

சாலை விபத்து என்ற ஒன்றே பழங்குடி மக்கள் அறியாதது. அவர்கள் உலகில் வாகன இரைச்சலோ, நெருக்கடியோ, டிராஃபிக் ஜாமோ எதுவுமே கிடையாது. உண்மையில் அவர்கள் சாலைகளைக் கண்டு பயப்படுகிறார்கள். காட்டுக்குள் சாலை அமைக்கபட்டதுதான், தங்கள் அழிவின் முதற்படி எனக் கருதுகிறார்கள் அவர்கள். வானில் பறவைகளைப் போலப் பறப்பதையும் ஆற்றில் மீன்களைப் போல நீந்துவதையும் பற்றிய கதைகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால், சாலைகளைப் பற்றியோ, வாகனங்களைப் பற்றியோ கதைகள் ஏதும் அவர்களிடத்தில் இல்லை.
வனக் காவலர்கள் காட்டுக்குள் ஜீப்பில் வருவதைக் கண்ட அவர்கள், அதை ’இரும்பு மிருகம்’ என்றே கருதினார்கள். ஜீப்பில் ஏறப் பயப்பட்டார்கள். வாகனங்களில் அடிபட்டு மான்கள் செத்துக் கிடப்பதை காணும்போது ஜீப்பை ரத்தம் குடிக்கும் மிருகமாகவே நினைத்தார்கள்.
இடப்பெயர்வு என்பது இன்று சகல மனிதர்களையும் வாழ்விடத்தில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டது. பிழைப்புத் தேடி காட்டை விட்டு வெளியேறிய பழங்குடிகள் நகரங்களை வெறுப்பதற்கு முக்கிய காரணம் வாகனங்களே.
இரும்பு, மனிதர்கள் கண்ணில் படாமல் பூமியில் புதையுண்டு கிடந்தது. மனிதன் அதைத் தேடிக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று பழங்குடிகள் நம்புகிறார்கள்.
பிஹாரில் இரும்புத் தாது கண்டுபிடிக்கபட்டது பற்றிய கதைகள் இருக்கின்றன. அதில் ஒரு கதையில், இரும்பை பூமியில் புதைத்து வைத்த கடவுள், அதை மனிதனுக்கு அடையாளம் காட்ட மறுக்கிறது. அவன் கடவுளிடம் இரும்பைக் கொண்டு உழுகருவிகள் செய்யப் போவதாக சொல்லியே கடவுளிடம் இருந்து இரும்பை வாங்குகிறான். அப்போது கடவுள் அவனிடத்தில் ’’இரும்பைக் கையாளுவது அவ்வளவு எளிதில்லை!’’ என்று எச்சரிக்கை செய்கிறார். அப்போது மனிதன் ’’இரும்பால் ஒரு ஆபத்துமே வராது!’’ என உறுதி தருகிறான்.
இரும்பு மனித வாழ்க்கையைப் பெரிதும் மேம்படுத்தியிருக்கிறது. ஆனால், அதைக் கொண்டுதான் ஆயுதங்களும் வானகங்களும் தயாரிக்கப்படுகின்றன. அவைத் தவறான கைகளில் சேரும்போது விளைவுகள் படுமோசமாகி விடுகின்றன.
ஜெர்மனியில் இருந்து வந்திருந்த தமிழ் குடும்பம் ஒன்று சென்னையில் சாலையைக் கடக்க முயன்றபோது, கார் மோதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதாக செய்தி ஒன்றை வாசித்தேன். பாவம் அவர்கள். தங்கள் ஊரை நினைத்துக்கொண்டு சென்னையில் சாலையைக் கடந்திருக்கிறார்கள்.
எத்தனை எத்தனையோ விபத்துகள், உயிரிழப்புகள் வந்தாலும் மாநகரில் சாலை விதிகளை எவரும் பின்பற்றுவதே இல்லை. வாகனங்களின் குறுக்கே புகுவது. சிக்னலை மீறுவது, நடைபாதைவாசிகளை உரசிக்கொண்டுப் போவது, கண்ட இடத்திலும் சாலையைக் கடப்பது, வாகனத்தை அப்படி அப்படியே நிறுத்திவிட்டுப் போய்விடுவது என மாநகரம் போக்குவரத்து பிரச்சினைகளால் அல்லாடுகிறது. ஆனால், இதை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதே இல்லை.
