Last Updated : 02 Feb, 2014 01:58 PM

Published : 02 Feb 2014 01:58 PM
Last Updated : 02 Feb 2014 01:58 PM

கவிதைகளுக்கான திறவுகோல்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒரு ஆளுமை. சிறுகதை, நாவல், கட்டுரை. மொழிபெயர்ப்பு, கவிதை, மதிப்புரைகள் எனப் பல தளங்களில் இயங்கி வருகிறார். பெங்களூருவில் பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தில் பணிபுரிகிறார். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், சொந்த முயற்சியால் கன்னட மொழியைக் கற்றவர். கன்னட மொழியிலிருந்து முக்கியமான பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர். இதன் மூலம் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்.

பாவண்ணன் ஏற்கெனவே ‘எனக்குப் பிடித்த கதைகள்' என்ற பெயரில் தமிழின் மிக முக்கியமான சிறுகதைகளை தனது வாழ்வியல் அனுபவங்கள் சார்ந்து எழுதியவை பல தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. இதைத் திண்ணை.காம் இல் பாவண்ணன் எழுதினார்.

‘மனம் வரைந்த ஓவியம்' என்ற தலைப்பிலான இந்த நூலை ‘எனக்குப் பிடித்த கவிதைகள் ' என்றுகூட வைத்துக் கொள்ளலாம். தமிழ் நவீன கவிஞர்கள் 50 பேரின் கவிதைகளை இதில் அறிமுகப் படுத்தியுள்ளார். இவை ‘உயிரோசை' இணைய இதழில் தொடராக வெளிவந்தவை. 50 கவிதைகள், 50 கவிஞர்கள் எனத் தொகுப்பது எளிதானது. தொடர்ந்த கவிதை வாசிப்பும், அதன்பின் தொடரும் எவரும் இதைச் செய்ய முடியும். ஆனால், பாவண்ணன் தனது வாழ்வனுபவங்கள் ஊடாக நீண்டகால புரிதல் மூலம் கவிதைகளை அறிமுகப்படுத்துகிறார். இது கவிதைகளின் பொழிப்புரையாக இல்லாமல் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் வாசகன் உள் நுழைய ஒரு திறவுகோலை உருவாக்குகிறார்.

தமிழ் நவீன கவிதை பலவிதமான போக்குகளைக் கொண்டது. நேரடியான கருத்துச் சொல்லல் இல்லாதது, அனுபவங் களை வாசகன் மனதில் படரச் செய்வது, வாழ்வின் துயரங்களை எளிய சொற்களில் ஆழமான தத்துவங்களைச் சொல்வது - இப்படிப் பலதரப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

மூத்த கவிஞர்கள் க.நா.சு., பிரமிள், எஸ்.வைத்தீஸ்வரன், நகுலன், சி.மணி, சுந்தர ராமசாமி, அபி. இதற்கு அடுத்த தலைமுறையான வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்தன், தேவதேவன், பிறகு வரும் தேவதச்சன், ரமேஷ் பிரேம், ஆனந்த், பிரம்மராஜன் முதல் இப்போது எழுதும் கவிஞர்களான பிரான்சிஸ் கிருபா, எஸ்.பாபு, கோகுலக்கண்ணன் வரையி லானவர்கள். எந்தவிதப் பாகுபாடுமின்றி நல்ல கவிதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு முக்கியம். பெண் கவிகளிலும் மூத்த கவியான இரா. மீனாட்சி, திரிசடை முதல் வெண்ணிலா, மாலதி மைத்ரி, உமா மகேஸ்வரி, சல்மா வரையிலானவர்களின் கவிதைகள். தலித் கவிகளான தய்.கந்தசாமி, அழகிய பெரியவன். இப்போது பலராலும் மறக்கப்பட்ட கவிகள் மலைச்சாமி, ரா. னிவாஸன் இப்படிப் பலரின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளது. இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் தங்களுக்கான கவிதைப் போக்கையும் அதற்குரிய கவிகளையும் கண்டுகொண்டு, மேற்கொண்டு அந்தக் கவிகளின் கவிதை நூல்களைத் தேடிப்போவார்கள் என்பது உறுதி.

நூல் : மனம் வரைந்த ஓவியம்

ஆசிரியர் : பாவண்ணன்

வெளியீடு : அகரம்

மனை எண்.1, நிர்மலா நகர் ,

தஞ்சாவூர்

பக்கங்கள் : 224

விலை : ரூ. 150.

செல்பேசி எண்: 9443159371

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x