Published : 02 Aug 2016 12:20 pm

Updated : 14 Jun 2017 16:56 pm

 

Published : 02 Aug 2016 12:20 PM
Last Updated : 14 Jun 2017 04:56 PM

கடவுளின் நாக்கு 6: கண் திறவுங்கள்

6

ஒரு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆதங்கத்துடன் சொன்னார்:

``உடல்உறுப்புகளில் கண்களுக்குத் தான் அதிகம் வேலை கொடுக்கிறோம். ஆனால், கண்களைப் பராமரிப்பதில் யாரும் அக்கறை காட்டுவதே இல்லை. கண்கள் புத்துணர்வு கொள்ள எளிய பயிற்சிகள் இருக்கின்றன. அதை யாரும் பின்பற்றுவதில்லை. குளிர்ச் சாதன அறையின் செயற்கை வெளிச்சத்தை மட்டுமே பார்த்துப் பழகிய கண்களுக் குச் சூரிய வெளிச்சமே படுவதில்லை. வானத்தை அண்ணாந்துப் பார்க்கும் பழக்கமே இல்லை. நட்சத்திரங்கள் என்பது சினிமாவோடு தொடர்புடைய தாக மாறிவிட்டது கவலையளிக்கிறது. இன்றைய இளம்தலைமுறையினருக்கு போதுமான உறக்கம் கிடையாது. தூக்கம் கெடுவதுதான் மனம் மற்றும் உடல்நலம் கெடுவதற்கான அடிப்படை பிரச்சினை.”


அவரது ஆதங்கத்தைப் புரிந்து கொண்டது போலச் சொன்னேன்;

``உண்மை டாக்டர். மனிதர்களுக்குக் கண்கள் எப்படி வந்தது என்பதற்குக் கூடக் கதை இருக்கிறது...” என்றேன்.

குழந்தையைப் போல ஆர்வத்துடன், ``என்ன கதை..?” என்று கேட்டார்.

``இந்தோனேசியாவின் ஜாவா தீவில் வழங்கப்படும் கதை இது. கடவுளால் படைக்கப்பட்டபோது மனிதனுக்குக் கண்கள் கிடையாது. கண்கள் இல் லாமலே ஆணும் பெண்ணும் கூடி வாழ்ந் தார்கள். பார்வையில்லாமல் வாழும் போது பலமுறை ஆற்றில், மலையில், தடுமாறி விழுந்து இறந்து போனார் கள். அவர்களின் பரிதாப நிலை யைக் கண்ட கடவுள் மனிதனுக் குக் கண்களை உருவாக்கி தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது சேமிப்பில் கண்கள் இல்லை.

ஆகவே அவர் ஆந்தை யைப் பார்த்து, ``நீ பகலில் கண்களைப் பயன்படுத்து வதே இல்லையே, உன் கண்களை மனிதர்களுக்குத் தருவாயா?” எனக் கேட்டார்.

ஆந்தை, ``முடியாது, என் அழகே கண்கள்தான்” என்று மறுத்துவிட்டது.

பாம்பைப் பார்த்து கடவுள் கேட்டார்.

``உன் கண்கள் அழகானவை. நீயாவது மனிதனுக்குக் கண்ணைத் தருவாயா..?”

உடனே பாம்பு சொன்னது;

``கண் இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுவார்கள். ஒருபோதும் நான் கண்ணை இழக்க மாட்டேன்.”

இப்படி அவர் முயல், யானை, புலி என ஒவ்வொரு விலங்காகக் கண் களைத் தானம் செய்யும்படி கேட்டார். ஒரு விலங்கும் தருவதற்கு தயாராக இல்லை.

நாமே கண்களை உருவாக்கி வைத்து விட வேண்டியது என முடிவு செய்து, எதைக் கொண்டு உருவாக்குவது என யோசித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு முத்துச்சிப்பித் தன்னைக் கடலில் யாரும் மதிப்பதே இல்லை என்று புகார் சொல்வதற்காகக் கடவுளைக் காண வந்திருந்தது. அதன் அழகை கண்ட கடவுள் முத்துச்சிப்பியிடம் கேட்டார்;

``உன் முத்தைக் கொண்டு மனிதனுக் குக் கண்ணை உருவாக்கப் போகிறேன். நீ அதற்குச் சம்மதிக்கிறாயா..?” முத்து சிப்பிச் சொன்னது.

``என்னால் முத்தைப் பிரிந்து இருக் கவே முடியாது.”

அப்படியானால் உன்னையும் சேர்த்தே உருமாற்றிவிடுகிறேன் என்ற படியே முத்தை இரண்டாகப் பிளந்து, மனிதனின் முகத்தில் பதித்து, அதில் தன் விரலால் கருவட்டம் வரைந்து கண்களை உருவாக்கினார். சிப்பியை இரண்டு இமைகளாக்கினார். அப் படித்தான் மனிதனுக்குக் கண்கள் உருவாக்கபட்டன.

சிப்பி கண்களாக உருமாறிய தால்தான் கண் இமைகள் தானே திறந்து திறந்து மூடிக் கொள்கின்றன. முத்துச்சிப்பி கடலில் இருந்த காரணத்தால் தான் கண்ணீரும் உப்புக் கரிக்கிறது என்கிறது அந்தக் கதை.”

டாக்டர் கதையைக் கேட்டு உற்சாகமாகிச் சொன்னார்;

``கடவுள் கேட்டால் கூட எதுவும் எளிதாகக் கிடைத்துவிடாது போலும். கண்ணீர் உப்பு கரிப்பதற்கு இப்படி ஒரு காரணம் சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது.”

