Published : 26 Feb 2017 10:12 AM
Last Updated : 26 Feb 2017 10:12 AM

பிப்ரவரி 27: சுஜாதா நினைவு தினம்: ஆங்கிலத்தில் சுஜாதா!

சிலரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம், கி.ராஜநாராயணன் என்று பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் விட்டுப்போகாத ஒரு பெயர்... சுஜாதா.

தமிழ் எழுத்துலகில் சுஜாதா ஒரு ‘ஆல் ரவுண்டர்’. தள்ளுவண்டியில் கடலை விற்பவர், பொட்டலம் கட்ட‌ வைத்திருக்கும் பத்திரிகைக் காகிதங்களைத் தொகுத்தால் கிடைக்கும் சுவாரஸ்யமான புத்தகம்போலத் தன் கதைகளில் சுவாரஸ்யமான மனிதர்களை நடமாட‌ வைத்தவர்.

சூரியனுக்குக் கீழும், சூரியனுக்கு மேலும் என எந்த விஷயத்தையும் எழுத்தில் கொண்டு வந்துவிடும் மாயவித்தைக் காரராக அவர் இருந்தார். தன் இறுதிக் காலம் வரை புதுப்புது எழுத்துப் பாணியை முயன்று பார்க்கும் ஒருவராகத் திகழ்ந்தார். அவரின் துள்ளலான நடையைப் பின்பற்றி, அவர் வாழ்ந்த காலத்தில் பலர் எழுதிப் பார்த்திருக்கிறார்கள். இன்று வலைப் பூக்களில் எழுதுபவர்கள் பலரது நடைக்கு உத்வேகமும் சுஜாதாவின் நடைதான்.

ஆனால், இந்தப் பெருமைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் தமிழ் தெரிந்த, அவர் எழுத்துகளைப் படித்தவர்களிடையே மட்டுமேதான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவர்களைத் தாண்டி, தமிழ் தெரியாத, ஆனால் தமிழ் இலக்கியங்கள் குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமிருக்கிற வாசகர்களுக்கு சுஜாதாவை அறிமுகப்படுத்த மணிரத்னம், ஷங்கர் படங்களை விட்டால் வேறு வழியில்லை. ஏனென்றால், சுஜாதாவின் எழுத்துகள் ஆங்கிலத்துக்குச் செல்லவில்லை.

எந்த ஒரு மொழியிலும், அதன் இலக்கிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் அடிப்படைத் தேவை. பெளலோ கெய்லோ எனும் பிரேசில் எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுதினால் அடுத்த சில மாதங்களில் அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு கிடைத்துவிடுகிறது.

ஆனால், ஆண்டாள் பாசுரத்தைக்கூடத் தனக்கே உரித்தான நடையில் ஸ்மார்ட் ஃபோன் தலைமுறைத் தமிழர்களுக்குக் கொண்டு சென்ற சுஜாதாவின் எழுத்துகள், ஆங்கில ஃபான்ட்டில் அச்சேறாதது ‘கிண்டில்’ காலத்தின் சாபம் என்பதைத் தாண்டி வேறென்ன?

மொழிபெயர்ப்பு சற்றுச் சிக்கலான பணி. மூல மொழியும் இலக்கு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. அதைவிட மிக அத்தியாவசியத் தேவை, மூல மொழியின் கலாச்சாரத்தையும் இலக்கு மொழியின் கலாச்சாரத்தையும் அறிந்திருப்பது. மூல மொழியின் கலாச்சாரத்தை நம்மால் சரியாகக் கையாள முடிந்தாலும், சிலரின் எழுத்துகளை மொழிபெயர்ப்பது மிகவும் கடினம். உதாரணம், வைக்கம் முகம்மது பஷீர், தமிழில் லா.ச.ராமாமிர்தம், கி.ராஜ நாராயணன் என்று பட்டியலிடலாம். அந்தப் பட்டியலில் விட்டுப்போகாத ஒரு பெயர்... சுஜாதா.

காரணம், அவர் கையாண்ட நெளிவு சுளிவுகள். குறிப்பாக ஒரு கதையில், ‘இறங் கினான்’ எனும் வார்த்தையை, ஒவ்வொரு எழுத்தாக மேலிருந்து கீழாக எழுதியிருப்பார். இதை ஆங்கிலத்தில் கொண்டு போவது சிரமம். அப்படியே எழுதினாலும் அது தட்டையாக அமைந்துவிடும். ‘மனைவி கிடைத்துவிட்டாள்’ என்ற‌ கதையில் வரும் காட்சி இது:

முதலிரவின்போது, நாயகி (வேணி)...

‘உங்களுக்குப் பிடிச்ச‌ புத்தகம் எது?’

‘வேணி’,

‘படிங்க!’

முதலில் அட்டைப் படத்தைப் பார்த்தான். பிரித்தான். பொருள் அடக்கத்தைத் தேடினான். முதல் அத்தியாயத்தில் ஆரம் பித்தான், ஓவியங்களை ரசித்தான், கவிதை களைத் தொட்டான், வார்த்தைகள், இடை வெளிகள், இடைச்செருகல்கள்...

இதன் பொருளை ஆங்கிலத்தில் தந்து விட முடியும். ஆனால் சுஜாதாவின் அந்தக் குறும்பு..?

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த ‘நெளிவு சுளிவுகள்’ வராது என்பதற்காக ஆங்கிலத்தில் கொண்டுபோகாமல் இருந்துவிட முடியுமா? எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று இருப்பது நல்லது இல்லையா?

அப்படியான ஒரு முயற்சிதான் விடாஸ்டா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரீலிவிங் சுஜாதா’ எனும் புத்தகம். ‘நகரம்’, ‘பார்வை’ உள்ளிட்ட ஏழு சிறுகதைகளுடன், ‘குருபிரசாதின் கடைசி தினம்’ எனும் குறுநாவலும் விமலா பாலகிருஷ்ணன் என்பவரால் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு முயற்சியை வரவேற்க வேண்டும். புத்தகத்தின் முன் அட்டையில் ‘அவரின் சிறந்த கதைகள்’ என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக, ‘தேர்ந்தெடுத்த சிறுகதைகள்’ என்று போட்டிருந்தால், பொருத்தமாக இருந் திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x