

திருமண நிகழ்வுகளில் புத்தகங்களை வழங்குவதென்பதை ஓர் இயக்கமாகவே நடத்திக்கொண்டிருக்கிறது பாரதி புத்தகாலயம். திருமண நிகழ்வுகளுக்கென்றே மலிவு விலையில் சிறியதும் பெரியதுமாக இருப துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங் களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக் கிறது. சமூகம், உடல்நலம், பண்பாடு, இலக் கியம், அரசியல், தத்துவம் சார்ந்த தலைப்புகள் இவற்றில் அடங்கும். இவற்றில் பெருமளவு கொடுக்கப்பட்ட புத்தகங்கள் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுடையவை. ‘நமக்கான குடும்பம்’, ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ போன்ற புத்தகங்கள் லட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சு.பொ. அகத்தியலிங்கம், பேரா. ச. மாடசாமி, எஸ்.ஏ. பெருமாள் போன்றோரின் நூல்களும் பல்லாயிரக் கணக்கில் அச்சிடப் பட்டுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கிய மாக, சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமண நிகழ்வுகளில் புத்தக விற்பனையையும் ஓர் இயக்கமாகவே பாரதி புத்தகாலயம் முன்னெடுத்துக் கொண்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்!
சுஜாதா விருதுகளுக்கு முந்துங்கள்!
இந்த ஆண்டுக்கான சுஜாதா விருதுக்கு விண்ணப்பிப்பதற் கான அறிவிப்பை சமீபத்தில் உயிர்மை பதிப்பகமும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வெளியிட்டிருக்கின்றன. சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய நான்கு பிரிவுகளில் விண்ணப்பிக் கலாம். இதுதவிர, சிற்றிதழ் பிரிவிலும் இணைய பிரிவிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: மார்ச் 25, 2017. சுஜாதா பிறந்த நாளான மே, 3-ம் தேதி விருதுகள் வழங்கப்படும். மேலதிகத் தகவல்களுக்குத் தொடர்புகொள்ள: 044-24993448.
மேன் புக்கர் சர்வதேசப் பரிசுப் பட்டியல்
உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்று ‘மேன் புக்கர் பரிசு’. அதன் தொடர்ச்சியாக 2004-ல் நிறுவப்பட்டது ‘மேன் புக்கர் சர்வதேச விருது’. பிற மொழிகளில் எழுதி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் புத்தகங்களை உள்ளடக்கிய பரிசு இது. 2017-ம் ஆண்டுக்கான விருது நெடும் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேலின் பிரபல எழுத்தாளரான அமோஸ் ஓஸ் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய ‘யூதாஸ்’ நாவல் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
ஓட்டோமான் பேரரசைப் பற்றி அல்பேனிய எழுத்தாளர் இஸ்மாய்ல் காதரே எழுதிய நாவலும் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. ஆசிய நாடுகளில் சீனாவைத் தவிர வேறெந்த நாட்டு எழுத்தாளர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை. 13 பேர் அடங்கிய பட்டியலில் மூன்று பெண் எழுத்தாளர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், 13 மொழிபெயர்ப்பாளர்களில் மொத்தம் 7 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறு பேர் அடங்கிய இறுதிக் குறும்பட்டியல் ஏப்ரல் 20 அன்றும், விருதுக்குரிய நாவல் தேர்வு ஜூன் 14 அன்றும் அறிவிக்கப்படும்.