

மாரிப்பித்தியார் என்ற புலவர் புறப்பாட்டு (252) ஒன்றில் ‘சொல்வலை வேட்டுவன்' என்ற சொற்களைக் கையாள்கிறார். காட்டருவியில் நீராடித் தன் முதுகில் புரளும் தலைமுடியை ஆற்றி நிற்கிற ஒருவனின் தவ நிலையை அவர் காண்கிறார். கொல்லிப்பாவை போன்ற அழகிகளின் வளையல்கள் காதலால் கழன்று விழும்படி அவர்கள் மனதில் காமத் தீயை வளர்த்தவன். வேடன் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிப்பது போல, வார்த்தை வலை விரித்து அழகிகளை விழச் செய்வதன் அல்லவா இவன்.. என்று வியக்கிறார்.
லா.ச. ராமாமிருதம், சொல்வலை வேட்டுவர். லா.ச.ரா.வின் சொற்கள் வேறு மாதிரி. சாதாரண சொற்கள் அவருக்குத் தள்ளு படி. இரும்பைப் பொன்னாக்கும் ரஸவாதி அவர். வார்த்தைகளை வேக வைப்பதில்லை. புடம் போடுகிறார். ஒரு உதாரணம்:
‘வானத்தில் ஒவ்வொரு சமயம், நீலத்தில் பொன் விளைந்தது. ஒரு சமயம் கறுப்பில் வெள்ளி விளிம்பு கட்டியது. மாலைகளில் சிவப்பில் செம்பு அடித்திருந்தது' (யோகம்)
லா.சா.ராவின் அபூர்வ ராகம் கதையை அவருடைய பிரதிநிதித்துவக் கதையாகக் கொள்ளலாம். அபூர்வராகம் கதையில் அவளை, அவன் அபூர்வ ராகம் என்கிறான். லா.ச.ரா. அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல, அவனுக்கும் கூடப் பெயர் தரவில்லை. அவன், அவள் அவ்வளவுதான். பெயரில் என்ன இருக்கு, பெயரா அவள் என்பார் லா.ச.ரா.
“வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக் கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வர ஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.”
அவன் அவளைப் பெண் பார்த்த அந்த அபூர்வ கணத்தை இப்படிச் சொல்கிறார்:
“நீலம் உடுத்தி, இரை தின்ற பாம்புபோல் கனத்துப் பின்னல் முழங்காலுக்கும் கீழ் தொங்க, நிமிர்ந்த தலை குனியாது, சமையல் அறையினின்று வெளிப்பட்டு வந்து நமஸ்கரித்து மையிட்ட கண்களை ஒரு முறை மலர விழித்து புன்னகை புரிந்து நின்றாள். அவ்வளவுதான்.
அவள்தான் நான் கண்ட அபூர்வ ராகம்.”
அம்மாவுக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கவில்லை. “கன்னங்கரேலென்று தொட்டால்கூட ஒட்டிக்கொள்ளும். அமாவாசையில் பிறந்திருக்கிறாள். மயிர் நீளம் பார்த்தையா, வீட்டுக்கு ஆகாது. பாடக்கூடத் தெரியலையே.”
“அவளே ஒரு ராகம்…”
கல்யாணம் நடந்தது. இல்லறம் எப்படி இயங்கியது. அவன் நினைத்துச் சொல்கிறான். “அபூர்வ ராகம். அதே வக்கரிப்பு. பிடாரன் கை பிடிபடாத பாம்பு போல் அபாயம் கலந்த படபடப்பு. ஸ்வர ஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையே அற்றது போல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி. வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம் போல் பயந்த ஒரு முரட்டுத்தனம், சிலிர் சிலிர்ப்பு”.
அவன் அவளை எப்படி உணர்கிறான், என்பது முக்கியம். 'மிருகம்! மிருகம்! உயர்ந்த ஜாதிக் காட்டு மிருகம். உடலையும் உள்ளத்தையும் மிஞ்சிய வேகம் அவளை அலைத்தது.' விஷயம் என்னவாக இருக்கும். அவள் முன் அவன் திகைத்து நிற்கிறான். அவள் அவனைத் திகைக்கச் செய்கிறாள். அவளை அவன் நீராகக் கையில் ஏந்தினால், விரல் வழி மணலாகச் சரிகிறாள். அகலை ஏற்றி இரு கைகளுக்குள்ளும் அந்த வேம்பின் பழச் சுடரை அவன் பாதுகாக்க நினைக்கிறபோது அவள் மின்னலாகிக் கிளைக்கிறாள். அவன் விளம்ப காலமாகப் படரும்போது, அவள் துரித காலமாகி அவன் முன் பாய்ந்து மேல் செல்கிறாள்.
