Last Updated : 01 Apr, 2017 10:46 AM

 

Published : 01 Apr 2017 10:46 AM
Last Updated : 01 Apr 2017 10:46 AM

நல் வரவு: சொட்டாங்கல்

சொற்களில் ஒளிந்திருக்கும் மெளனம் க.அம்சப்ரியா

வார்த்தைகளால் எழுதப்பட்டவைதான் கவிதை என்றாலும், வாசித்த கணத்தில் நமக்குள் ஒரு ஜீவனுள்ள பொருளாய்த் தங்கிவிடுவதே நல்ல கவிதை. கவிஞராக மட்டுமில்லாமல், நல்ல கவிதை ரசனையாளராகவும் இருக்கிற க. அம்சப்ரியா,

வாசிப்பில் தன்னை அப்படியே உள்ளிழுத்துக்கொண்ட கவிதைகள் தந்த உணர்வை சற்றும் சிந்தாமல், சிறுசிறு கட்டுரை வடிவில் நமக்குள்ளும் கடத்தியுள்ளார். சொற்களுக்குள் அமிழ்ந்திருக்கும் அறுபடாத மவுனங்களை, தன் மயிலிறகு வரிகளால் காட்சிப்படுத்தியுள்ள விதம் ரசிக்க வைக்கிறது.

-------------------------------

தலையங்கங்களின் சங்கமம்

பத்திரிகை ஆசிரியரும் லோக் ஜன சக்தியின் தேசியப் பொதுச் செயலாளருமான பெ. சந்திரகேசன் எழுதிய 52 தலையங்கங்களின் தொகுப்பிது. முல்லைப் பெரியாறு அணை, கல்விக்கான உரிமைச் சட்டம், தனியார் துறையில் இட ஒதுக்கீடு ஏன், இந்திய நாட்டில் சாதிகள் ஒழியுமா, அல்லது தமிழ்நாட்டிலாவது சாதிகள் அழியுமா, உள்ளிட்ட கட்டுரைகள் உள்ளடகத்தில் மட்டுமல்ல; அவை வெளிப்படுத்தும் சமூக அக்கறையினாலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தலையங்கங்களுக்கு இடையிடையே ‘வண்ணப் புகைப்படங்களை’ இணைக்காமல், பின்னிணைப்பாகச் சேர்த்திருந்தால் வாசிப்புக்கு இடையூறின்றி இருந்திருக்கும்.

-------------------------------

அருணகிரிநாதர் பாடிய அருட்தலங்கள் - ஆர்.சி.சம்பத்

எந்த விதமான வாகன வசதிகளும் இல்லாத காலத்திலேயே நடைப்பயணமாகவே பல ஊர்களின் திருத்தலங்களுக்கும் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள தெய்வங்களைப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஊர்களைப் பற்றியும் ஆலயங்களைப் பற்றியும் எழுதப்பட்ட நூல்கள் நம்மிடையே அதிகம் இல்லை.

இந்தக் குறையைப் போக்குகிறது இந்நூல். திருக்கழுக்குன்றத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவருக்கும் மலை வழியில் கோயில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இது போன்ற ஏராளமான ஆன்மிகத் தகவல்கள் பொதிந்த தொகுப்பாக இந்நூல் மிளிர்கிறது.

-------------------------------

சொட்டாங்கல் - எஸ்.அர்ஷியா

படைப்பிலக்கியத் தளத்தில் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அர்ஷியாவின் ஆறாவது நாவல் இது. வாசகர்களை மிரட்டும் வார்த்தைப் பம்மாத்துகள் ஏதுமற்று, சரசரவெனக் காட்சிகளின் பின்புலங்களோடு விவரித்துச் செல்லும் மொழிநடை அர்ஷியாவுக்கு வெகு இயல்பாய் வாய்த்திருக்கிறது. மதுரையின் பரந்த நிலப்பரப்பையும், அதில் வாழும் பலவகைப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அப்படியே கோட்டோவியம் போல் வரைந்து காட்டியுள்ளார். பெருநகரங்களின் கவனிக்கப்படாத இருண்ட பக்கங்களின் மீது ஒளியைப் பாய்ச்சுவதில், ‘சொட்டாங்கல்’ ஒரு கல்லையும் தவறவிடவில்லை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x