

பெண்ணியம் என்றைக்குமே புதிரான சொல்லாக இருந்துவருகிறது. இந்த அவசர உலகில், பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த பெரியார் முதல் உலக நாடுகளில் எழுச்சிபெற்ற பெண்ணியப் போராட்டங்கள் வரை அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டோம்.
பெண்ணியம் என்பது அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மட்டுமே சிந்திக்கக்கூடிய விஷயம் அல்ல. ஒவ்வொரு சாமானியப் பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டிய அறிவு. அத்தகைய அறிவையூட்டும் சிறந்த புத்தகங்களில் ஒன்றுதான் அமெரிக்கப் பெண்ணியவாதி பெட்டி ஃபிரீடன் (Betty Friedan) எழுதிய தி ஃபெமினைன் மிஸ்டீக் (The Feminine Mystique). இந்த ஆண்டு பொன் விழா கொண்டாடும் இப்புத்தகத்தின் தேவை, இன்றும் இருந்துகொண்டே இருக்கிறது.
1963ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இப்புத்தகம், அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த அமெரிக்கப் பெண்களின் திருப்தியளிக்காத குடும்ப வாழ்க்கை பற்றியும், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றியும் பல ஆய்வுகள் செய்து எழுதப்பட்டது.
நல்ல பொருளாதாரச் சூழல், குழந்தைகள் என அவர்கள் வாழ முடிந்தபோதிலும், அவர்களுள் பலர் குடும்பத்தலைவியாக இருப்பதில் அதிருப்தியாக இருப்பதை இந்த ஆய்வில் ஃப்ரீடன் கண்டறிந்தார். முதலில், இந்த ஆராய்ச்சியைப் பத்திரிகையில் கட்டுரையாகவே எழுதவே நினைத்தார் ஃபிரீடன். ஆனால், எந்தப் பத்திரிகையும் அதை வெளியிட முன்வராத காரணத்தால், தன் ஆய்வைப் புத்தகமாகவே வெளியிட்டுவிட்டார்.
நல்ல வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அனைத்தும் உழைக்காமலே கிடைத்திருக்கையில், இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று கேட்கும் மனநிலையை எதிர்க்கும் வகையில் “பெயரில்லாப் பிரச்சனை” (The Problem has no name) என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தை எழுதியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போருக்கு பின், பெரும்பாலான பெண்களை மனைவிகளாகவும், தாய்மார்களாகவும், இல்லத்தரசிகளாகவும் மட்டுமே இருக்க அனுமதித்தது அமெரிக்க வாழ்க்கை. மனம், உடல், அறிவு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் ஆண்களுக்கு அடிபணிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலை, பெண்களுக்கு ஒருவிதமான மனஅழுத்ததை உருவாக்கியது. “வாழ்க்கை இவ்வளவுதானா?” என்ற கேள்வி இல்லத்தரசிகள் தங்களுக்குள்ளே கேட்டுக்கொண்டதாக தன் புத்தகத்தின் முதல் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறார், ஃபிரீடன்.
இப்புத்தகத்துக்காக நடத்திய ஆய்வு ஒன்றில், 1930களிலும் 1940களிலும் வாழ்ந்த பெரும்பாலான பெண்கள் கல்வி, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருந்தனர் என்று கண்டறிப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வளர்ந்த நுகர்வோர் கலாசாரம் பெண்களின் வாழ்க்கை மனைவியாகவோ, தாயாகவோ தன் கடமைகளைச் செய்வதில்தான் முழுமை பெறுகிறது என்ற கட்டுக்கதையைப் பரப்பிவிட்டது. இதனால், 1950களில் அதிகம் படித்துவிட்டால் தனக்கு ஏற்ற ஆண் கிடைக்காமல் போய்விடுவார்களோ என்று அஞ்சி, பல பெண்கள் படிப்பை பாதியிலே கைவிட்டுவிட்டனர். இந்த அடிப்படைகளைக்கொண்டு, பெண்கள் இல்லத்தரசி ஆவதை கனவாக கொள்ளாமல், தங்களையும் தங்களின் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பல முன்மாதிரிகளைக்கொண்டு வாதாடுகிறது இந்தப் புத்தகம்.
குடும்பம், வேலை, பாலியல் ஆகிய தளங்களில் பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்தது, இரண்டாம் அலை பெண்ணியம். அத்தகைய பெண்ணிய வகைப்பாட்டுக்கு மிகப்பெரிய தூண்டுக்கோலாக அமைந்தது இப்புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.