Published : 17 Sep 2016 10:00 AM
Last Updated : 17 Sep 2016 10:00 AM

தொடுகறி: அஞ்சாவது ஒரு கதையும் எழுதியிருப்பேன் - அசோகமித்திரன்

* அசோகமித்திரன் கடந்த மாதத்தில் நான்கு கதைகளை எழுதியிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் அவ்வளவு சுகமில்லை. மூச்சுத் திணறல் படுத்திவைக்கும் சூழலிலும் முடிந்தவரை எழுதுகிறார் என்பதுதான் விசேஷம். “நாலு பத்திரிகைகள்லேர்ந்து ஒரே சமயத்துல கேட்டாங்க. எழுதினேன். ஒருவேளை அஞ்சாவதா ஒரு பத்திரிகைலேர்ந்து கேட்டா அஞ்சாவது ஒரு கதையும் எழுதிருப்பேனோ என்னவோ” என்கிறார் தனக்கே உரிய பாணியில்!

* இந்தியாவின் ஒரே ‘பயண இலக்கியக் கொண்டாட்டம்' என்று கருதப்படும் ‘குமாயூன் இலக்கிய விழா' அடுத்த மாதம் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடக்கிறது. எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், சூழலியலாளர்கள் எனப் பல துறைசார் நிபுணர்கள் பங்குபெறும் இந்த 5 நாள் திருவிழா உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ளது.

* 'க்ரைம் கதைகளின் ராணி' என்று போற்றப்பட்ட அகதா கிறிஸ்டியின் 126-வது பிறந்த நாளை முன்னிட்டு, இங்கிலாந்து அஞ்சல் நிறுவனமான ‘ராயல் மெயில்’ 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா? இருக்கிறது. இந்த 6 அஞ்சல் தலைகளும் அகதாவின் 6 நாவல்களை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டாம்ப்பு களில் சில ‘க்ளூ'க்கள் இருக்கும். அதைக் கொண்டு குறிப்பிட்ட நாவலில் வரும் புதிர்களை விடுவிக்க வேண்டும். ஆனால், இந்த ‘க்ளூ'க்களைச் சாதாரணக் கண்களால் பார்க்க முடியாது. புற ஊதா ஒளி பொருந்திய கண்ணாடிகளைக் கொண்டு நாம் அவற்றைப் பார்க்கலாம்.

* குடிக்கு எப்படி அடிமையாகி, பின் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் எனும் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதுகிறார் லக்ஷ்மி மணிவண்ணன். குடியிலிருந்து விடுபட்ட பின்னர் படைப்பாற்றல் எப்படி மேம்பட்டிருக்கிறது என்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறார்.

* வசந்த மாளிகையில் வாணிஸ்ரீ எனும் படிமத்தை வைத்து இசை எழுதிய சமீபத்திய கவிதையும் அதைப் பகடிசெய்து மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதையும் ஃபேஸ்புக்கில் பொறிகளைக் கிளப்பியிருக்கின்றன.

* இந்த ஆண்டுக்கான ‘மேன் புக்கர் ப்ரைஸ்' விருதுக்கு 6 புத்தகங்கள் இறுதிப் பட்டியலில் இருக்கின்றன. அதில் மூன்று புத்தகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. டேவிட் சாலே எழுதிய ‘ஆல் தட் மேன் இஸ்' எனும் புத்தகம், பல்வேறு கலாச்சாரங்கள், நாடுகளில் ‘ஆண்தன்மை' எப்படி உருப்பெற்றிருக்கிறது என்பதைக் கூறுகிறது. மதலின் தியன் எழுதிய ‘டு நாட் ஸே வி ஹேவ் நத்திங்' எனும் புத்தகம் சீனாவில் நடைபெற்ற செவ்வியல் இசைப் புரட்சி குறித்துப் பேசுகிறது. பால் பியட்டி எழுதிய ‘தி செல்அவுட்' எனும் புத்தகம், அமெரிக்க வாழ்க்கைப் பற்றிய அங்கதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x