

தமிழில் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒரு கெரில்லா போராளியைப் போலவே இயங்க வேண்டியிருக்கிறது. சி.சு.செல்லப்பா, க.நா.சு.விலிருந்து தொடங்கிய கதை அது. நிறுவனங்களின் ஆதரவு, சமூக அங்கீகாரம், போதிய வருமானம் எதுவுமே இல்லாத நிலையில் தமிழில் எழுத்தாளராக இயங்குவது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சிரமமானது. என்னுடைய நாவலுக்குப் பதிப்பாளர் கிடைக்காமல் தடுமாறி நின்றபோது அவந்திகா தன் தாலியை விற்றுக் கொடுத்தாள் (எனக்குத் தாலியில் நம்பிக்கை இல்லாதபோதும் அவள் அதில் அதீத நம்பிக்கை கொண்டவள்). நான் மட்டும் அல்ல; பல எழுத்தாளர்கள் இப்படிச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எழுபது, எண்பதுகளில் சிறுபத்திரிகை இயக்கமே அப்படித்தான் வளர்ந்தது. இந்த வேள்வியில் பல எழுத்தாளர்களின் உயிர் பலியாகியிருக்கிறது. அப்படி ஆகியிருக்கக்கூடிய என்னை முதலில் கண்டுகொண்டவர் தினமலர் பொறுப்பாசிரியர் ரமேஷ். 30 ஆண்டுகளுக்கு முன்னால் என் நாவல் ஒன்றை ஒரே இரவில் படித்து முடித்த ரமேஷ் உடனே என்னைத் தொடர்புகொண்டார். பார்த்ததும் பற்றிக்கொண்ட நட்பு, ஓரிரு தினங்களிலேயே ‘வாடா போடா’ அளவுக்கு நெருக்கமானது.
தொடர்ந்து இருபது ஆண்டுகள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு எட்டு மணியிலிருந்து நள்ளிரவு வரை மெரினா கலங்கரை விளக்கத்துக்குக் கீழே கடல் மணலில் அமர்ந்து பேசுவோம். (இப்போது வேறு இடம்.) பேச்சு முடிவுறாத சமயங்களில் பெசண்ட் நகர் கடற்கரைக்குப் போவோம். இந்த சந்திப்பில் பல பிரமுகர்களைச் சந்தித்திருக்கிறேன், கவுண்டமணி உட்பட.
ரமேஷைவிட அதகளம் அவருடைய தம்பி வெங்கடேஷ். மாதம் ஒருமுறை அவர் வசிக்கும் பாண்டிச்சேரி போய்விடுவேன். இரண்டு நாட்கள் பேசுவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் நூல் வெளியீட்டு விழாவுக்காகப் பணம் தேவைப்பட்டது. வெங்கடேஷிடம் தயங்கியபடி சொன்னேன். அப்படித் தயங்கியதற்காகக் கோபித்துக்கொண்ட அவர் சொன்ன பதில் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாதது. “ஏன் தயங்குறீங்க சாரு? என்கிட்ட கேட்காம வேற யார் கிட்ட கேட்கப் போறீங்க?”
மூன்று மாதம்கூடப் பழக முடியாத குணநலன்களைக் கொண்ட என்னிடம் இவர்கள் முப்பது ஆண்டுகளாகப் பழகிக்கொண்டிருப்பது என் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும். அந்த நல்லூழ் தந்த நண்பர்களில் மற்றொருவர் நல்லி குப்புசாமி. பண்பட்ட இசை ரசிகராகவும் பட்டு வணிகராகவும் தெரியவரும் நல்லி ஒரு தேர்ந்த இலக்கிய, வரலாற்று வாசகரும் கூட. அவருடைய தொடர்பு இல்லாத இலக்கியப் பத்திரிகையே இல்லை என்று சொல்லலாம். மாதம் ஒருமுறை சந்தித்து அளவளாவுவது வழக்கம்.
நல்லியை எனக்கு அறிமுகம் செய்த ஏ. நடராஜன் காலமாகிவிட்டார். அவரும் எனது இனிய நண்பராக இருந்தவர். எனது நீண்ட கால நண்பர்களில் திலகவதியும் இறையன்புவும் முக்கியமானவர்கள். இருவருமே நடமாடும் நூலகங்கள். சந்தித்தால் இரண்டு மணி நேரத்துக்குக் குறையாது பேச்சு. வெளியே வரும்போது பத்து இருபது புத்தகங்களைப் படித்த நிறைவு ஏற்படும்.
பள்ளி, கல்லூரிப் பருவ நண்பர்கள் யாரும் இப்போது தொடர்பில் இல்லை. நாகூர் போனால் அல்வாக் கடை பஷீரை சந்திப்பேன். அலுவலக வாழ்வில் நண்பர்களானவர்கள் வில்லிபுத்தூர் ராகவனும் கண்ணனும். இப்போதும் நட்பு தொடர்கிறது. ராகவனோடு பேசும்போதும் ஒரு நூலகத்தில் இருப்பது போலவே இருக்கும்.
அடுத்து என் வாசகர் வட்ட நண்பர்கள். அவர்களை ஒரு தற்கொலைப் படை என்று வர்ணிப்பார் மனுஷ்ய புத்திரன். உண்மைதான். இன்றைய உலகில் எந்த எழுத்தாளருக்கும் வாய்க்காத பேறு அது. மாதம் ஒருமுறை எங்கேனும் மலை அல்லது கடல் சார்ந்த இடத்தில் ஒருநாள் தங்கிப் பேசுவோம். அப்படி ஒரு சந்திப்பின்போது மாலை ஐந்து மணி அளவில் பின்நவீனத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தேன். முடிக்கும்போது காலை ஐந்து மணி. நான் பெருமையாகச் சொல்லிக்கொள்வதுண்டு, எனக்கு நூறு கரங்கள் என.
அவர்கள் நேசமித்திரன், ராம்ஜி நரசிம்மன், அராத்து, செல்வகுமார், கருப்புசாமி, புவனேஸ்வரி, ரெட்புல் ராம சுப்ரமணியன், அருணாசலம், குமரேசன், மனோகரன், நிர்மல், ஜெகா, கார்ல் மார்க்ஸ், மோகனா, பிரபு காளிதாஸ், சரவணன் சந்திரன், அர்விந்த், கணேஷ் அன்பு. மேலும், டாக்டர் ஸ்ரீராம். அவர் மட்டுமே இரண்டு டஜன் பேருக்குச் சமம்.
தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கிலத்திலும் அறியப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான். என் எழுத்தை ஆங்கிலத்தில் கொண்டுசெல்பவர்கள் என கருந்தேள் ராஜேஷ், காயத்ரி, ஷாலின் மரியா லாரன்ஸ், ட்டி.ஆர். விவேக் ஆகிய நண்பர்களைச் சொல்லலாம்.
- சாரு நிவேதிதா, ‘ஸீரோ டிகிரி’, ‘எக்ஸைல்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com