

தமிழில் சுற்றுச்சூழல், இயற்கையியல் சார்ந்த நூல்கள் குறைவு என்று ஒரு பேச்சு உண்டு. உண்மையில், சுற்றுச்சூழல் தொடர்பான நூல்கள் நிறையவே உள்ளன. தரமானவைதான் குறைவு. தமிழில் பசுமை இலக்கியமும் முன்பே தொடங்கிவிட்டது. மா. கிருஷ்ணன் 1947-லிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இந்தக் கட்டுரைகளை 'மழைக் காலமும் குயிலோசையும்' தொகுப்பில் காணலாம். ச. முகமது அலி 1980-லிருந்து காட்டுயிர்கள் குறித்து எழுதிவருகிறார். அவரது 'அதோ அந்தப் பறவை போல' என்ற நூலைத் தமிழில் பறவையியல் பற்றிய முதல் நூல் எனலாம்.
தியடோர் பாஸ்கரன் எழுதிய 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' நூல் உள்ளிட்ட அனைத்துச் சுற்றுச்சூழல் நூல்களும், அவர் மொழிபெயர்த்த 'கானுயிர் வேங்கை' நூலும் முக்கியமானவை. கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் 'தமிழரும் தாவரமும்', ச.சண்முகசுந்தரம் எழுதிய 'வனங்கள்: ஓர் அறிவியல் விளக்கம்', 'தமிழ்நாட்டுத் தாவரங்கள்', க.ரத்னம் எழுதிய 'தமிழ்நாட்டுப் பறவைகள்', பாமயனின் 'விசும்பின் துளி', நக்கீரனின் 'மழைக் காடுகளின் மரணம்' ஆகியவை அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள்.
பசுமை இலக்கியம் என்பது களக் கையேடுகளும், இயற்கை சார்ந்த அனுபவப் பகிர்வும், கட்டுரைகளும் மட்டுமே அல்ல. தமிழில் பல நாவல்களும், சிறுகதைகளும் இயற்கைப் பாதுகாப்பைக் கருவாகவோ சாரமாகவோ, இயற்கை தொடர்பான வட்டார வழக்குகளையோ கொண்டு படைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில: சா. கந்தசாமியின் 'சாயாவனம்', பெருமாள் முருகனின் 'கூள மாதாரி', சோ. தர்மனின் 'கூகை', ஜெயமோகனின் 'காடு', 'ரப்பர்', கி. ராஜநாராயணனின் 'பிஞ்சுகள்', நக்கீரனின் 'காடோடி'. மதுமிதாவின் கட்டுரைத் தொகுப்பான 'மரங்கள் நினைவிலும் புனைவிலும்' குறிப்பிடத்தக்கது. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட 'பறவைகள்', 'வண்ணத் துப்பூச்சிகள்', 'தட்டான்கள், ஊசித்தட்டான்கள்' ஆகிய கையேடுகள் பயனுள்ளவை. செல்வ மணி அரங்கநாதனின் 'மாட்டுவண்டியும் மகிழுந்தும்...' எனும் கவிதை நூலும் முக்கியமானது.
தலைப்பில் சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த வார்த்தைகளும், அட்டையில் காட்டுயிர் கள் படமும் இருப்பதாலேயே அவற்றை வாங்கிவிடுவது சரியல்ல. நல்ல படைப்புகளைத் தேடி வாசித்தல் நலம்.