

“மோடியின் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை, ‘பேரலையை எதிர்த்து நீந்தும்’ முயற்சியாக நீங்கள் கொள்ள வேண்டும்” என்பதுதான் யு.ஆர். அனந்தமூர்த்தி விடுக்கும் ஒரே கோரிக்கை. அந்த ஒற்றைக் கோரிக்கைக்காகவே நாம் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம்.
தன் வாழ்நாளில் நண்பர்கள், சக படைப்பாளிகள், கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களால் யு.ஆர்.ஏ. என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் யு.ஆர்.அனந்தமூர்த்தி. கன்னட இலக்கியத்தில் நிகழ்ந்த ஒரு விழிப்பு, இவர் வரவு.
ஆங்கிலத்தில் ‘டான்ஸ் மகாபர்’ என்ற ஒரு சொல் உண்டு. பச்சையாகத் தமிழில் மொழிபெயர்த்தால் ‘சாவு ஆட்டம்’ என்று அர்த்தம் வரும். நம் ஊரில் இறந்தவர்களைச் சந்தோஷமாக வழியனுப்பிவைக்க ஆட்டம் ஆடுவது வழக்கம். ஆனால் 2014 ஆகஸ்ட் 22 அன்று, அனந்தமூர்த்தியின் இறப்பின்போது, பெங்களூரூவில் இந்துத்துவவாதிகள் ஆடிய ஆட்டம் நிச்சயம் ஜனநாயகத்தன்மையைக் கீழ்மைப்படுத்தி ஆடப்பட்ட ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை. தான் இருந்த வரைக்கும் ‘மதச்சார்புடைய வலது’ (நான்-செக்யூலர் ரைட்) வந்துவிடக் கூடாது என்று போராடியவருக்கு இப்படி ஒரு வழியனுப்புதல் கிடைத்தது!
‘மோடி பிரதமரானால் நான் இந்த நாட்டை விட்டுப் போவேன். அவர் ஆட்சியின் கீழ் வாழ எனக்கு விருப்பமில்லை’ என்று கருத்துச் சொன்னவர் அனந்தமூர்த்தி. ‘அனந்தமூர்த்தி பாகிஸ்தானுக்குக் கூடப் போகலாம்’ என்று இந்துத்துவவாதிகள் நெருக்கினர். அவர்களுக்கான பதிலாகத்தான் அனந்தமூர்த்தி இந்த உரைநடையை எழுதியிருக்கிறார்.
அனந்தமூர்த்தியின் கடைசி படைப்பு இது. தற்போது அது ‘இந்துத்வா அல்லது இந்த் ஸ்வராஜ்’ என்ற தலைப்பில் ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காந்தி மற்றும் சாவர்க்கர் ஆகியோரின் எழுத்துகளை முன்வைத்து இன்றைய காலத்தில் இந்தியாவுக்கு எது தேவை என்பதை அலசுகிறார் அனந்தமூர்த்தி. முன்னவரின் ‘இந்து சுயராஜ்ஜியம்’ நூலையும், பின்னவரின் ‘இந்துத்வா’ என்றை நூலையும் ஆய்வுக்குட்படுத்தும் அவர், ‘சாவர்க்கரின் இந்துத்வா என்ற விஷத்துக்குச் சரியான விஷமுறி மருந்து காந்தியின் இந்து சுயராஜ்ஜியம்’ என்று நிறுவுகிறார்.
‘இந்தியாவைப் புண்ணிய பூமியாக அங்கீகரிப்பவரும், ‘ரத்த உறவுகளை’க் கொண்டிருப்பவருமே உண்மையான இந்து. அந்த இந்துக்களின் கீழே இந்த நாடு ஒற்றுமையடைய வேண்டும்’ என்பது சாவர்க்கரின் கருத்தியல். காந்தியோ, ‘மத, இன, மொழி வேற்றுமைகள் கடந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு அகிம்சைதான் அடிப்படையாக இருக்கும்’ என்றார். இப்படிச் சொன்ன காந்தியின் ‘இந்து சுயராஜ்ஜியம்’ எனும் புத்தகத்தின் குஜராத்தி மொழிப் பதிப்பு ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பை (காந்தியே மொழிபெயர்த்தார்) அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்பது ஆச்சரியத்துக்குரியது.
