

இந்தியயியல் துறையில் (Indological studies) மிகச் சிறந்த வல்லுநரான பேராசிரியர் ஏ.எல். பாஷம், 1984-ல் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் விருந்து புலப் பேராசிரியராக இருந்தார். அவர் எழுதிய பிரசித்திப் பெற்ற புத்தகம் ‘The wonder that was India’. அங்கு நான் பேச இருந்த கூட்டத்துக்கு அவர் தலைமையேற்க இருப்பதாகச் சொன்னார்கள். இது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.
நான் பேச இருந்த தலைப்பு, ‘Bridal mysticism in Tamil literature’. அதாவது, தமிழ்ப் பக்தி இலக்கியங்களில் வரும் நாயக - நாயகி பாவம் பற்றி.
சங்க இலக்கியங்களில் வரும் அகத்துறைப் பாடல்கள், ஆழ்வார் பாடல்களில் ஆன்மிகப் பக்திப் பாடல்களாயின. சங்க அகத்திணையில் வரும் ‘அவன்’, ‘அவள்’ மானுடத் தலை வனையும், மானுடத் தலைவியையும் குறிப்பன. ஆனால், பக்திப் பாடல்களில் ‘அவன்’, இறைவன். ‘அவள்’ பாடுகின்ற பக்திக் கவிஞன். அகத்திணை இலக்கணப்படி (தொல்காப்பியம்) ‘அவன்’, ‘அவள்’என்றே குறிப்பிட வேண்டுமே தவிர, அவர்கள் பெயர்கள் சுட்டிப் பாடக் கூடாது. இது, சங்க காலத்து மானிடத் தலைவன், பக்தி இயக்கத்தின்போது பிரபஞ்சத் தலைவனாகச் சுலபமாக மாறுவதற்கு அடிகோலிற்று. சங்க அகப்பாடல் துறைகளே ஆழ்வார்களின் காதல் பாடல்களுக்கும் துறைகளாயின. இதுதான் தமிழின் மகத்தான இலக்கியத் தொடர்ச்சி.
நம்மாழ்வார் பெண் நிலையில் இருந்து பாடும்போது பராங்குச நாயகி ஆனார். திருமங்கை மன்னன் ‘பரகாலநாயகி’ஆனார். இதைப் பற்றி தான் நான் பேசுவதாக இருந்தேன்.
கருத்தரங்கு தொடங்குவதற்கு முன்பாக, அந்தப் பல்கலைக்கழக சமஸ்கிருதப் பேராசிரி யருக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். இந்தியர், திருப்பதியைச் சார்ந்த தமிழ் - தெலுங்கு வைணவர். அவர் பெயர் அதை அறிவித்தது. ‘‘கூட்டம் முடிந்ததும் உங்களை என் வீட்டுக்கு மதிய உணவுக்கு அழைத்துச் செல்கிறேன். கருத்தரங்கு ஒருங்கிணைப் பாளரிடமும் சொல்லிவிட்டேன்’’ என்றார் அவர்.
பேராசிரியர் பாஷத்துக்கு அப்போது 75 வயது. அவரே என்னிடம் கூறிய தகவல். அவர் ‘Bridal mysticism’ பற்றி மிகச் சுருக்கமாக அறிமுக உரை ஆற்றினார். கிறிஸ்துவ மரபிலும் இது பற்றிய சிந்தனை உண்டு என்று கூறினார். என்னையும் அறிமுகப்படுத்திவிட்டு உட்கார்ந்தார்.
நான் பேசத் தொடங்கினேன். பாஷம் தலைமை யில் பேசுகிறேன் என்ற மகிழ்ச்சி என்னை மிகுந்த உற்சாகத்துடன் பேசவைத்தது. என்னை மறந்து நான் பேசிக்கொண்டு இருக்கும்போது, ஒரு விநோத சத்தம் கேட்டது. என் பிரமையாகவும் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று. நான் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன்.
கூட்டத்தில் அமர்ந்திருந்த சிலர் முகத்தில் புன்னகை தெரிந்தது. நான் நகைச்சுவையாக எதுவும் கூறவில்லையே. ஏன் புன்னகைக் கிறார்கள்? கேட்டுக்கொண்டு இருந்த சத்தத்தில் ஸ்வரங்கள் மாறின.
நான் என் அருகே அமர்ந்திருந்த பேராசிரியர் பாஷத்தைப் பார்த்தேன்.
கண்கள் மூடியிருந்தன. குறட்டை கேட்டது. கூட்டத்தில் ஏன் சிலர் புன்னகை செய்தார்கள் என்று எனக்குப் புரிந்தது.
என் உற்சாகம் சிறிது குறைந்தாலும் நான் தொடர்ந்து பேசினேன். ‘திருமாலை’ப் பற்றிய பேச்சு என்பதால் பாஷம் ‘அறிதுயி’லில் ஆழ்ந்திருக்கலாம் என்பது என் நம்பிக்கை.
