

எனக்குத் தெரிந்த ஒரு பேராசிரியரு டன் பேசிக் கொண்டிருந்தேன். தனது மகனின் திருமணம் நடந்தது பற்றி சொல்லிக் கொண்டு வந்தபோது, ஒரு நபரைப் பற்றி குறிப்பிட்டார்:
‘‘எமகாதகன் சார். என் வாழ்க்கையில் அவனை இனி ஒரு தடவைக்கூட சந்திக்க மாட்டேன்!’’
ஒருவரைக் கண்டு இவ்வளவு ஏன் பயப்படுகிறார்? அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்டேன்.
பேராசிரியர் சொன்னார்: ‘‘பெண் வீட்டுக்குத் திருமணம் பேசுவதற்காக சென்றபோது, துணைக்கு இருக்கட்டுமே என ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு போனேன். அவர் இன்சூரன்ஸ் துறை யில் இருப்பவர். நிறைய மனிதர்களை அறிந்தவர் என்பதால், உடன் அழைத் துக்கொண்டு போனேன்.
அவரோ பெண் வீட்டுக்குப் போன நேரத்தில் இருந்து விபத்து, சாவு. இழப் பீடு, மோசடி என அவரது துறையைப் பற்றியே பேச ஆரம்பித்துவிட்டார். பெண் வீட்டாருக்கு அவரது பேச்சு பிடிக்கவே இல்லை. பேச்சை மாற்றினாலும் அவர் விடவில்லை. கடைசியில் ஒருவர் கோபித் துக்கொண்ட பிறகுதான் பேச்சை நிறுத்தினார்.
இருப்பினும் அமெரிக்காவில் வசிக் கும் அவரது மகனைப் பற்றி உயர்வாக பேசுகிறேன் என்று தப்பும் தவறுமாக நண்பர் பேசவே, அந்தத் திருமணமே நின்றுபோய்விட்டது. பின்பு, வேறொரு பெண் பார்த்து திருமணம் செய்தோம். அன்றோடு அந்த நல்ல மனிதரின் உறவை முறித்துக் கொண்டுவிட்டேன்.
‘உதவிக்கு இருக்கட்டுமே என நினைத்து உபத்திரவத்தைத் தேடிக் கொள்ளாதே’ எனப் பெரியவர்கள் சொல் வார்கள். அதைக் கேட்டால் புரியாது. அனுபவித்தால்தான் உணர முடியும்!’’ என்றார் பேராசிரியர்.
அவர் சொன்னது நிஜம்! நானும் அப்படியான மனிதர்களை அறிந்திருக் கிறேன். பாண்டிச்சேரியில் ஒரு இலக் கியக் கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டு இருந்தபோது, ‘‘நானும் கூட வரட்டுமா?’’ என ஒரு நண்பர் கேட்டார். பேச்சுத் துணைக்கு இருக்கட்டும் என அழைத்துக் கொண்டேன். கார் புறப்பட் டதும் அவர் தனது பென்டிரைவ்வை சொருகி ரீமிக்ஸ் பாடல்களைக் கேட் கத் தொடங்கினார். கொடூரம் தாங்கமுடி யாமல் அதை அணைத்துவிடும்படி சொல் லியதும், அவர் பாடத் தொடங்கிவிட் டார். அது, இதை விட கொடுமை.
நான் புத்தகம் ஒன்றை கையில் எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் சாலை யோரக் கடை எதைக் கண்டாலும் காரை நிறுத்தச் சொல்லி இறங்கிப் போய்விடு வார். சிகரெட், பபிள்கம், இளநீர், டீ, சமோசா, பான்பராக் என கார் முப்பது இடங்களில் நின்று நின்றுபோனது. ஒரு வழியாக புதுச்சேரிக்குச் சென்றபோது கூட்டம் நடக்கும் இடத்தில் என்னை இறக்கிவிட்டு, ‘‘காரை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள சிதம்பரம் கோயில் வரை போய்விட்டு வரட்டுமா?’’ எனக் கேட்டார்.
‘‘அதெல்லாம் முடியாது. கூட்டம் முடிந்தவுடன் நான் கிளம்பிவிடுவேன்’’ என்றேன். அவர் கூட்டத்தின் உள்ளே வரவேயில்லை. தலைவலிக்கு மாத் திரை வாங்க வேண்டும் எனச் சொல்லி கிளம்பிப் போனார்.
மதியம் கூட்டம் முடிந்து புறப்படத் தயா ரானபோது முழுபோதையில் அவர் காரின் பின்சீட்டில் உறங்கிக் கொண்டி ருந்தார். எழுப்பவே முடியவில்லை. ராட்சஸக் குறட்டை. அப்படியே அவரை சென்னைக்கு அழைத்து வந்தேன். மகாபலிபுரம் கடந்தவுடன், காரை நிறுத் தச் சொல்லி இறங்கிப் போய் சிறுநீர் கழித்துவிட்டு வந்தார். தனக்கு பசி அதிகமாகிவிட்டது, கட்டாயம் பிரியாணி வேண்டும் என்றார்.
