

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வழங்கப்படும் மக்கள் பாடல்கள் இவை. இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது, வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்து இலக்கியம் பெறும் செல்வங்களை உணர்ந்துகொள்ள முடிகிறது. இந்தக் கவிதைகளின் ஆதார உணர்வாகக் காதலும், விரகமும், பிரியமும் உள்ளன. இன்றைய உலகமயமாக்கல், அறிவுப் பெருக்கம், நாகரிக வளர்ச்சி, இலக்கிய மாற்றங்கள் அனைத்தையும் தாண்டி இன்றைக்கும் இக்கவிகளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது. அதுதான் நாம் இன்னும் அடைய முடியாத ஒன்றாகவும் உள்ளது என்கிறார் இதைத் தொகுத்த கவிஞர் அனார்.
அவன்:
கூட்டாகச் சேர்ந்து
கூவையிட்டுச் செல்லுகின்ற
சோட்டுக் கிளியினங்காள்
என்டே சுந்தரியாள் சேமமென்ன
அவள்:
ஈரலுக்கும் தாமரைக்கும்
இடைநடுவே நிண்டமன்னர்
மண்ணில் மடிந்த
மனக்கவலை தீருதில்லை
அவன்:
போனாயோ காகம்
எங்கட பொன்னிவண்டைக்
கண்டாயோ
என்ன சொன்னாள் காகம்
அதை ரகசியமாய் சொல்லு காகம்
அவள்:
கடலுக்கு அங்கால
காய்க்கிறதும் பூக்கிறதும்
இந்தப் பாவி வயிற்றிலொரு
காயுமில்லை பூவுமில்லை