நூல் நோக்கு: மதங்களின் அடித்தளத்தை உலுக்கி...
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களின் மதம் சார்ந்த நம்பிக்கை அவர்கள் பிறந்த உடனேயே அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. வீடு, உறவினர், புழங்கும் வெளி ஆகியவற்றின் மூலமும் அவரவர் மதம் சார்ந்த நம்பிக்கை ஆழமாக உறுதிப்படுத்தப்படுகிறது. இதனால் அவரவர் மதத்தை விமர்சனபூர்வமாகப் பார்க்கும் புறவயமான பார்வை இல்லாமல் போகிறது. தருமியின் இந்த நூல் பல்வேறு மதங்களையும் புறவயமான பார்வையுடன் விமர்சிக்கிறது.
மதங்களின் புனித நூல்களின் நதிமூலம், ரிஷிமூலத்தையும் தருமி ஆராய்ந்திருக்கிறார். கேள்வியே கேட்கப்படாமல் காலம் காலமாகப் பின்பற்றப்படும் மத வழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் அடித்தளம் மீதே கைவைக்கிறார். இந்து மதம், இஸ்லாம், கிறித்தவம் இம்மதங்களின் உட்பிரிவுகள் அவற்றின் உள்முரண்கள் என்று தயவுதாட்சண்யம் பார்க்காமல் தருமி அலசியிருக்கிறார். மதவாதிகளின் கண்ணுக்குப் படாமல் அவர் தப்பிக்க வேண்டும்!
இந்த நூலில் தருமியின் கட்டுரைகள் மட்டுமல்லாமல் தமிழ்ப்படை, ஜமாலன், ஆர். கோபால் ஆகியோரின் கட்டுரைகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரியதொரு விவாதத்தைக் கோரும் நூல்.
