யரோஸ்லவ் வாச்சக்: தமிழுக்கு ஒரு மேலைத் தூதுவர்

யரோஸ்லவ் வாச்சக்: தமிழுக்கு ஒரு மேலைத் தூதுவர்
Updated on
2 min read

தமிழியல் ஆய்வுக்கும் இந்தியவியல் ஆய்வுக்கும் சிறப்பான பங்காற்றியர் செக் குடியரசைச் சேர்ந்த பேராசிரியர் யரோஸ்லவ் வாச்சக், ஜனவரி 23-ம் நாள் பிராக் நகரில் காலமானார். 1943-ல் பிறந்த யரோஸ்லவ் வாச்சக், பேராசிரியர் கமில் ஸ்வலபிலின் மாணவர்களுள் ஒருவர்.

பிராக் நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகப் பயின்று பட்டம் பெற்று அந்தப் பல்கலைக்கழகத்திலேயே அம்மொழிகளை வாச்சக் கற்பித்துவந்தார். ஐரோப்பிய நாடுகளில் தமிழ்மொழி பற்றியும் சங்க இலக்கிய பாரம்பரியம் தொடர்பாகவும் புகழ் பரப்பிக்கொண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய வெளிநாட்டு அறிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவர் பேராசிரியர் வாச்சக்.

தாய்மொழியான செக் மொழி தவிர ரஷ்யன், பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, மங்கோலியன் போன்ற மொழிகளைக் கற்றிருந்த வாச்சக்குக்கு மொழிகளுக்கிடையில் காணப்படக்கூடிய பொதுவான ஒலிகள், சொற்கள், சொற்பொருள் ஆகியன இன்றியமையாத ஆய்வுக் களங்கள். சங்க இலக்கியத்தைப் பற்றிய ஆய்வு மட்டுமன்றி தமிழ், சம்ஸ்கிருத மொழியியல் தொடர்பான ஆய்வுகளையும் தொடர்ந்து மேற்கொண்டுவந்தவர் வாச்சக்.

சங்க இலக்கிய ஆய்வுகள்

சங்க இலக்கியங்களின் தொடக்கம் வாய்மொழியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதும் க. கைலாசபதி போன்றோரின் கோட்பாட்டோடு ஒத்துப்போகக் கூடியது இவரது ஆய்வு முடிவுகள். வாய்மொழி இலக்கியங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாய்பாடுகளை சங்க இலக்கியங்களில் அடையாளம் கண்டுள்ளார் வாச்சக். இந்த வாய்பாடுகளை உருவாக்குவதற்கு அடைச்சொற்கள், தாவரங்கள், மலர்கள், விலங்குகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ள விதத்தைச் செம்மையாக விளக்குவன இவரது கட்டுரைகள்.

இந்த வாய்பாடுகள் எவ்வாறு ஒரே புலவருடைய அல்லது பல புலவர்களுடைய பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ‘நறு முல்லை’, ‘பூத்த முல்லை’, ‘சிறு முல்லை’ போன்ற எடுத்துக்காட்டுகளோடு விளக்கியுள்ளார். இயற்கைப் பொருட் களான மலை, தாவரங்கள் போன்றவை அடிப்படைப் பொருளில் மட்டுமல்லாது குறியீட்டுப் பொருளிலும் பயன்படுத்தப்பட் டுள்ளன என்பது வாச்சக்கின் ஆய்வு முடிவுகளுள் ஒன்று.

சங்க, சம்ஸ்கிருத இலக்கிய ஒற்றுமைகள்

சங்க இலக்கியத்தையும் சம்ஸ்கிருத காவிய இலக்கியத்தையும் ஒப்பீட்டாய்வு செய்து, இயற்கையைப் பயன்படுத்திக் கவிதை உருவாக்குவதில் இவ்விரு இலக் கியப் பாரம்பரியங்களுக்கும் இடையே ஒற்றுமைக் கூறுகள் இருப்பதாகத் தனது பல கட்டுரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார் வாச்சக். சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள ‘தாழை’ பற்றிய குறிப்பு களையும் காளிதாசரின் மேகதூதத்தில் இடம்பெற்றுள்ள ‘கேதக/ கேதகி’ என்ற தாவரத்தையும் ஒப்பிட்டு இவர் எழுதியிருப்பது மேலாய்வுகளுக்குத் துணைபுரியும்.

திராவிட - அல்டாயிக் மொழிக் குடும்பங்களின் ஒற்றுமை

திராவிட மொழிகளுக்கும் அல்டாயிக் மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவைப் புதிய அணுகுமுறைகளின் வழி ஆய்வுசெய்து வாச்சக் நிறுவியுள்ளார். மங்கோலியன், துருக்கி மொழி உள்ளிட்ட மொழிகளை உள்ளடக்கிய அல்டாயிக் (சித்தியன்) மொழிக் குடும்பத்துக்கும் திராவிட மொழிகளுக்கும் உறவு இருப்பதாக கால்டுவெல் கோடிட்டுக் காட்டிச்சென்றதை தனது தொடராய்வுகளின் மூலமாக முன்னெடுத்துச் சென்றவர் வாச்சக்.

இந்திய இலக்கியங்களில் குறிப்பாக சம்ஸ்கிருதம் தமிழ் ஆகிய மொழிகளில் இயற்கை பற்றிய ஆய்வுக்காக பிரத்தியேக மான ‘பாண்டனூஸ்’ (Pandanus) எனும் ஆய்விதழை நடத்தி இந்தியவியல் ஆய்வுக்கு மேற்குலகில் ஊக்கம் தந்தவர்.

1990-க்குப் பிறகு சார்லஸ் பல்கலைக்கழகத்தின் துணை-ரெக்டர், கலை மற்றும் தத்துவவியல் பள்ளியின் முதன்மையர், தென் மற்றும் மத்திய ஆசியவியல் துறையின் இயக்குநர் ஆகிய நிர்வாகப் பணிகளையும் ஆற்றியுள்ளார்.

மங்கோலிய மொழிகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக 2010-ல் மங்கோலியக் குடியரசுத் தலைவரிடமிருந்து உயரிய விருதைப் பெற்றார். தமிழைச் சரளமாகப் பேசும் ஆற்றலைப் பெற்றிருந்த இவருக்குச் சங்க இலக்கிய ஆய்வுகளுக்காகச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள்பீட விருதை (2013) இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கிக் கவுரவித்துள்ளார்.

வாச்சக் கடந்த ஆண்டு ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள கேரளத்தின் கோழிக்கோடு நகரத்துக்கு வந்திருந்தபோது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த வாச்சக்கின் மறைவு தமிழாய்வுக்கும் இந்தியவியல் ஆய்வுக்கும் பேரிழப்பு!

- கோ. பாலசுப்ரமணியன், திராவிடப் பல்கலைக்கழகம், ‘சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு’ என்ற யரோஸ்லவ் வாச்சக் நூலின் மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு:gbalu123@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in