

கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப. ராஜகோபாலன் நவீன தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, கவிதை,நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தாலும், தனித்துவமான அடையாளம் சிறுகதைகள். அவருடைய மொத்த சிறுகதைகளும் சேர்ந்து தொகுக்கப்பட்ட ‘கு.ப.ரா. சிறுகதைகள்’ புத்தகம் எழுத்தாளர் பெருமாள்முருகனின் பல்லாண்டு காலத் தேடலின் விளைவாகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்நூலில் கு.ப.ரா-வின் 91 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கு.ப.ரா. படைப்புகள் இதற்கு முன்பும் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மைகுறித்த கேள்விகள் இருந்தன. குறிப்பாக, கு.ப.ரா. காலகட்டத்தில் வாழ்ந்த வேறு ஓர் எழுத்தாளர் எழுதிய கதைகளும் கு.ப.ரா-வின் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தன என்ற குற்றச்சாட்டு இலக்கிய உலகில் நீண்ட காலமாக இருந்தது. இந்த நூல் அந்தக் குறைகளையும் குற்றச்சாட்டுகளையும் களைந்து செம்பதிப்பாக வந்திருக்கிறது. காலக்குறிப்பு, பின்னிணைப்பு ஆகியவற்றோடு ஆய்வாளர்களுக்கான விரிவான பதிப்புரையும் வாசகர்களுக்கான சிறப்புரையும் இதன் சிறப்பம்சங்கள்.
காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ. 450