கண்கள்

பற்றி இப்படி எவ் வளவோ எழுதப்பட்டிருக்கின்றன. சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்றாவது கண் என்ற கருத்தாக்கம் நம்மிடம் உள்ளது. கண் திறப்பதுதான் சிற்பத்தின் உச்சம். ஓவியங்களில் வரையப்பட்ட விதவிதமான கண்களைப் பற்றி ‘தி ஐ இன் ஆர்ட்’ (The Eye in Art) என்றொரு சிறந்த தொகுப்பு நூலை ‘பப்ளிகேஷன்ஸ் டிவிசன்’ வெளியிட்டுள்ளது.

இயக்குநர் சாந்தாராமின் சிறந்த திரைப்படம் ‘தோ ஆங்கே பாரா ஹாத்’. இப்படம் 1957-ல் வெளியானது. .

‘தோ ஆங்கே பாரா ஹாத்’ என்றால் ‘இரு கண்களும் பன்னிரண்டு கைகளும்’ என்று பொருள். சிறை அதிகாரி ஒருவர் கொடூரமான ஆறு கொலைக் குற்றவாளிகளைத் தன்னுடைய பொறுப்பில் விடுவித்து, அவர்களைச் சீர்திருத்துவதே படத்தின் கதை. தமிழில் எம்.ஜி.ஆர் நடித்து ‘பல்லாண்டு வாழ்க’ என்ற படமாக வெளிவந்துள்ளது. படத்தில் ஆதினாத் எனும் சிறை அதிகாரி கதாபாத்திரத்தில் சாந்தாராம் நடித்திருப்பார். சீர்திருத்தம் செய்ய அழைத்துப் போன கைதிகள் அவரது பிடியிலிருந்து தப்பிப் போகும்போது, அவர்களைத் தடுத்து நிறுத்துவது சாந்தாராமின் கருணைமிக்கக் கண்களே. குற்றவாளிகள் அந்தக் கண்களுக்குப் பயந்து திரும்பிவிடுகிறார்கள்.

‘தவறு செய்தவன் தன்னை நேசிப்பவர்களின் கண்களை நேர் கொள்ளமுடியாமல் தடுமாறுவான்’ என்பதுதான் நியதி. ஒருவர் நேருக்கு நேராகக் கண்களைப் பார்த்து பேசு கிறார் எனில் அவரது மனதில் குழப் பம் இல்லை என்று புரிந்துகொள்ள லாம்.

முதன்முதலில் இத்தாலியில்தான் 1285-1289-களில் மூக்குக் கண்ணாடி வடி வமைக்கப்பட்டது என்கிறார்கள். காது களின் மேல் கண்ணாடியை மாட்டிக் கொள்ளுவதை ஸ்பெயின் நாட்டுக் கைவினைஞர்கள் 1600-ம் ஆண்டில் வழக்கத்துக்குக் கொண்டுவந்தார்கள். பட்டுத் துணியினால் ஒரு வளையம் செய்து கண்ணாடியுடன் இணைத்து காதில் மாட்டிக் கொள்ளும்படி செய் தனர்.

சீன கைவினைஞர்கள் உலோகத்தில் ஆன சிறிய எடையை இந்த ரிப்பன் களுடன் இணைத்தனர். இதனால் எடை கண்ணாடி கண்ணில் இருந்து நழுவாது. 1730 -ம் ஆண்டு எட்வர்ட் ஸ்கார்லெட் என்ற கண் மருத்துவர் இப்போது நாம் அணியும் கண்ணாடிகளில் உள்ளது போன்ற உறுதியான, பட்டியை வடிவமைத்தார்.

சீன தேசத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையின்போது தங்களது முக பாவனைகளை மறைக்க கறுப்புக் கண்ணாடிகளை அணிய ஆரம் பித்தனர். ஆரம்பத்தில் ராணுவ பயன் பாட்டுக்காகவே கூலிங்கிளாஸ்கள் தயாரிக்கபட்டன. 1930-களுக்குப் பின்பே பொதுமக்களிடம் விற்பனை செய்யப் பட்டன.

இந்தியாவில் கருவிழி நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக் காகக் காத்திருப்போர் மட்டும் 10 லட்சம் என்கிறார்கள். ஒரு ஆண்டுகு ஒரு லட்சம் வரை கருவிழிகள் தேவைப்படுகின்றன. ஆனால், கண்தானம் அவ்வளவு கிடைப்பதில்லை. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அவசியம் கண் தானம் செய்ய முன்வர வேண்டும்.

உலகை காண்பதற்கு மட்டும் கண்கள் பயன்படுவதில்லை. உள் ளத்தை வெளிப்படுத்தவும் கண்களே வாசல்களாக உள்ளன. பரிவும் அன்பும் கொண்ட கண்களை யாருக்குத்தான் பிடிக்காது! கோபமும் வெறுப்பும் கண்களில் தானே பீறிடு கின்றன. நம்மைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு பலரும் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார்களே என்றுதானே கோபம் வருகிறது.

‘கண்கள் குதிரைகளைப் போன்றவை. அதன் கடிவாளத்தைப் பிடித்து மனதே செலுத்துகிறது’ என சீனப் பழமொழி இருக்கிறது. ஆகவே, நம்மைச் சுற்றிலும் நடப்பதை கண்திறந்து பாருங்கள். எதிர்வினை செய்யுங்கள். உதவி செய்யுங்கள். அதுவே கண் பெற்றதன் உண்மைப் பயன்.

இணையவாசல்: ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளை அறிந்துகொள்ள - >https://russian-crafts.com/tales.html

- கதை பேசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com


செவ்வாய் எழுத்துஎஸ்.ராமகிருஷ்ணன்புதிய தொடர்கதை சொல்லிஇலக்கியம்கடவுளின் நாக்குஎஸ்.ரா தொடர்கண்ணின் வேலை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x