

பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்படுவது வழக்கம். ஆனால் நாவலின் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒரு படத்தை எடுக்கும் முயற்சி மலையாளத்தில் நடந்துள்ளது. “நாம் செய்கிற காரியத்தை உறுதியாகச் செய்தால், அந்தக் காரியத்தைச் சாத்திய மாக்க இந்த உலகமும் இயற்கையும் நம்முடன்கூட நிற்கும்” இது உலக அளவில் புகழ்பெற்ற ‘தி அல்கெமிஸ்ட்’ என்னும் நாவலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்கியம். பிரேசில் எழுத்தாளர் பாவ்லோ கொய்லோ எழுதிய இந்த வாக்கியத்தை வைத்துக்கொண்டு ‘கொச்சவ்வ பாவ்லோ அய்யப்ப கொய்லோ’ என்னும் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் சிவா. குஞ்சாக்கோ போபன், நெடுமுடி வேணு ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.
வாசக சாலை இலக்கிய விருதுகள்
‘வாசக சாலை’ இலக்கிய அமைப்பின் சார்பாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மாதமொரு முறை விமர்சனக் கூட்டங்கள், இலக்கிய அரங்குகள், தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் போன்றவை நடத்தப்பட்டுவருகின்றன. இந்த அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா டிசம்பரில் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி இவ்வமைப்பு சார்பாக, சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக நவம்பர்-2015 முதல் அக்டோபர் 2016-க்குள் வெளியான படைப்புகளிலிருந்து உங்கள் பரிந்துரைகளை வரும் 31.10.2016-க்குள் அனுப்பலாம். பதிப்பாளர்கள் அல்லது படைப்பாளிகள் தங்கள் படைப்பின் ஒரே ஒரு பிரதியை மட்டும் அனுப்பிவைத்தால் போதும்.
மின்னஞ்சல் முகவரி: vasagasalai@gmail.com தொடர்புக்கு: 9942633833 / 9790443979