Published : 24 Jun 2016 10:27 AM
Last Updated : 24 Jun 2016 10:27 AM

மவுனத்தின் புன்னகை 24: நோய்த்தடுப்பு ஊசிகள்!

இன்று குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் ஓர் அட்டவணை போட்டுக்கொண்டு, அதன் உடலில் ஏகப்பட்ட நோய் தடுப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படு கின்றன. முன் காலத்தைவிட இன்று மனிதர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காகிவிட்டது. அதாவது, 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத் தில் குறைந்தது ஐந்து குழந்தைகள் இருக்கும். இரண்டு போய்விடும். மூன்று மிஞ்சும். எனக்குத் தெரிந்து அப்போது அம்மை குத்துவார்கள். அந்தப் பழக் கத்தை உண்டு பண்ணின எட்வர்ட் ஜென்னர் பற்றி ஒரு வகுப்பிலாவது பாடம் இருக்கும்.

அம்மை குத்தியதற்கான அடை யாளங்களைக் ‘கடிகாரங்கள்’ என்று சொல்வோம். ஆண், பெண் என்று பேதம் இல்லாமல் கையில் தோளுக்கு அடியில் சதைப் பற்றாக இருக்கும் இடத்தில் அம்மை குத்துவார்கள். அப் போது ஒரு சர்ச்சை எழுத்தது. பெண் குழந்தைகளை வாழ்நாள் முழுதும் அம்மைக் குறி தெரிய விட்டுவிடக் கூடாது என்று கையின் பின்புறத்தில் போட ஆரம்பித்தார்கள். பார்ப்போருக்கு அம்மைக் குறி தெரியாதே தவிர, அப்பெண் குழந்தை கையைத் தூக்கி னால் பளிச்சென்று தெரியும். எனக்கு இன்னும் ஒரு ‘கைக்கடிகாரம்’ லேசாகத் தெரிகிறது.

தடுப்பு ஊசிகளுக்கும் கால அட் டவணை போடலாம். அம்மை குத்தல் முக்கியத்துவம் இழந்து ‘டிரிப்பிள் ஆண்டிஜென்’ வந்தது. இது மூன்று நோய்களுக்குத் தடுப்பு ஊசி. மூன்றில் ஒன்று கக்குவான் இருமல். கக்குவான் இருமல் உண்மையில் இயற்கை தரும் சித்திரவதை. இப்போது தரும் தடுப்பு ஊசிகளால் இந்த இருமலைக் காண முடியவில்லை. அப்புறம், இளம் பிள்ளை வாதம். இதுவும் இயற்கை மனிதனுக்குத் தரும் ஒரு கடுமையான தண்டனை. பத்துப் பன்னிரண்டு வயதில் இது வந்து பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தை வாழ்நாள் முழுதும் தனக்கு இயற்கை தந்த கொடூர வரத்தை மறந்து செயல்பட முடியாது.

இந்தியாவில் மலேரியாவையும் பெரியம்மையையும் அறவே இல் லாது செய்துவிட்டோம் என்று சொல் லப்படுகிறது. எனக்கு ஒருமுறை மலேரியா, டைபாய்டு இரண்டும் ஒருசேர வந்துவிட்டன. வெளியே நல்ல வெயில். நான் இரண்டு தடிமனான கம்பளிகளுக்கு அடியில் நடுங்கிக் கொண்டிருந்தேன். மலேரியா வந்துவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. மிகப் பெரிய அரண் மனைகளில் கூட கொசு வராமல் தடுக்க முடியாது. கொசு, மலேரியா தவிர இன்னும் பல நோய்களுக்குக் காரணம். இதற்கு கொசுவலைதான் சரியான பாதுகாப்புத் தரக் கூடியது. இப்போதெல்லாம் நல்ல நைலான் கொசுவலை கிடைக்கிறது. நான்கு மூலைகளில் கட்டச் சுவரில் ஏற்கெனவே உள்ள ஆணிகள், கோட் ஸ்டாண்ட் முதலியவற்றில் கட்டிவிடலாம். ஒருமுறை, சற்று சிரமம் பாராது ஒரு பெட்டி போலக் கட்ட ஏற்பாடு செய்துவிட்டால் நிம்மதியாகத் தூங்க லாம். அந்த அனுபவமே வேறு.

வரலாற்றில் தடுப்பு மருத்துவம் என்று வந்ததில் இருந்து அதற்கு எதிர்ப்பும் இருந்திருக்கிறது. ஜென்னருக்கும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. போலியோ சொட்டு மருந்தையும் எதிர்ப்பவர்கள் உண்டு. இதெல்லாம் உடல் நலமாக இருக்கும்போது. நாம் எவ்வளவோ கட்டுரைகளும் செய்திகளையும் படித்திருந்தாலும் கடுமையான நோய் வந்துவிட்டாலோ, விபத்து நேர்ந்துவிட்டாலோ நாம் பாமரர்தான். ஒருவர் ‘அறுவை சிகிச்சைதான் ஒரே வழி’ என்றால், ‘கூடவே கூடாது…’ என்று இன்னொரு நிபுணர் அடித்துச் சொல்வார். நெருக்கடி இல்லாதபோது கிண்டல் செய்யலாம். ஆனால், ஒருவர் நினைவு தவறிக் கிடக்கும்போது பரமப் பாமரர் போல மருத்துவமனைக்குத்தான் தூக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.

