Published : 14 Oct 2013 12:44 pm

Updated : 06 Jun 2017 12:29 pm

 

Published : 14 Oct 2013 12:44 PM
Last Updated : 06 Jun 2017 12:29 PM

அரிய தருணங்கள்

நம்முடைய பால்ய காலத்தின் ஞாபகப் பதிவில் ஏதாவது ஒரு வலி ஏறியிருந்தாலும் இலக்கியத்தில் அதற்கு ஒரு சாகாவரம் உண்டு. பெரியவர்கள் மட்டும்தான் துயரங்களை அனுபவிக்க வேண்டும் என்பதில்லை. பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்கள் பால்ய காலத்தை எழுதிக்கொண்டிருப்பது இந்தத் துயரங்களை அனுபவித்ததால்தான். தாயுமானவள் நாவலும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

கதையைச் சொல்பவனின் சிறு வயது ஞாபகங்களாக இந்த நாவல் இருந்தாலும் அதையும் தாண்டி விரியக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் ஏனோ தொடரவில்லை. பெரியவர்களாய் இருந்து இதை நாம் வாசிக்கும்போது அந்தச் சிறுவனின் துக்கத்தை நாம் உள்வாங்குகிறோம். சிறிய வயதில் தாயை இழப்பதும் பிறரின் அரவணைப்பில் வாழ நேர்வதும் மனப்பாரத்தை மட்டுமல்ல ஒருவித வெறுமையையும் தரக்கூடியவை. ஆனால் இந்த நாவலைத் துள்ளல் மிக்க நையாண்டி பாஷையில் எழுதிச் செல்கிறார் ஆசிரியர். அந்த நடையையும் மீறி சிறுவனின் வலிகளும் வெறுமையும் நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


தாயை இழந்த பையனை, பாட்டி தானே ‘தாயுமாக’ இருந்து வளர்க்கிறார். இது நமக்குப் புதிய செய்தி அல்ல. இதையும் தாண்டிச் செல்கின்ற ’அந்த’ ஏதோ ஒன்றுதான் இலக்கியப் பதிவாக முடியும். அது என்ன என்பதுதான் இந்த நாவலின் தேடல். கப்பாப்பா என்கிற தாத்தா, முனுசாமி என்கிற கிராமத்து வேலையாள், லச்சுமி (என்கிற மாடு) போன்ற பாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவோடு வந்து போனாலும் மனதில் இடம்பிடிக்கிறவர்களாக இருப்பது சிறப்பாகும். லச்சுமி என்ற பெயரில் ஒரு உயிரினம் ஒரு முஸ்லிம் வீட்டில் வளர்க்கப்படுவதும், அது விற்பனை செய்யப்பட்ட பின்னும் தன் பழைய வீட்டுக்கே திரும்பி வருவதும் நம் சமூக மதிப்பிற்கு உரித்தானவையாகும்.

சிறுவன் பெரியவனாகித் திருமணம் முடிந்ததும் பாட்டி அவனிடம் “என்னாங்கனி எல்லாத்தையும் பாத்தியுமாம்ல” என்று கேலி தொனிக்கக் கேட்டு அவனை அணைத்துக்கொள்கிறார்; அதே பாட்டி சுகமில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவசரமாகக் கழிப்பறை போக வேண்டிய நிலையில் அவளைத் தூக்கிக்கொண்டு ஓடுவது, கழிப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் தன்கைகளையே மலக் கோப்பையாக ஆக்கி அதில் பாட்டி என்கிற ம்மாவை மலம் கழிக்கச் செய்வது, மலம் பீறிட்டடிப்பது என்று தொடரும் இந்தக் காட்சிகள் மானுடத்தை மணம் வீசச் செய்யக்கூடியனவாகும். தமிழ்ப் படைப்புலகில் இதுவரை பதிவாகாத ஓர் அரிய தருணம் இது. இந்த நாவலுக்குரிய தளம் அநேகமாக இதுதான் என்று சொல்லலாம்.

நாவல் விரிவடைய வேண்டும் என்பதற்காகத் தேவையற்றவை புகுத்தப்பட வில்லை. பிரதி தன்னளவில் சுருங்கிகொண்டு கனத்தைப் பெற்றுவிட்டது. இப்படைப்பில் குறிப்பிடத்தக்க அம்சம் இதன் பேச்சுமொழியும் சொல்வழக்குகளும் ஆகும். நாகூர் பகுதி முஸ்லிம்களின் கலாச்சாரத்தில் நெல்லை மாவட்டத்திற்குரிய சொல்வழக்குகள் இடம்பெற்றுள்ளன. ம்மா, வாப்பா, முடுக்கு (சந்து), தேத்தண்ணி போன்ற சொற்களும், கலிச்சல்ல போவான், கொல்லையில போவான் என்ற சொல்வழக்குகளும் நெல்லை மாவட்ட முஸ்லிம்களிடமும் இதர சமூகத்தவரிடமும் இன்னமும் புழக்கத்திலுள்ளன. நீண்ட இடைவெளியை அடுத்து அவை நாகூர்ப் பகுதியிலும் பேசப்படுகின்றன என்பது ஆச்சரியம் தருகிறது.


பால்ய காலம்தாயுமானவள்நாகூர் ரூமி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x