Published : 18 Feb 2017 10:14 AM
Last Updated : 18 Feb 2017 10:14 AM

நூல் வெளி: ஒளியாய் இருப்பது எது?

ஓஷோவின் புத்தகங்களைத் தொடர்ந்து தமிழில் வெளியிட்டுவருபவர்கள் கண்ணதாசன் பதிப்பகத்தினர். சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட ஓஷோ புத்தகங்களில் மிகவும் முக்கியமானது ‘உயிர் வேதம்’. அந்த நூலிலிருந்து சிறு பகுதி இங்கே…

ஓர் இருட்டறையில் விளக்கொன்று எரிந்துகொண்டிருக்கிறது. இதனால், அறையிலுள்ள எல்லாமும் ஒளி கொள்கின்றன. அவையனைத்தும் விளக்கு இருப்பதால் அறியப்படுகின்றன. ஆனால் அந்த விளக்கேகூட அது தரும் ஒளியினால் அறியப்படுகிறது. ஏனைய அனைத்தும் நாற்காலிகள், மரச்சாமான்கள், சுவர்கள், சுவரலங்காரங்கள் இவையெல்லாம் விளக்கால் தெரிந்துகொள்ளப்படுகின்றன.

ஆனால், எதனால் விளக்கு தெரிந்துகொள்ளப்படுகின்றது? விளக்கொளி தானாய் ஒளிர்வது. அதன் வெறும் இருப்பினால், மற்ற அனைத்துப் பொருட்களையும் அது காட்டிக்கொடுக்கிறது; தன்னையும் கூட அது காட்டுகிறது. ஆனால், வெளிப்படும் இவ்விரு அறிதல்களும் வெவ்வேறானவை. மாறுபட்டவை.

ஒரு நாற்காலி விளக்கொளியினால் அடையாளம் காணப்படும்போது, அந்த நாற்காலி ஒரு பொருள். விளக்கொளி அதன் மேல் விழுகிறது. அதனால் நாற்காலி தெரிகிறது. விளக்கொளி மறைந்துவிட்டால் அது தெரியாது. அதனைத் தெரிந்துகொள்ள முடியாது. நாற்காலி பற்றிய அறிதல் விளக்கொளியை சார்ந்து கிடக்கிறது; ஆனால் விளக்கொளியின் அறிதல் நாற்காலியை நம்பி இல்லை.

நீங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டாலும், ஒளி அங்கு ஒளியாகவே நீடிக்கும். பிரகாசம் உள்ளது என்பதை எடுத்துக்கூற அங்கு ஒன்றும் இருக்காது. ஆயினும், அது தன்னைத் தொடர்ந்து தெரிவித்த வண்ணமிருக்கும். ஒளி பற்றிய அறிவிப்பு, ஒரு சுயஅறிவிப்பு ஆகும்.

இதே போன்றதொரு அமைப்புதான் உள்ளார்ந்த இயற்கையும் உள்ளார்ந்த சுயமும். சுயம் வாயிலாக அனைத்தும் அறியப்படுகிறது. அனைத்தும் தெரிகிறது. ஆனால் அது வேறு எதனாலும் அறியப்படுவது கிடையாது. அது தானாய்த் தன்னைத் தெரியப்படுத்தும் ஓர் இயல்பு. அது தன்னைத் தானே அறிவிக்கிறது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x