நான் பேசி முடித்த அக்கணமே அவர் கண்கள் திறந்தன. Perfect timing!
‘‘கேள்வி கேட்க விரும்புவர்கள் கேட்கலாம். நான் முதலில் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்’’ என்றார் புன்னகையுடன்.
‘‘ஷ்யூர்…’’ என்றேன் நான்.
‘‘ஆழ்வார்களில் ஆண்கள் பெண் நிலையில் நின்று பாடுகிறார்கள். ஆண்டாள் ஏன் ஆண் நிலையில் நின்று பாடவில்லை?’’ என்றார் அவர்.
நிச்சயமாக, ‘அறிதுயில்’தான் என்று எனக்குப் பட்டது. ஆனால், குறட்டைதான் நெருடியது!
‘‘இறைவன் ஒருவன்தான் பரமாத்மா. ஆண், ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண் என்கிற சமய மரபு!’’ என்றேன்.
‘‘அல்லது, ஆண்டாளின் தகப்பனாரே மற்றைய ஆழ்வார்கள் போல, பெண் நிலையில் பாடியிருக்கலாம் அல்லவா? கதைகள் யாவும் பின்னால் வந்திருக்கக்கூடும்” என்றார் பாஷம்.
‘‘இருக்கலாம். குரு பரம்பரைக் கதைகள்தாம் எங்கள் வரலாறு. கற்பனைக் கலந்த வரலாற்று உண்மைகள்தாம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றேன் நான்.
பாஷம் புன்னகை செய்துகொண்டே ‘‘True…True…’’ என்றார்.
கூட்டம் முடிந்ததும், சமஸ்கிருதப் பேராசிரியர் என்னிடம் வந்து, ‘‘போகலாமா?’’ என்று கேட்டார்.
அவர் என் பேச்சைப் பற்றி எதுவும் சொல்ல வில்லை. அவர் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாரா என்பதே எனக்குச் சந்தேகமாகயிருந்தது. என்னை அவர் வீட்டுக்குச் சாப்பிட அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர் கூட்டத்துக்கு வந்திருக்கலாம்.
போகும் போது, கனடிய நாட்டுக் குளிர்கால அவதிகளைப் பற்றி விரிவாகச் சொல்லிக்கொண்டு வந்தார். நான் அவரிடம் அப்போது போலந்து வார்ஸாவில் இருந்து டொரண்டோவுக்குச் சென்றிருக்கின்றேன் என்பதைக் கூறவில்லை. அவர் சொல்வதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். நான் இந்தியாவில் இருந்து வந்தவன் என்பதை நம்ப வேண்டுமென்ற உறுதி அவர் பேச்சில் தெரிந்தது.
அவர் வீட்டுக்குச் சென்று, காரை கராஜில் பார்க் செய்துவிட்டு, உள்ளே நுழைந்ததும் ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் இருந்த 18 வயது இளைஞன் அவரைப் பார்த்து ‘‘ஹாய் டாட்…’’ என்றான். என்னை அவன் எதிர்பார்க்கவில்லை என்று தோன்றிற்று. ‘‘ஹாய்…’’ என்றான் என்னிடமும்.
‘‘மாமாடா, மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்கார். நமஸ்காரம் பண்ணு..’’ என்றார் அவர் தமிழில்.
அவன் ஒன்றும் புரியாமல் சங்கடத்துடன் கைக் கூப்பிவிட்டு, உடனே மாடிக்குப் போய்விட்டான். அவர் மனைவி உற்சாகத்துடன் வந்து கைக் கூப்பிக்கொண்டே ‘‘மெட்ராஸ்லேந்து நம்மவர் ஒருவர் பேச வந்திருக்கார். சாப்பிட அழைச்சிண்டு வரேன்னு அவர் சொன்னார். ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்க்க…’’ என்றார்.
அப்போது எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. நண்பகலில் இறைவனை அவர் ஏன் எழுப்ப வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.
ஊதுபத்தி மணம்.
அப்போதுதான் புரிந்தது. சென்னையில் இருந்து ‘வந்திருந்ததாக’ நம்பப்பட்ட எனக் காகத் தென்னிந்தியச் சூழ்நிலையை உரு வாக்கி, நம் பண்பாடு எப்படிக் கனடாவில் காப்பாற்றப்பட்டுவருகிறது என்பதைக் காட்டும் முயற்சி என்று!
இதைத் தொடர்ந்து அவர் மனைவி என்னிடம் குதூகலத்துடன் சொன்னார்: ‘‘நாங்க கொடுத்து வச்சவா! இன்னிக்கு இவரோட அப்பா திதி. இப்படி மெட்ராஸ்லேர்ந்து உங்க மாதிரி ஒரு பரம வைஷ்ணவர்னு வருவார்னு… நாங்க எதிர் பார்க்கவே இல்ல. எல்லாம் பாலாஜி கிருபை!’’
நான் ஒன்றும் சொல்லவில்லை. எனக்குப் பசித்தது!
- பயணங்கள் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com