

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றவர்களின் ஆதரவுடன் 2001-ம் ஆண்டு டொராண்டோவில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் ஓர் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) உள்ளிட்ட பல விருதுகளை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது. 2015-ம் ஆண்டுக்கான, 17-வது இயல் விருது, தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதனுக்கு வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி, அம்பை, நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள்.
2015-ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியத் தோட்டத்தின் புனைவுப் பரிசை ‘கண்டிவீரன்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக ஷோபா சக்தி பெறுகிறார். தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அபுனைவுப் பரிசு அசோகமித்திரனின் ‘குறுக்குவெட்டுக்கள்’ என்னும் கட்டுரை தொகுப்புக்கு அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவிதைப் பரிசை ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற கவிதைத் தொகுப்புக்காகக் கவிஞர் குமரகுருபரன் பெறுகிறார். 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் மொழிபெயர்ப்பு பரிசு, ‘Farewell Mahatma’ என்ற நூலுக்காக மொழிபெயர்ப்பாளர் ந.கல்யாணராமனுக்கு வழங்கப்படுகிறது. எழுத்தாளர் தேவிபாரதியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இது.
சாகித்ய அகாடமி விருதுகள்
சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் சிறந்த இளம் எழுத்தாளர்களுக்கான யுவ புரஸ்கார் விருதை வழங்கிவருகிறது. இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கானகன் என்னும் நாவலுக்காக லக்ஷ்மி சரவணக்குமாருக்கு வழங்கப்படுகிறது. கானகன் நாவல், வனத்தில் வாழக்கூடிய பழங்குடி மக்கள் குறித்தும், அந்த மக்கள் வனத்திலிருந்து துரத்தப்படுவதையும் பெருமுதலாளிகளின் விருப்பங்களை முன்னிட்டு அவர்கள் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதைக் குறித்தும் விவாதிக்கிறது. இந்த நாவலை மலைச்சொல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 35 வயதுக்குட்பட்டோருக்கு வழங்கப்படும் இந்த விருது, பாராட்டுப் பட்டயத்துடன் ரூ. 50 ஆயிரம் பரிசு கொண்டது.
இதேபோல் சிறந்த சிறார் இலக்கியத்துக்காக வழங்கப்படும் பால புரஸ்கார் விருதைப் பெறுகிறார் குழ. கதிரேசன். ஐந்திணைப் பதிப்பக உரிமையாளரான குழ. கதிரேசன், 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர்களுக்கான பாடல்களையும் கதைகளையும் எழுதி வருபவர். சிறார் இலக்கியத்துக்கு அவர் அளித்த ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. பாராட்டுப் பட்டயத்துடன் ரூ. 50 ஆயிரம் பரிசையும் உள்ளடக்கியது இந்த விருது.