குறுந்தொடர் | விசித்திர வாசகர்கள்: தஞ்சை ப்ரகாஷின் தீச்சுவாலை

குறுந்தொடர் | விசித்திர வாசகர்கள்: தஞ்சை ப்ரகாஷின் தீச்சுவாலை
Updated on
3 min read

தஞ்சை ப்ரகாஷ் மாதிரி ஒரு வாசகரைக் காண்பது அபூர்வம். ‘கரவமுண்டார் வூடு’, கள்ளம்’ போன்ற நாவல்களாலும் அருமையான பல சிறுகதைகளாலும் புகழ்பெற்ற ப்ரகாஷ் ஒரு மகத்தான வாசகரும்கூட. புத்தகங்களுடனான அவர் தொடர்பும் அவரது வாசிப்பும் விசித்திரமானவை. புதிதாக அவரைச் சந்திக்க வரும் எழுத்தாளர்கள் யாராக இருந்தாலும் அவருடைய புத்தக விருந்தில் சொக்கிப்போய்விடுவார்கள். அவர் இரவலாகத் தருகிற புத்தகங்களைத் திருப்பித் தர வேண்டாம் அது எத்தனை அரிய புத்தகமாக இருந்தாலும். புத்தக விஷயத்திலும் காசுபண விஷயத்திலும் அவர் காட்டிய தாராளம் ஏராளமான நண்பர்களை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

புத்தகங்களைத் தேடி…

சென்னையில் வெளியாகும் எந்தப் புத்தகமாக இருந்தாலும் தஞ்சையில் மறுநாளே கிடைப்பதற்கு ப்ரகாஷ் ஏற்பாடு செய்திருந்தார். சஞ்சிகைகளும் அப்படித்தான். புத்தகங்களுக்கான அவரது தேடல் அவர் வாழ்நாள் முழுவதும் நீண்டது. ஒருமுறை, காரைக்குடியில் யாரோ செட்டியார் வீட்டில் பழைய ஆனந்தபோதினி இதழ்கள் இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு இரவோடிரவாகப் புறப்பட்டார் ப்ரகாஷ். நாங்கள்தான் பார்சலை எடுத்துவந்தோம்.

ஒருநாள் சுட்டெரிக்கும் வெயிலில் வியர்க்க விறுவிறுக்க சைக்கிள் கேரியரில் புத்தக அடுக்குடன் வந்துசேர்ந்தார் ப்ரகாஷ். த.நா. சேனாதிபதி மொழிபெயர்த்த வங்க மொழி நாவல்களின் மலையாள மொழிபெயர்ப்புகள் அவை. புழுக்கத்தைப் பொருட்படுத்தாமல் அந்த நாவல்களின் சிறப்பைப் பற்றி அவர் சொல்லிக்காட்டிய விதம்… மறக்கவே முடியவில்லை இன்னும்.

அடிப்படையில் ஒரு நல்ல வாசகனாக இருப்பதுதான் முக்கியம் என்பார். எழுதுவது இரண்டாம் பட்சம்தான். எழுதாம லேகூட இருந்துவிடலாம். வாசிக்காமல் இருக்க முடியாது என்பார். ‘குசிகர் குட்டிக் கதைகள்’ என்ற புத்தகம் எங்கே கிடைக்குமென்று புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் அவர் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டே இருந்ததை அறிய முடிகிறது. இதைப் படித்துவிட்டு நமக்கும் குசிகர் குட்டிக் கதைகளைப் படிக்க ஆசை வருகிறது. அவருக்கு அந்தப் புத்தகம் கிடைத்ததா என்று தெரியவில்லை.

பழைய புத்தகங்களின் நடமாடும் களஞ்சியம்

புத்தகங்களை இரவல் வாங்குபவர்கள் திருப்பித் தராதது பற்றிய அவரது அபிப்பிராயம் வித்தியாசமானது. ‘எந்த அளவுக்கு அவர் அந்தப் புத்தகத்தை நேசித்திருந்தால் திருப்பிக் கொடுக்காமல் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்க வேண்டும்” என்பார் சிரித்தபடி. பழைய புத்தகங்களின் நடமாடும் தகவல் களஞ்சியமாக இருந்தார் ப்ரகாஷ். புத்தக வெளியீட்டாளர், வெளியிட்ட ஆண்டு, அட்டைப் பட விசேஷம் எல்லாம் அவருக்கு அத்துப்படி.

நிறையப் படித்தார்; நிறைகளையே பேசினார்!

தஞ்சை ப்ரகாஷ் தன் வாசிப்பு அனுபவத்தைப் பிறர்மீது எப்படிப் படரவிடுவது என்ற வித்தை தெரிந்தவர். நிறையப் படித்தார். நிறைகளையே பேசினார். சில சமயம் அவரது ரசனை மிகுந்த பேச்சில் மயங்கி, சம்பந்தப்பட்ட புத்தகத்தை வாசித்தால் ப்ரகாஷ் சொன்ன அளவு அதில் சுவாரசியம் இருக்காது. இதற்கு ப்ரகாஷ் சொல்லும் விளக்கம்: “ஒரு புத்தகம் மனக்குளத்தில் விழுந்த கல் போன்றது. எப்படிப்பட்ட அலைகளை அது எழுப்பும் என்று யாருக்குத் தெரியும்?”