‘பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்துக்காகப் போராடுவதும், அவர்களை அமெரிக்காவின் துணை கொண்டு இஸ்ரேலியர்கள் ஒடுக்குவதும், நம் காலத்தின் சீரழிவுகள் சிலவற்றுக்குக் காரணமாக அமைகின்றன. பாலஸ்தீனிய இஸ்லாமியர்கள் மீது எந்த ஒரு தாக்குதல் நடந்தாலும், அதற்குப் பதிலடி கொடுக்கத் தீவிரவாதிகள் தயங்குவதில்லை. சாவர்க்கரின் வழியைப் பின்பற்றும் மோடி அரசு, இஸ்ரேலைப் போலவே ‘தேச நலன்’ என்ற நேர்க்கோட்டில் பயணிக்கிறது. இங்கு ‘தேச நலன்’ என்று கூறிக்கொண்டு எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்கிறார் அனந்தமூர்த்தி.
‘இவ்வாறு அனந்தமூர்த்தி கூறுவதால், அவர் மோடியை நிராகரிக்கிறார் என்று தோன்றலாம். மோடி என்ற தனிநபரை அவர் நிராகரிக்கவில்லை. மாறாக, அவரின் சித்தாந்தங்களைத்தான் நிராகரிக்கிறார்’ என்று இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியுள்ள சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன் கூறுகிறார்.
‘வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் எதுவுமே இலவசம் கிடையாது. தீமை என்பது நமக்கு வெளியில் உள்ளது என்று கருதுவது கோட்ஸேவியச் சிந்தனை. சுரங்கங்கள், அணைகள், மின் நிலையங்கள், ‘ஸ்மார்ட் நகரங்கள்’ எனப் பல வடிவங்களில் அது நம்மிடையே இருக்கிறது. மரங்களை வெட்டிச் சாலைகளை விரிவாக்குகிறார்கள். நதிகள், நட்சத்திர விடுதிகளுக்கு மடைமாற்றி விடப்படுகின்றன. பழங்குடிகளின் மலைகள், தரைமட்டமாக்கப்படுகின்றன. குருவிகள் இல்லாத சந்தைக் கடைகள் ஏற்படுத்தப்படுகின்றன’ என்று ‘நம் காலத்தின் தீமை’களைப் பட்டியலிடும் அவர், ‘இவற்றால் பாதிக்கப்பட்ட பூமித்தாய்தான் இப்போது இடதுசாரிக் கருத்துகளைப் பேசுவாள் போல. இந்த வளர்ச்சிக் கொள்கைகளால், அவள் கோபமடைந்து புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் ஆகியவற்றின் மூலம் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பாள்’ என்கிறார்.
கன்னடத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை கீர்த்தி ராமச்சந்திரா மற்றும் விவேக் ஷான்பாக் ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். புத்தகத்தின் பின் அட்டையில், ஆஷிஸ் நந்தி, ‘அனந்தமூர்த்தி தன் இறப்புக்குப் பின் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற பரிசு’ என்று இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடுகிறார்.
‘அரசை எதிர்க்கத் தேவையில்லாத காலம் என்று எந்த ஒரு நிமிடமும் இல்லை. அந்த ஒரு தொடர் எதிர்ப்பு நமக்குத் தேவையான சத்தியாகிரகம் ஆகும்’ என்று சொல்லும் அனந்தமூர்த்தி, இந்தத் தீமைகளிலிருந்து விடுபட தீர்வையும் சொல்கிறார். அது: “நம் தேவை இப்போது சர்வோதயம்!”