வேறு வழியின்றி அதையும் வாங்கித் தந்தேன். தன்னை தி. நகரில் விட்டுவிடவும் என உரிமையோடு சொல்லி இறங்கிக் கொண்டார். நான் வீடு வந்து சேரும்போது ஒரு குறுந்தகவல் வந்தது. அவரேதான். தன்னை அழைத்துக்கொண்டு போய் அவமானப்படுத்திவிட்டதாக மிக மோச மாக எழுதியிருந்தார்.
இது நான் அனுப்பவேண்டிய குறுஞ் செய்தி அல்லவா என நொந்துகொண் டேன். அதன் பிறகு அவர் என்னைத் தொடர்புகொள்ளவே இல்லை. சில நாட்களுக்கு முன்பாக ‘‘அடுத்த கூட்டம் எங்கே உடன் வரலாமா?” எனக் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்தது. பதறிப் போய்விட்டேன்.
ஒற்றை அனுபவத்தில் நம்மை நிலை குலையச் செய்துவிடும் வல்லமை கொண்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்வதோ, அரவணைத்துச் செல்வதோ தவறானது.
சந்தர்ப்பம் கிடைத்தால் சிலர் எவ் வளவு மோசமாக நடந்துகொள்வார்கள் என்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஆப்பிரிக்கப் பழங்கதை ஒன்று இதைப் பற்றிப் பேசுகிறது. பூமியில் பஞ்சம் ஏற்பட்டு விடவே பறவைகள் உண வின்றித் தவித்தன. இதைக் கண்ட மேகங் கள் ‘‘எங்கள் வீட்டுக்கு வாருங்கள். விருந்து தருகிறோம்!’’ எனப் பறவை களை அழைத்தன. இதை ஏற்றுக் கொண்ட பறவைகள் மறுநாள் விருந் துக்கு வருவதாகச் சொல்லி அனுப்பின.
வான் மேகங்கள் கொடுக்கப்போகும் விருந்தைப் பற்றி அறிந்த ஒரு நண்டு ‘‘என்னாலும் பசி தாங்க முடியவில்லை. என்னையும் வானத்துக்கு அழைத்துப் போங்கள்’’ என்றது. ‘‘உன்னால்தான் பறக்க முடியாதே… எப்படி எங்களோடு வருவாய்’’ என பறவைகள் கேட்டன. அதற்கு நண்டு ‘‘ஏதாவது ஓர் உபாயம் கண்டுபிடித்து என்னை அழைத்துப் போனால், என்றைக்கும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்!’’ என்றது.
உடனே ஒரு பறவை தன்னுடைய காலை இறுக்கமாகப் பிடித்துக்கொண் டால் அழைத்துப் போவதாக ஆலோ சனை சொன்னது. அதன்படி மறுநாள் பறவைகளுடன் நண்டும் வானை நோக்கிப் பறந்தது.
அங்கே பறவைகள் நண்டை தங் களின் அரசன் என்று அறிமுகம் செய்து வைத்தன. மேகங்கள் நண்டை வரவேற்று வீட்டுக்கு அழைத்துப் போயின. அங்கே பெரிய விருந்து தயாராக இருந்தது.
தான் அரசன் என்பதால், தான் சாப் பிட்ட பிறகே பறவைகள் சாப்பிட வேண் டும் என்று கட்டளைப் பிறப்பித்தது நண்டு. வந்த இடத்தில் எதற்கு சண்டை என பறவைகளும் அதை ஒப்புக்கொண்டன.
பசியில் அங்கிருந்த உணவு வகை கள் அத்தனையும் நண்டு ஒரே ஆளாகத் தின்று தீர்த்துவிட்டது. பாவம் பறவைகள், உணவு கிடைக்காமல் திரும்பிப் போவது என முடிவு செய்தன. அத்துடன் தங் களை ஏமாற்றிய நண்டை அப்படியே விட்டுவிடக்கூடாது என முடிவெடுத்து வானத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டன. பாறையில் விழுந்த நண்டு, துண்டுத் துண்டாகச் சிதறிப் போனது.
இந்தக் கதை மேகங்களின் கொடைத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. கூடவே, இடம் கிடைத்தவுடனே நண்டு எப்படி மாறிவிடுகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
இந்த நண்டுக் கதை வங்கப் பஞ்சத் தின்போது நிஜமாகவே நடந்தேறியிருக் கிறது. வணிகர்கள் அரிசி, கோதுமை களைப் பதுக்கி வைத்துக்கொண்டு கொள்ளை லாபத்துக்கு விற்றிருக்கிறார் கள். அரசாங்கத்திடம் போராடி மக்கள் பெற்ற தானியங்களை அதிகாரிகள் கள்ளச் சந்தையில் கொண்டுபோய் விற் றார்கள். வங்கப் பஞ்சம் வெள்ளைக் காரர்களால் திட்டமிட்டு உருவாக்கப் பட்டது.
உணவுப் பிரச்சினையோ, பணப் பிரச்சினையோ எதுவாக இருந்தாலும் எப்போதும் பாதிக்கப்படுகிறவர்கள் சாமானியர்களே. அது எந்த காலத்திலும் மாறவேயில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது.
- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com
இணையவாசல்: >இயற்கை குறித்த பழங்கதைகளை அறிந்துகொள்ள