வாசிப்பதுதான் முக்கியம்

ப்ரகாஷின் வீடு முழுக்க புத்தகங்கள் இறைந்து கிடக்கும். ஒருமுறை ப்ரகாஷைச் சந்திக்க வெளியூரிலிருந்து ஒரு நண்பர் வந்தார். எங்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சிறிது நேரம் கழித்துக் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டார். வீட்டின் இறுதிப் பகுதியில் இருக்கிறது என்று ப்ரகாஷ் கைகாட்டினார். கழிப்பறை சென்றுவிட்டுத் திரும்பிய நண்பர் கையில் ‘தம்ம பதம்’ புத்தகத்துடன் திரும்பி வந்தார். “என்ன இது, கழிப்பறையில் வைத்திருக்கக் கூடிய புத்தகமா இது?” என்று அவர் ப்ரகாஷிடம் கேட்டார். அதற்கு ப்ரகாஷ் என்ன சொன்னார் தெரியுமா? “புத்தகம் எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; அதை நாம் வாசிக்கிறோமா என்பதுதான் முக்கியம்.”

க.நா.சு.வும் சமையல் புத்தகமும்

திட்டமிட்ட வாசிப்பில் ப்ரகாஷுக்கு நம்பிக்கை இல்லை. க.நா.சு.வின் ‘அவதூதர்’ நாவல் பற்றிப் பேசுவார். கையில் மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம் இருக்கும். ஒருமுறை ரேடியோ மெகானிசம்’ பற்றிய புத்தகத்தில் அவர் ஆழ்ந்திருந்ததைக் கண்டிருக்கிறேன். தஞ்சை பெரிய கோயில் புல்வெளியில் உட்கார்ந்தபடி புதுக்கவிதை மரபு, சங்க இலக்கியத்திலிருந்து தொடங்குவதை சுவையாக அவர் விளக்கியதைக் காதை மடக்கிக்கொண்டு நந்தியும் கேட்டது.

ஊடுபிரதி…

அவரிடம் ஒரு விசித்திரமான பழக்கம். வாசிக்கும் புத்தகங்களில் தன்னுடைய பிரதியின் முகப்பு ஒரு தீச்சுவாலையின் படம் வரைந்து அந்தப் புத்தகம் பற்றிய தன் மன அதிர்வுகளைப் பதிவுசெய்திருப்பார். வெகு விசித்திரமான பதச் சேர்க்கைகள், சொல்லாடல்களுடன் அவை காட்சியளிக்கும். பத்து அல்லது பதினைந்து வரிகளில் வாசிப்பு ராகத்தின் துணுக்கு ஒன்று அங்கே மீட்டப்பட்டிருக்கும். சில சமயம் இத்தகைய குறிப்புகள் அந்தப் புத்தகம் வாங்கப்பட்ட சூழ்நிலை, காலநிலை, அப்போதைய அவரது மனநினைல் ஆகியவற்றோடு மட்டுமே முடிந்திருக்கும். தமிழ்ப் புத்தகங்களில் தமிழிலும் தெலுங்கு, மலையாளம், வங்கம் ஆகிய மொழிப் புத்தகங்களில் அந்தந்த மொழிகளிலும் குறிப்பு எழுதக்கூடியவர் ப்ரகாஷ் (அவர் பன்மொழியறிவு கொண்டவர்). இந்தக் குறிப்புகளைத் திரட்டினாலே ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ஆனால், அவரின் புத்தகங்கள் இப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் மறைவுக்குப் பின் பல இடங்களுக்குச் சென்றுவிட்டன.

‘ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் சிறுகதைகளும் நாவல்களும்’ என்ற ராதுகா பதிப்பக வெளியிட்டில் அவர் இப்படி எழுதுகிறார்:

“எண்பத்தாறாம் ஆண்டிலும் எனக்கு ஒரு டாஸ்டயேவ்ஸ்கியின் புஸ்தகம் தேடிக் கிடைத்து என்னை அடைவது ஆஸ்ச்சர்யமே. எத்தனை முறை எத்தனை மொழிகளிலும் அவனைச் சந்திப்பதும் சந்தோஷமே. திருச்சியில் என்ஸிபிஹெச்சில் இதனை வாங்கியபோது நான் கழித்த நாட்களும் மீண்டும் என்னைக் கழித்த நாட்களும் தொடர்ந்து ஞாபகம் வருகின்றன.

இது எனக்காக மட்டுமல்ல டாஸ்டயேவ்ஸ்கிக்கும்தான் ஜி.எம்.எல். ப்ரகாஷ்

'' தஞ்சையில் உள்ள தூய பேதுரு ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் உள்ள தஞ்சை ப்ரகாஷின் கல்லறைமீது எவ்விதமான கல்லறை வாசகங்களும் பொறிக்கப்படவில்லை. ஒரு புத்தகம் மட்டுமே செதுக்கப்பட்டிருக்கிறது. ஒரு எளிய வாசகனாக ப்ரகாஷ் இதையே விரும்பியிருப்பார்!

(அடுத்த வாரம் வேறொரு விசித்திர வாசகர்...)

- கோபாலி, தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in