திருமண மண்டபங்கள் உள்ள சாலைகளில் வாகனங்களை அப்படி அப்படியே நிறுத்திவிட்டுப் போய்விடுகிறார்கள். எண்பதடி சாலையில் நாற்பது அடி சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. கேட்பாரே கிடையாது. பள்ளிகள் உள்ள சாலைகளில் ஒவ்வொரு நாளும் விபத்துகள் நடக்கின்றன. யாரோ ஒரு மாணவன் அடிபடுகிறான். குறிப்பாக சைக்கிளில் வரும் மாணவர்கள் பாடு பெரும் திண்டாட்டம். ஆனால், இவற்றை யாரும் கண்டுகொள்வதேயில்லை.
சாலை விபத்துகளைப் பற்றி பேசும் நாம் சாலை விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்க எந்த வழிமுறைகளையும் கையாள்வது இல்லை. அமெரிக்க பயணத்தின்போது எங்கே சென்றாலும் கறாரான சாலை விதிகள் கடைபிடிக்கப்படுவதையும், மீறுபவர்கள் உடனடியாக டிக்கெட் வழங்கபட்டு அபராதம் செலுத்தபட வேண்டியதையும் கண்டிருக்கிறேன். சென்னையில் சாலைக்கு சாலை பைக்கில் வருபவர்களை நிறுத்தி வசூல்வேட்டை செய்வதைத் தவிர, காவலர்களின் வேறு எந்த நடவடிக்கையையும் கண்ட தில்லை.
வாடகை கார் ஒட்டுபவர் ஒருமுறை என்னிடம் சொன்னார்: சாலையில் எந்த பக்கம் போகப் போகிறார்கள்? எங்கே திரும்புவார்கள் என எதுவும் தெரிவதில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு கார் ஒட்டுவது போலவே இருக்கிறது. கார் ஓட்டத் தெரிந்தவர்களில் பாதிப் பேர் அரைகுறையாக அறிந்தவர்கள். சாலை விதிகளைப் பற்றித் தெரியாதவர்கள். லைசென்ஸ் கிடைப்பது மிக எளிதாக இருப்பதும் ஒரு காரணம். நாம் சரியாக கார் ஓட்டினால் மட்டும் போதாது. அருகில் வருபவரும் எதிரில் கடப்பவரும் சரியாக கார் ஓட்ட வேண்டும். அந்த உணர்வே பலருக்கும் கிடையாது. வாகனங்கள் பெருகிவிட்டன. பதற்றமும் குழப்பமும் அவசரமுமாகவே வண்டி ஓட்டுகிறார்கள். ஒவ்வொரு நாள் வீடு போய் சேருவதற்கு முன்பும் உயிர் போய் உயிர் திரும்பிவிடுகிறது.
அவர் சொன்னது நிஜம். வாகன நெருக்கடி அதிகமாகிவிட்டதுதான். ஆனால், அதைக் காரணம் காட்டி சாலை விதிகளை மதிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? கறாராக சட்டத்தை அமுல்படுத்தி சாலையைச் சீர்செய்ய வேண்டியது அரசின் கடமை இல்லையா? ஒவ்வொரு நாளையும் பயத்தோடு தான் தொடங்க வேண்டுமா?
பிஹார் மாநிலத்தில் உள்ள பழங்குடிகளிடம் ஒரு கதை இருக்கிறது. பறவைகள் ஒருநாள் ஒன்றுகூடி, ’’நாம் யாருக்கு மிகவும் பயப்பட வேண்டும்?’’ என்று தங்களுக்குள் உரையாடின.
அதில் ஒரு புறா சொன்னது: ’’திறமையான வேட்டைகாரர்களைல் கண்டுதான் நாம் பயப்பட வேண்டும். அவர்கள் துப்பாக்கி குறிவைத்தால் நம்மால் தப்பவே முடியாது!’’
அதைக் கேட்ட இன்னொரு புறா சொன்னது: ‘’இல்லை! அதைவிட நாம் பயப்பட வேண்டியது கத்துக்குட்டி வேட்டைக்காரனிடம்தான். அவனுக்கு வேட்டையாடத் தெரியாது. ஆனால், பெரிய துப்பாக்கியோடு வந்திருப்பான். அவனால் ஒருபோதும் சரியாக இலக்கை அடிக்க முடியாது. கண்டபடி சுடுவான். அதனால் ஏதோவொரு பறவை கொல்லப்படக்கூடும். துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாத வேட்டைக்காரன்தான் ஆபத்தானவன். அவனை கண்டே நாம் பயப்பட வேண்டும்!’’
அதை அங்கிருந்த அத்தனை பறவைகளும் ஒப்புக்கொண்டன.
அரைகுறைகள் எப்போதும் ஆபத்தானவை என்று பழங்குடிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். சாலையில் இன்று வாகனங்களில் செல்பவர்களுக்கும் இக்கதையே பாடம் என்று தோன்றுகிறது.
கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
இணையவாசல்: >இந்திய நாட்டுப்புறக்கதைகளை வாசிக்க