

நவீன தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் தேவதச்சன். தனது கவித்துவ தரிசனங்களின் வழியே கவிதைக்கான பிரத்யேக மொழியை உருவாக்குபவர். தேவதச்சன் கவிதைகள், அன்றாட வாழ்வின் எளிய உரையாடல்களையும் தருணங்களையும் ஒரு ரசவாதத்தின் மூலம் அபூர்வமானவையாக மாற்றிவிடுகின்றன. இந்தியாவின் முதன்மையான கவிஞர்களில் ஒருவராகக் கொண்டாடப்பட வேண்டியவர் அவர். 44 ஆண்டுகளாக எழுதிவரும் அவர், 2017 வரை எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பை ‘மர்ம நபர்’ என்னும் தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.
இன்று காலை முதல் இரவு வரை சென்னை, சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் தேவதச்சன் கவிதைகள் குறித்த கலந்துரையாடலும் நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை எஸ்.ராமகிருஷ்ணன் முன்னின்று செய்திருப்பதுடன் உலகக் கவிதைகளில் தேவதச்சனின் இடம் குறித்தும் சிறப்புரையாற்றுகிறார். தமிழின் முதன்மையான கவிஞர்களும் ஆளுமைகளும் பங்கேற்கிறார்கள். இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சார்லி, கவிஞர் ஆனந்த் உள்ளிட்ட பலரும் கருத்துரை வழங்குகிறார்கள். கவிதையின் பால் அக்கறை கொண்ட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளலாம். தொடர்புக்கு: 044- 24993448, 9003218208
அனிருத்தன் வாசுதேவனுக்கு விருது
தமிழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நாவல் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’. இந்த நாவலை ஆங்கிலத்தில் ‘ஒன் பார்ட் உமன்’ என்னும் பெயரில் மொழியாக்கம் செய்திருந்தார் அனிருத்தன் வாசுதேவன். இந்த நாவலுக்கு இந்த ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டிருக்கிறது. விருதுக்கான தேர்வுக் குழுவில் கே.சச்சிதானந்தன், கீதா ஹரிஹரன், ஆ.இரா.வேங்கடாசலபதி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.