நல் வரவு: கணிதம் கற்பித்தல்

நல் வரவு: கணிதம் கற்பித்தல்
Updated on
2 min read

கணிதம் கற்பித்தல், டாக்டர் வி.நடராஜன், விலை:ரூ.170/-
சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை - 600014, 044-26115618

‘கணக்கு, பிணக்கு, ஆமணக்கு’என கணிதப் பாடம் பற்றிய தனது சிரமத்தை பாரதியார் எழுதியதைப் போலவே, பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான். நூலாசிரியரின் 40 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கைகொடுக்க, ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை எளிய மொழியில் சுருக்கமாக விளக்கியுள்ளார். ‘கணிதம் கற்பித்தல்’ நூலுக்காக தமிழ்நாடு அரசின் விருது பெற்றவர் இந்நூலாசிரியர்.

கண்ணதாசன் அணிந்துரைகள், விலை: ரூ. 60
கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17. 044-24332662

கவியரசு கண்ணதாசன், பிறருடைய நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பு இந்நூல். மூத்த எழுத்தாளர்கள் முதல் அறிமுகமில்லாத எழுத்தாளர்கள் வரை பலரின் நூல்களுக்கு அணிந்துரை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் படைப்பின் நல்ல அம்சங்களையே பிரதானமாகக் குறிப்பிட்டிருக்கிறார். கவிதை தொடர்பான அவரது பார்வை இதில் பதிவாகியிருக்கிறது. வைரமுத்துவின் முதல் தொகுப்பான ‘வைகறை மேகங்க’ளுக்கு எழுதியிருக்கும் அணிந்துரையில் ‘இவருக்கு நல்ல எதிர்காலம்’ இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனோன்மணி காட்டும் ஊழிக்காலம், செ. கணேசலிங்கன்,
விலை: ரூ. 70. , குமரன் பப்ளிஷர்ஸ், 12 (3),
மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, சென்னை-26.

மனோன்மணி என்ற இலங்கை யுவதியைப் பற்றிய கதை இது. அவளுடைய மனப் போராட்டமும், அடிமைப்படாமல் வாழ எடுக்கும் முடிவும் மிக அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உலகம் அழிவதை அப்படியே ஏற்று அமைதி காத்துவிடாமல், எதிர்ப்புக் காட்டக்கூடிய ஒரே வர்க்கம் பாட்டாளிகள்தான் என்ற சோம்ஸ்கியின் கருத்து உரிய வகையில் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அயராத உழைப்புக்குச் சொந்தக்காரரான மூத்த எழுத்தாளர் செ. கணேசலிங்கன் இந்த வயதிலும் வியக்க வைக்கிறார்.

சிற்பம் தொன்மம், செந்தீ நடராசன், விலை:ரூ.180/-
என்.சி.பி.எச், சென்னை-600024, 044-26251968

‘கல்லும் பேசும்’என்று கிராமங்களில் சொல்வதுண்டு. அது உண்மைதான். பழங்காலச் சிற்பங்கள் நாம் அறியாத பற்பல செய்திகளை நம்மோடு காலங்காலமாய்ப் பகிர்ந்துகொள்கின்றன. சிற்பியின் கைவண்ணத்தில் ஒரு கல் சிற்பமாகியிருக்கிறது என்பதைக் கடந்து, அதிலுள்ள புராணம்/ தொன்மம், அதன் வழியான சமூக உறவு, சிற்பம் குறித்த நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் என தனது அனுபவத்தின் மூலமாக 28 சிற்பங்கள் குறித்துத் தெளிவாகவும் நுட்பமாகவும் எழுதியுள்ளார் நூலாசிரியர்.

மாவலி பதில்கள், விலை: ரூ.125,
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம், சென்னை 14, 044-43993000

‘நக்கீரன்’ இதழில் வெளியான ‘கேள்வி-பதில்’ பகுதிகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம் நிகழ்வுகள், வரலாறு என்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றே குறும்புடன் ‘மாவலி’ அளித்திருக்கும் பதில்கள் ரசிக்கவைக்கின்றன. அரிய புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அணிந்துரை எழுதியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் ஜவஹர் ‘மாவலி’ யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் விதம் சுவாரசியம். சில கேள்விகள் திரும்பத் திரும்ப வருவதும், பல கேள்விகளில் வாசகர் பெயர் இல்லாததும் சிறு குறைகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in