Published : 12 Jan 2017 11:22 AM
Last Updated : 12 Jan 2017 11:22 AM

புத்தகங்கள் காட்சிகளைத் திறந்துவிடுகின்றன: இயக்குநர் கோகுல்

நான் இயக்குநர் ஆனதற்கே புத்தகங்கள்தான் அடிப்படை. புத்தகம் படிக்கும்போதுதான் மனதில் காட்சிகள் தோன்றும். திரைப்படங்கள் பார்த்தால்தான் படங்கள் இயக்க முடியும் என்று நிறையப் பேர் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை, புத்தகங்கள் படித்தால்தான் படம் இயக்க முடியும். புத்தகம் வாசிக்கும்போது அது நம் மனதில் உள்ள காட்சிப் புலனைத் திறந்துவிடும். பொதுவாக, இயக்குநர்களாகிய நாங்கள் ஒரு விஷயம் மனதில் தோன்றியவுடன் அதை எப்படிக் காட்சிப்படுத்துவது என்று யோசித்துக்கொண்டிருப்போம். ஆனால், புத்தகம் படிக்கும் எல்லோருமே இயல்பாகவே அந்தக் காட்சிப்படுத்தலைச் செய்துகொண்டிருப்பார்கள் மனதுக்குள்.

சின்ன வயதில் புத்தகங்கள் படித்துவிட்டு அதை மற்றவர்களுக்குக் கதையாய் சொல்வேன். அப்போதுதான் எனக்குள்ளும் ஒரு கதைசொல்லி இருப்பதைக் கண்டுகொண்டேன். இப்படி, சினிமாவுக்கு வருவதற்கு வாசிப்பே எனக்கு அடித்தளம் அமைத்தது.

ஒரு முறை தஞ்சாவூர் சென்றிருந்தபோது, தஞ்சை பெரியகோயிலைப் பார்த்துப் பிரமித்துவிட்டேன். சிற்பத்துக்குள் சிற்பம் என்று இழைத்திருப்பார்கள். இந்தப் பின்னணியில் ஒரு சிற்பியின் வாழ்க்கையை வைத்து ஒரு வரலாற்றுத் திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எனது கனவு. அதனால், வரலாற்று நூல்களையும் நாவல்களையும் தேடித் தேடிப் படிக்கிறேன். அந்த வகையில் பாலகுமாரன் எழுதிய ‘உடையார்’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும்.ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோருடைய எழுத்துக்களுக்கும் நான் விசிறி. தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஜூன் மாதத்தில் ஒரு படம் தொடங்குகிறேன். அதற்கு முன்னால் எவ்வளவு புத்தகங்கள் படிக்க முடியுமோ அவ்வளவு புத்தகங்கள் படிக்க வேண்டும் என்று புத்தகக் காட்சிக்கு வந்து புத்தகங்கள் வாங்கினேன். பாலகுமாரனின் ‘உடையார்’(6 பாகங்கள்), எஸ். ராமகிருஷ்ணனின் ‘எனது இந்தியா’, ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய இரு நாவல்கள் முதலான புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அடுத்த சில மாதங்கள் புத்தகங்கள்தான் எனது உலகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x