Last Updated : 04 Feb, 2017 10:47 AM

 

Published : 04 Feb 2017 10:47 AM
Last Updated : 04 Feb 2017 10:47 AM

நூல்களின் வழியே விரியும் தத்துவ உலகம்

தத்துவ உலகம் மிகவும் பெரியது. பல்வேறு பார்வைகளிலிருந்து தொடங்கிப் பல்வேறு பாதைகளினூடே முடிவற்று விரியும் பன்முக உலகம் அது. உலகம் முழுவதிலும் உருவான பல்வேறு தத்துவங்களையும் தமிழில் வாசித்துவிட முடியும் என்று சொல்லிவிட முடியாது. அதிலும் அசல் தமிழ் நூல்கள் மிகமிகக் குறைவு.

இந்தியத் தத்துவங்களின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள ர.சு. நல்லபெருமாள் எழுதிய ‘பிரும்ம ரகசியம்’ (வானதி பதிப்பகம்) என்னும் நூல் உதவும். இந்திய மண்ணில் தோன்றிய வைதீக, அவைதீகத் தத்துவ மரபுகளை உரையாடல் வடிவில் நேர்த்தியாக அறிமுகம் செய்கிறது.

ஜெயமோகன் எழுதியுள்ள ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்னும் நூல் (கிழக்கு பதிப்பகம்) ‘ஷட் தரிசனங்கள்’ என்று சொல்லப்படும் ஆறு தத்துவப் பார்வைகளை விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறது. கி. லஷ்மணன் எழுதிய ‘இந்தியத் தத்துவ ஞானம்’ நூலும் (பழனியப்பா பிரதர்ஸ்) இந்தியத் தத்துவத்துக்கான நல்ல அறிமுகம். தமிழ் மரபைச் சார்ந்த சைவ சித்தாந்தம் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

யொஸ்டைன் கார்டெர் எழுதிய ‘சோபியின் உலகம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூல் (தமிழில் ஆர். சிவகுமார்; காலச்சுவடு பதிப்பகம்) உலகின் பல்வேறு தத்துவப் போக்குகளைக் கதை வடிவில் அறிமுகப்படுத்துகிறது.

தேவி பிரசாத் சட்டோபாத்யாய எழுதி, கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்துள்ள ‘இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ (விடியல் பதிப்பகம்) இந்தியத் தத்துவ மரபின் பல்வேறு கிளைகளையும் வரலாற்றுப் போக்குகளையும் மார்க்ஸிய ஆய்வுக் கண்ணோட்டத்தில் அலசுகிறது. இந்தியத் தத்துவம் குறித்த மிக விரிவான நூல் என இதைச் சொல்லலாம்.

பிரம்ம சூத்திரம், உபநிடதங்கள், பகவத் கீதை ஆகியவை இந்து ஞான மரபின் அடிப்படை நூல்கள் (பிரஸ்தானத்ரயம்) என்று வழங்கப்படுகின்றன. இவற்றில் பகவத் கீதைக்கு மட்டும் நூற்றுக் கணக்கான நூல்கள் தமிழில் உள்ளன. சுவாமி சித்பவானந்தர் எழுதியுள்ள கீதை உரை, பல்வேறு தரப்புகளின் பார்வைகளையும் விரிவாகத் தருகிறது. விவேகானந்தர், வினோபா பாவே, அரவிந்தர், ஓஷோ உள்ளிட்ட பலர் கீதைக்கு அளித்துள்ள விளக்கங்களும் மொழியாக்கத்தில் கிடைக்கின்றன. ராமகிருஷ்ண மடம், அரவிந்த ஆசிரமம், கண்ணதாசன் பதிப்பகம் முதலான சில பதிப்பகங்கள் இந்த நூல்களை வெளியிட்டுள்ளன.

கீதையின் மொழியாக்கங்களில் பாரதியார், கண்ணதாசன் ஆகியோரின் மொழியாக்கங்கள் முக்கியமானவை. தன் மொழியாக்கத்துக்கு பாரதியார் எழுதியுள்ள முன்னுரை தன்னளவில் முழுமையான தத்துவ விளக்கம்.

‘கீதையின் மறுபக்கம்’ என்னும் தலைப்பில் கி.வீரமணி எழுதியிருக்கும் நூல், கீதையைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்திலும் சமூக நீதிப் பார்வையிலும் குறுக்கு விசாரணை செய்கிறது. ‘இந்திய வரலாற்றில் கீதை’ என்னும் மொழிபெயர்ப்பு நூல் (விடியல் பதிப்பகம்) கீதையை இடதுசாரிப் பார்வையில் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகிறது. கீதை பற்றிய மாற்றுப் பார்வைகளை இந்நூல்கள் தருகின்றன.

‘பிரம்ம சூத்திரம்’ நூலுக்கு சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதியுள்ள நேர்த்தியான உரையை ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது. உபநிடதங்களின் பொருளும் விளக்கமும் ராமகிருஷ்ண மடம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெளியிட்டுள்ள நூல்களின் மூலம் தமிழில் கிடைக்கின்றன. விவேகானந்தரின் ‘வேதாந்தச் சொற்பொழிவுகள்’, உபநிடதத் தத்துவங்களைத் தெளிவாக அறிமுகம் செய்கிறது. ஆதிசங்கரரின் விவேக சூடாமணி, சதஸ்லோகி, தசஸ்லோகி முதலான நூல்கள் அத்வைதத்தை விளக்குகின்றன. இவற்றின் மொழியாக்கங்களை ராமகிருஷ்ண மடம், சிருங்கேரி மடம் ஆகியவை வெளியிட்டுள்ளன.

அம்பேத்கரின் ‘புத்தரும் அவர் தம்மமும்’ என்னும் நூல் புத்தரின் தம்மபதத்தைப் பற்றிய சிறந்த பதிவு. ‘தாவோ தே ஜிங்’ (க்ரியா பதிப்பகம்) சீன மெய்யியலை சி. மணியின் மொழிபெயர்ப்பில் அழகாக அறிமுகம் செய்கிறது.

ஜென் தத்துவம் குறித்துப் பல மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளன. ‘ஜென்: தொடக்க நிலையினருக்கு’ (அடையாளம் பதிப்பகம்) என்னும் நூல் ஜென் தத்துவத்தை எளிமையாக அறிமுகம்செய்கிறது. ஜென் தத்துவம் பற்றிய ஓஷோவின் நூல்களும் தமிழில் கிடைக்கின்றன (கண்ணதாசன் பதிப்பகம்).

ஜித்து கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அறிய நர்மதா பதிப்பகமும் ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையும் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன. ‘அறிந்ததனின்றும் விடுதலை’ நூல் ஜே.கே.யின் சிந்தனைகளின் அடிப்படைகளை உணர்த்தக்கூடியது. பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’(யோகதா சத்சங்க சொசைட்டி வெளியீடு) என்னும் நூல், ஆன்மிக தரிசனங்களை அனுபவ தளத்தில் பகிர்ந்துகொள்கிறது.

அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இஸ்லாம் ஒரு சுருக்கமான அறிமுகம்’ என்னும் நூல் இஸ்லாத்தை எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளும் தமிழில் நிறைய கிடைக்கிறது. கிறிஸ்தவ இறையியல் குறித்த நூல்கள் தமிழில் அதிகம் இல்லை. பைபிளும் பைபிள் கதைகளும் தமிழில் கிடைக்கின்றன.

தத்துவத் தேடல் என்பது நூல்களின் பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடியதல்ல. ஆனால், நூல்களிலிருந்து அது தொடங்கலாம். நூல்களின் துணையோடு பயணிக்கலாம்.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x