல் பாடல்கள் என புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந் துள்ளார்.

50 க்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், 25-க்கும் மேற்பட்ட சிறுகதை, உரைநடை, ஆய்வு நூல்கள் என்று தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் இவரின் படைப்புகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதைகள் இந்தி, வங்கம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரின் 'வணக்கம் வள்ளுவ' (2000) நூலுக்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

தமிழில் கவிதை இயக்கமாய் மலர்ந்த வானம்பாடிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் ஈரோடு தமிழன்பன், தனது 83-வது வயதிலும் எழுதிகொண்டிருக்கிறார். அவரது பல் லாயிரம் கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக் கப்பட்ட 1,000 கவிதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ், தமிழர், தமிழ்ச் சமுதாயம் என்கிற வட்டத்தோடு நின்றுவிடாமல், உலகெங்குமுள்ள மனிதர்களை நேயத் தோடு தழுவிக்கொள்வது ஈரோடு தமிழன்பனின் சிறப்பு.

ஈரோடு தமிழன்பன் ஆயிரம் | தொகுப்பாசிரியர்: தி. அமிர்தகணேசன் | விலை: ரூ.700 | வெளியீடு: ஒரு துளிக் கவிதை | புதுச்சேரி 605008 தொடர்புக்கு: 9443360007

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in