கதையின் ஒரு முக்கியக் கண்ணியாக ஒரு காட்சியைப் பதிவு செய்கிறார் லா.ச.ரா.
அபூர்வ ராகத்தின் ஜீவஸ்வரமாய் அவள் கூந்தல் விளங்கிற்று. பின்னாது வெறுமென முடிந்தால் ஒரு பெரும் இளநீர் கனத்துக்குக் கழுத்தை அழுத்திக்கொண்டிருக்கும். பின்னலை எடுத்துக்காட்டினால் கூடை திராட்சையை அப்படியே தலையில் கவிழ்த்தது போலிருக்கும். அம்மாவுக்கு அம்மயிரைப் பின்னப் பின்ன ஆசை. விதவிதமாகப் பூ வாங்கி வைத்துப் பின்னுவாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு பாடு தலைக்கு மாத்திரம் எண்ணெய் தனியாகத் தேய்த்து, துணி துவைப்பது போல் அம்மிக்கல்லின் மேல் கூந்தலைக் குமுக்கி ஒரு கட்டையால் எண்ணெய் விட அடித்து அலசுவாள். உலர மறு நாளாகும். கூந்தலை முடித்துப் படுக்க இயலாது. முடிச்சை அவிழ்த்துக் கட்டிலுக்கு வெளியே தொங்க விட்டுத்தான் படுக்க வேண்டும்..
லா.ச.ரா. என்கிற உபாசகரால் அத்தோடு நிறுத்த முடியாது. அடுத்த கட்டத்துக்குப் போகிறார். அது கதைக்கு ஆதாரமான பகுதியும்கூட.
“ஓரிரவு விழித்துக்கொண்டேன். மயிர் பெருந்தோகையாய்ப் படர்ந்திருந்தது. மெதுவாய்த் தொட்டேன். சரியாய் மூன்றங்குல ஆழத்திற்குக் கை அழுந்திற்று. விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அதைப் பார்த்தால் ஏதோ எங்கேயோ வறண்ட பூமியிலும் குன்றுகள் தடுத்துக் குடங்குடமாய்ப் பெய்ய ஏகமாய்த் தண்ணீரை ஏற்றிக்கொண்டு செல்லும் மேகம் போல்...”
ஒரு நாள் அவள் உடம்புக்கு வந்து படுத்துவிடுகிறாள். விஷயம் முற்றிவிட்டது என்றார் டாக்டர். அம்மா ஸ்நானம் பண்ணினாள். சுவாமி விளக்கை ஏற்றி எதிரே உட்கார்ந்துகொண்டாள்.
இரண்டு கழித்து அவள் பிழைத்துக்கொள்கிறாள். “என் குழந்தை பிழைத்தது. வெங்கடாஜலபதியின் கிருபைதான்… இவள் மயிரை முடி இறக்குவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன்” என்கிறாள் அம்மா.
அபூர்வ ராகத்தின் புன்னகை உயிரற்று அப்படியே உறைந்து போயிருந்தது.
“அவள் தன் மனதிலிருப்பதை விட்டுக் கொடுப்பதில்லை. அவள் சிரிப்பில் கண்ணாடி உடையும் சத்தம்போல ஒரு சிறு அலறல் ஒலித்தது...”
மறுநாள் முடி இறக்கும் நாள். அரை உறக்கத்தில் அவள் பக்கக் கை நீட்டுகிறான் அவன். அவள் இடம் வெறிச் சென்றிருந்தது.
அம்மா, அங்கும் இங்கும் ஓடுகிறாள். 'தேடேண்டா'
'பிரயோஜனம் இல்லையம்மா. அவள் அகப்பட மாட்டாள்.அவளுடைய உயிரற்ற உடலை நாம் காணக்கூட அவள் இசையாள். ராகம் முடிந்துவிட்டது. இனி வீணை வீணையாய் உபயோகப்படாது..'
கதை முடிகிறது. அல்லது தொடங்குகிறது.