

திருவாரூர் கமலாலயக் குளத்தின் தென்கரையில் கழக உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்தபோது ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் ‘உண்மையான நண்பர்கள்’ என்று தலைப்புக் கொடுத்துப் பேசச் சொன்னார்கள். எனக்கு நெருக்கமான நண்பர்கள் அப்போது மிகச் சிலரே. நான் பேச ஆரம்பித்தேன், “புத்தகங்களே எனது உண்மையான நண்பர்கள்.”
அதுதான் அப்போது உண்மை. பாடப் புத்தகங்கள் என்பவை என் வாசிப்பில் பாதிக்கும் குறைவு. அப்பா ஆங்கிலப் பயிற்சிக்காக நிறைய சின்னச் சின்ன கதை, கட்டுரைப் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்துப் படிக்கப் பழக்கினார். ஒரு பேச்சுப் போட்டிக்காகத்தான் பாரதியார் கவிதைகள் வாசிக்கத் தொடங்கினேன். இப்போதும் நான் திருப்பித் திருப்பிப் புரட்டுவது திருவள்ளுவரையும் பாரதியையும் பாரதிதாசனையும்தான்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்ட ஆண்டில், கல்லூரி சேர வயது போதாமல் வலங்கைமானில் இந்தியும் தட்டச்சும் பயின்றுகொண்டிருந்தபோதுதான் கிளை நூலகத்தில் தமிழ்நாடு, செங்கோல், விடுதலை, திராவிட நாடு, முரசொலி போன்ற ஏடுகளோடு பழகலானேன்.
என்னை நாத்திகனாக்கிய நண்பர் அமீர்ஜான் சுயமரியாதை மாநாட்டுக்குச் சென்று வந்தபோது வாங்கி வந்து கொடுத்த லெனினின் ‘அரசும் புரட்சியும்’ புத்தகம்தான் நான் தொட்டுப் பார்த்த முதல் பொதுவுடைமை இலக்கியம். கல்லூரிக் காலத்தில் பேராசிரியர் சேஷாத்ரி என்னுள் வளர்த்த இலக்கிய ஆர்வம் ஷேக்ஸ்பியர், மில்டன், வோர்ட்ஸ்வர்த் போன்றவர்களை நெருங்கத் தூண்டியது. பேராசிரியர் மருதமுத்துவிடமிருந்து பெற்ற அரசியல் ஆர்வம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங், ஹோசிமின் ஆகியோரைப் படிக்கத் தூண்டியது.
அண்மைக் காலமாக நான் ஆழ்ந்து வாசித்துவரும் எழுத்தாளுமைகளில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வில் பெரும் ஆளுமையான அவர் அளித்த சில பேட்டிகளைத் தொகுத்து ‘செவ்வி’ எனும் நூலாகக் கலப்பை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
தொ.ப. சொல்கிறார்: “தமிழர்களுடைய மரபுவழி அறிவுத் தொகுதியினை உரையாடல் மரபிலும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவுமே மீட்டெடுக்க முடியும்.”
முனைவர் பட்ட ஆய்வேடாகிய ‘அழகர்கோயில்’ தொடங்கிப் பல கட்டுரைகளிலும் நூல்களிலும் செய்துள்ள இந்த மீட்புப் பணியின் எளிய தொகுப்புரையாகவே ‘செவ்வி’ அமைந்துள்ளது. தமிழகக் கருத்தியல் தளத்தில் பெரியார் ஒரு விவாதப் பொருளாகியுள்ள இத்தருணத்தில், நானும் ஓரிடத்தில் நிற்பவன் என்ற முறையில் தொ.ப. என்ன சொல்கிறார் என்று பார்த்தேன்.
“பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல் இந்தப் பத்தாண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப் போய்விட்டது.” ஆய்வாளர்கள் புத்தகப் புழுக்களாக இருக்கத்தான் வேண்டும். அதற்கும் மேலே தொ.பரமசிவன் கள ஆய்வாளர் என்பது ஆய்வின் ஆழ அகலத்தோடு ஆய்வுரையின் சுவையையும் கூட்டித் தருவதாக இந்நூலில் வெளிப்பட்டுள்ளது.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்
தியாகு, தலைமைக்குழு உறுப்பினர், தமிழ்த்தேச விடுதலை இயக்கம்.