பதிப்புரிமையும் வாசிப்பு உரிமையும்

பதிப்புரிமையும் வாசிப்பு உரிமையும்
Updated on
2 min read

உலகப் புத்தக தினம், பதிப்புரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. யுனிசெப் தொடங்கி உள்ளூர் நூலகங்களில் நடக்கும் கொண்டாட் டங்கள் வரை அனைத்துமே புத்தக வாசிப்பு, புத்தக விற்பனை ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகின்றன. பதிப்புரிமை என்பது படைப் பாளருக்கும் பதிப்பாளருக்குமான பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

தமிழ்ப் பதிப்புச் சூழலைப் பொறுத்த வரையில், பதிப்புரிமை பற்றிய விழிப்புணர்வு இன்னும் போதிய அளவுக்கு உருவாகவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். பெரும்பா லான பதிப்பாளர்கள், எழுத்தாளர் களுக்குப் பதிப்புரிமைச் சட்ட விதி முறைகள், விதிவிலக்குகள் இன்னும் அறிமுகமாகவில்லை. எனினும், பதிப்புரிமை மீறல்களால் எழுத்தாளரோ பதிப்பாளரோ பெரும் பயனை அடைந்துவிடக்கூடிய நிலை இன்னும் இங்கு உருவாகவில்லை.

ரோமானியர் காலத்திலேயே பதிப்புரிமை என்ற கருத்து உருவாகி விட்டது. ஆனால், அப்போது படைப்பாளர்கள் யாரும் அதில் அக்கறை செலுத்தவில்லை. அச்சுத் தொழில் உருவான பிறகுதான் பதிப்புரிமை பற்றிய விழிப்பு ணர்வு பரவ ஆரம்பித்தது. ஒரு படைப் பாளரின் உரிமையைப் பதிப்பாளர் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் பதிப்புரிமையின் அடிப்படை. ஆனால், அந்த உரிமை அவ்வப்போது வாசகர்களுக்கு எதிராகவும் வாள்வீசிப் பார்க்கிறது.

ஆகஸ்ட் 2012-ல் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ், கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ், டய்லர் அன்ட் ஃப்ரான்சிஸ் ஆகிய பதிப்ப கங்கள் ஒன்றுசேர்ந்து டெல்லி பல்கலைக் கழகத்தின் மீதும் பல்கலை வளாகத்தில் நகலகம் நடத்திவந்த ஷ்யாம் சிங் என்பவர்மீதும் வழக்கு தொடர்ந்தன. பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்களின் சில பகுதிகளை நகலெடுத்தது பதிப்புரிமை மீறல் என்று பதிப்பகங்கள் குற்றம் சாட்டின. பதிப்புரிமை மீறலுக்காக அறுபது லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவை கோரியிருந்தன.

அந்த வழக்கைத் திரும்பப் பெறவேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் வேண்டுகோள் விடுத்தார்கள். நோபல் பரிசுபெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னும் இவ்வழக்கைக் குறித்துத் தமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜிவ் சஹாய் என்ட்லா, கடந்த ஆண்டு செப்டம்பர் 16 அன்று முக்கியமான தீர்ப்பொன்றை வழங்கினார். பதிப்புரிமைச் சட்டத்தின்படி

‘நேர்மையான பயன்பாடுகள்’ என்ற விதிவிலக்கின்கீழ் பல்கலைக்கழகம் மற்றும் நகலெடுப்பாளர் மீதான குற்றச் சாட்டை அவர் தள்ளுபடி செய்தார். ஒரு நூலைப் பதிப்பிப்பதற்கும் அதை நகலெடுப்பதற்கும் உள்ள வேறு பாட்டையும் அவர் தீர்ப்பில் சுட்டிக்காட்டி யிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பதிப்பகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன. இந்த நிலையில் மார்ச் 9 அன்று தங்களது வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அந்தப் பதிப்பகங்கள் தெரிவித்துள்ளன. நான்கரை ஆண்டு காலச் சட்ட யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. பாடப் புத்தகங்களை நகலெடுத்துக்கொள்ளும் மாணவர்களின் உரிமை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு நீதிபதி ராஜிவ் சஹாய் என்ட்லா வழங்கியுள்ள தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்பின் அடிப்படை, பதிப்புரிமைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள

‘நேர்மையான பயன்பாடுகள்’ என்ற விதிவிலக்குகள்தான்.

இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் 1957 பிரிவு 52 (1) (a) ன்படி, நேர்மையான பயன்பாடுகள் என்ற வகையில் கல்வி, ஆராய்ச்சி, விமர்சனம் மற்றும் தனிநபர் உபயோகத்துக்காக எந்தவொரு நூலையும் பிரதியெடுத்துக்கொள்ளவும், இலவசமாக விநியோகிக்கவும் செய்யலாம். மேலும், பிரிவு 52 (1) (o)ன்படி ஒரு நூல், இந்தியாவில் கிடைக்காத பட்சத்தில் அந்த நூலை மூன்று பிரதிகள் வரை நகலெடுத்துப் பயன்படுத்தலாம்.

பதிப்புரிமை என்பது வாசிப்பு உரிமையையும் உள்ளடக்கியதுதான். இரண்டு உரிமைகளும் ஒன்றுக்கொன்று எதிராக இருக்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in