

படிக்கிற காலத்திலே பாடப் புத்தகம் தாண்டி, மத்த புத்தகங்கள் படிக்கிற சூழல் எனக்கு அமையலே. ஆனா, படிச்சு முடிச்சிட்டு சும்மா இருக்கையிலே, படிக்கிறதுக்கான மனநிலையும், தேடித் தேடிப் படிக்கிற சூழலும் எனக்கு வாய்த்தது. கைக்குக் கிடைச்ச புத்தகம் எல்லாத்தையும் படிச்சேன்.
முதல்ல நான் படிச்சுப் பிரமிச்சுப்போன புத்தகம்னா அது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’தான். அதுவொரு பிரம்மாண்டமான படைப்புங்கிறதாலேதான் அதுக்கான வாசக ஈர்ப்பு இன்னும் குறையாம இருக்கு. அதைப் படமாக்க வேண்டுமென்கிற ஆசை படிக்கிற பலருக்கும் உண்டானது. எம்.ஜி.ஆர்., கமல், மணிரத்னம் தொடங்கி பெரிய பட்டியலே உண்டு. கல்கி, போற போக்கிலே ‘ஆயிரம் யானைகள் அணிவகுத்து வந்தன’அப்படீன்னு எழுதிட்டு போயிடுறாரு. ஆனா, அதைப் படமாக்கணும்னா எவ்வளவு பெரிய சிரமமான வேலைன்னு பலரும் மலைச்சுப் போயி நின்னாங்க. இன்னிக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிற காலத்திலே கிராபிக்ஸ் மூலமா நம்மால் அந்தப் பிரம்மாண்டத்தை சாதிச்சிட முடியும். இப்பவும்கூட,‘பொன்னியின் செல்வன்’ நாடகத்தைப் பார்க்க மக்கள் வர்றாங்கங்கிறதே, அந்தப் புத்தக வாசிப்பு ருசி இன்னும் குறையலேங்கிறதுக்கு அடையாளம்தானே!
சாண்டியல்யனின் ‘கடல் புறா’, வி.ஸ. காண்டேகரின் கதைகள் எல்லாத்தையும் விரும்பிப் படிப்பேன். ரா.கி.ரங்கராஜனின் எழுத்துக்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். படிக்கணும்னு ஆரம்பிச்சிட்டா எதையாவது படிச்சிக்கிட்டேதான் இருப்பேன். சில சமயங்களில் ‘பகவத் கீதை’யை கூட எடுத்துவச்சுப் படிச்சிருக்கேன். எழுத்திலே சீனியர் ரைட்டர் எழுதினதா, ஜூனியர் ரைட்டர் எழுதியதான்னு பேதமெல்லாம் பார்க்க மாட்டேன். இருக்கிற புத்தகத்தை எடுத்துப் படிப்பேன். நல்லா இருந்தா பாராட்டுவேன். இல்லேன்னா அப்படியே வச்சிடுவேன்.
பத்திரிகைப் பணிங்கிற அடிப்படையிலே தினமும் படிச்சிக்கிட்டே இருப்பேன். சுயசரிதைப் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்களும் படிப்பேன். என்னோட விருப்பம் எப்பவுமே கதைகள்தான்.
வைரமுத்து எழுதின ‘இந்தக் குளத்தில் கல்லெறிந் தவர்கள்’ நூலில் இடம்பெற்ற மனிதர்கள் பற்றிய கவிஞரது சித்தரிப்பு என்னை வெகுவாய்க் கவர்ந்தது.
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா ஜெயகாந்தன், சுஜாதாவோட படைப்புகளைச் சொல்வேன். இப்பகூட நேரங்கிடைச்சா நான் இவங்களோட புத்தகங்களைத்தான் எடுத்துப் படிப்பேன். சுஜாதாவோட எழுத்து நடை எப்பவுமே தனியானது. அது மாடர்ன் ஸ்டைலா இருக்கும். கொஞ்சம் கிரைமும் கலந்த அவரோட கதை சொல்லும் முறை படிக்க விறுவிறுப்பா இருக்கும்.
ஜெயகாந்தன் எழுத்துக்களில் சமூகச் சித்தரிப்பும், உணர்ச்சிகரமான போராட்டங்களும் நிறைந்திருக்கும். அவரது கதைகளில் வரும் கதாமாந்தர்கள் அனைவருமே உணர்ச்சிமயமானவர்கள். அவர்களது சொல், செயல்பாடு என ஒவ்வொன்றையும் உள்ளுணர்ந்து எழுதியிருப்பார். ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலின் கதாமாந்தர்கள் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இப்போது படித்தாலும் மனதைக் கனமாக்கிவிடும் எழுத்துக்குச் சொந்தக்காரர் ஜெயகாந்தன்தான்.
வானத்தைப் போலத்தான் புத்தக வாசிப்பும் விசாலமானது. புத்தகம் படிக்கிற மனிதனால் மட்டுமே, ஊரைத் தாண்டி, மாநில எல்லைகள் தாண்டி, உலக எல்லைகளைத் தாண்டியும் வலம்வர முடியும். நாம் இதுவரை சந்திக்காத ஒரு மனிதரைப் பற்றி, நாம் பார்த்திராத ஒரு இடத்தைப் பற்றி ஒரு எழுத்தாளரின் படைப்பு வழியே அறிந்து கொள்ளும்போது, நமக்குப் புது அனுபவம் வாய்க்கிறது. புதிய பார்வையும் கிடைக்கிறது.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்