சுமார், 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிசிஜி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் ராஜாஜி. ராஜாஜியின் கடைசி ஆண்டுகள் ஜவஹர்லால் நேருவை எதிர்ப்பதில் செலவிடப்பட்டன. ரஷ்ய பாணியில் நேரு ‘கம்யூனல் ஃபார்மிங்க்’ கொணர விரும்பினார். இது உணவு பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு வழி என்று அவர் நம்பினார். சிறு விவசாயிகளுக்கு இயந்திர உதவி எட்டாது. ஆனால், பல சிறிய விவசாயிகள் ஒன்றுசேர்ந்து சாகுபடி செய்தால் நவீன வசதிகள் எல்லோருக்கும் கிட்டுவதோடு, உற்பத் தியும் அதிகமாகமாகும் என்பது அவர் எதிர்பார்ப்பு.

ராஜாஜியின் எதிர்ப்பு, பொதுவுடை மையில் ஒரு விவசாயியின் சொந்த, தனிப்பட்ட அக்கறை நீர்த்துவிடும். மனித இயல்பு, தன்னுடையது என்று இருக்கும் அக்கறை… பொது வயல் மீது இருக்காது.

இந்த விவாதம் நடந்துகொண்டி ருந்தபோதுதான் சென்னைக் கடற்கரைச் சாலையில் மகாத்மா காந்தி சிலை திறக்க வந்தார், நேரு. அன்று அவர் காந்தியை மறந்துவிட்டார் என்று நினைக்கும்படி ராஜாஜி பற்றியே பேசினார். அவர் பேச்சில் ராஜாஜியின் எதிர்ப்புப் பற்றி உண்மையான வருத்தம் இருந்தது. பிசிஜி இந்தியாவில் அறி முகப்பட்டபோது ராஜாஜி அதைப் பத்திரிகைகள் மூலமாகக் கடுமையாக எதிர்த்தார்.

நேரு மறைந்தவுடன் பிசிஜி எதிர்ப்பும் குறைந்துவிட்டது. இப்போது சர்வ சகஜமாகப் பிறந்த குழந்தைகளுக்கு பிசிஜி செலுத்துகிறார்கள்.

தடுப்பு ஊசிகளினாலேயே நாம் நோய்களை வரவிடாது தடுத்துவிட முடியுமா? முன்பு பெரிய மருத்துவமனை என்றால் அது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே இருப்பதுதான். இன்று அரசு எழுத்தர்கள்கூட அங்கு போவதில்லை. என் இளைய சகோதரன் ஓர் அரசு மருத்துவமனையில்தான் ஒழுங்கான சிகிச்சை இல்லாமல் உயிரைவிட்டான். சென்னை நகரில் மட்டுமே எவ்வளவு தனியார் மருத்துவ மனைகள்! எவ்வளவு மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள்! என் இரு நண்பர்கள் திட்டமிட்டுக் குழந்தையே வேண்டாம் என்று வாழ்க்கை நடத்திவருகிறார்கள். இதைக் கேள்விப்பட்டபோது எனக்குக் கவலை ஏற்பட்டது. ஆனால், அவ்வப்போது அவர்கள் தீர்மானம் சரியானதுதானோ என்றும் தோன்றுகிறது.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பங்கள் குறைந்துவிட்டன என்று பத்திரிகைகள் புள்ளிவிவரங்கள் தருகின்றன. சாதாரண, சாமானிய மனிதர்கள் மருத்துவர்களாக முடியாத சமூகத்தில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் நடுவே ஒரு கடலே இருக்கும்.

இன்று மிகவும் தேவையாக இருப்பது நீரிழிவு நோய்க்கு ஒரு தடுப்பூசி. இதுவரை இல்லை. சென்னையில் ஒரு நூறாண்டு நாட்டு மருந்துக் கடை இருக்கிறது. தீராத நோய்க்கெல்லாம் அங்கு மருந்து உண்டு என்று சொல்வார்கள். நான் சென்றேன். கடைக்காரர் ஒரு பொடி கொடுத்து, “நீங்க எப்பவும் சாப்பிட்டு வர்ற மருந்தை நிறுத்திடாதீங்க” என்றார். ஒரு நண்பர் கூறி இன்னொரு மாற்று மருந்து வைத்தியரைத் தேடிச் சென்றேன். அவர் எல்லா விவரங்களையும் கேட்டுக்கொண்டு மருந்து தந்தார். அவரும் “தூக்கம், ரத்த அழுத்தம், நீரிழிவு உபாதைகளுக்கு நீங்க சாப்பிட்டு வர்ற (அலோபதி) மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வாங்க…” என்றார்.

- புன்னகை படரும்…

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x