Last Updated : 23 Nov, 2013 12:00 AM

 

Published : 23 Nov 2013 12:00 AM
Last Updated : 23 Nov 2013 12:00 AM

நிசப்த வெளியில் கால்கள்

பெண்களது கண்களால் பருகப்படும் மது போன்றது ஆணின் யௌவனம்’ என்ற காளிதாரசரின் ரகுவம்ச வரியை நினைவுபடுத்துகிற தொடர்கவிதைச் சரம் ஒன்று புறநானூற்றில் தட்டுப்படுகிறது. புறநானூறு 83,84,85 ஆம் பாடல்களாக இடம்பெறும் இந்தச் சரம், பெருங்கோழியூர் நாய்கன் மகள் நக்கண்ணையின் தாபத்தின் சூடு படிந்தது. சோழன் கோபெருங்கிள்ளியின் மீதான நக்கண்ணையின் ஒருபக்கக் காதலைச் சொல்லும் கைக்கிளைத் திணைக் கவிதைகள் என்பதால், அகப்பாடல் தொகுதியில் இடம் மறுக்கப்பட்டவை அவை.

ஆண் உடல் மீதான பெண்ணின் தொடரும் பார்வையை மையப்படுத்துகின்றன நக்கண்ணையின் கவிதைகள். ஆமூர் மல்லனை மற்போரில் ஜெயிக்கும் கோப்பெருநற்கிள்ளியின் உடலை உண்கின்றன நக்கண்ணையின் கண்கள். அவருடைய கவிதைக்கு முன்னதாக இடம்பெறும் சாத்தந்தையார் கவிதையில், ஆமூர் மல்லனுடன் பொருதும் நற்கிள்ளியின் உடல் அசைவுகள் பதிவு செய்யப்படுகின்றன. ‘ஊரில் விழா; அதற்குப் போக வேண்டும். மனைவிக்குப் பேறுகாலம்; அவளுக்கும் சென்று உதவ வேண்டும். மழை மேகம் கவிந்து வரும் மாலைவேளை. இந்த நெருக்கடியில் கட்டிலைப் பின்னிக் கொண்டிருக்கும் புலைமகன் கை ஊசி, எவ்வளவு வேகமாக வாரைச் செலுத்துமோ, அவ்வளவு வேகத்துடன் அமைந்தது நற்கிள்ளியின் மற்போர் இயக்கம்’ என்கிறது சாத்தந்தையாரின் கவிதை. (புலைமகனுக்கும் அரசனுக்கும் கவிதை வெளி சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருப்பதை நுட்பமாகச் சுட்டுகிறார் ஏ.கே.ராமானுஜன்) ஆனால் நக்கண்ணையின் பார்வையோ பொதுவெளியில் இருக்கும் ஆணின் உடல்மீது நிலைத்து நிற்கிறது.

‘அடிபுனை தொடுகழல் மைஅணல் காளைக்கு என்

தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே

அடுதோள் முயங்கல் அவை நாணுவலே’

என்றும்

‘என்ஐ புற்கை உண்டும் பெருந்தோளன்னே’ என்றும் தாயையும், சமூகத்தையும் மீறி அவளுடைய ஆசை கசிகிறது. கூழை உண்டாலும் பெரிய தோள்களை உடையவன் ஆன கிள்ளியை முயங்குவதற்குத் தடையாக நிற்பவை, சபை குறித்த அவளது நாணமும், அவள் பக்கமிருந்து வராத சமிக்ஞையும்.

ஆனால் ‘நாணி இனிஓர் கருமம் இல்லை’ என்ற நாச்சியார் திருமொழியும்

‘கனிந்த வேப்பம்பழத்திலிருந்து

வெளியேறு விதையென

என்னிலிருந்து நீங்குகிறது வெட்கம்’ – என்ற இன்றையக் கவிஞர் சுகிர்தராணியின் சொற்களும், நக்கண்ணையின் கவிதையை மேலெடுத்துச் செல்கின்றன. ‘காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்’ என்ற கோட்பாடு மிக இயல்பாக இங்கு தகர்க்கப்படுகிறது. ஆனால் சொற்களில் கரைந்தும் கரையாமலும் நிற்கிறது நக்கண்ணையின் காமம். சிலம்பு ஒலிக்க ஓடிவந்து வீட்டின் முன்புறத்தே முழாப் போன்ற பக்கத்தை உடைய பனைமரத்தைப் பொருந்தி நின்று, மற்போரில் நற்கிள்ளி வெற்றி பெறுவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள் நக்கண்ணை. அந்தக் காட்சியில் உறைகிறது இறுதிக் கவிதை. அவளுடைய கைக்கிளைக் குரல் மனச்சுவர்களில் மோதி எதிரொலி கேட்காமல், வெட்டவெளியில் அலைந்து கொண்டிருக்கிறது.

புதிர்களின் அடுக்குகளால் ஆன பெண்மையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது, வீரைவெளியனாரின் 320 ஆவது புறநானூற்றுப் பாடல். வேட்டுவர் மனையில் ஒரு பகல்பொழுதில், அந்த இல்லத்தலைவியின் சில நுட்பமான புற-அக அசைவுகளைப் பதிவுசெய்கிறார் கவிஞர். முன்னைக் கொடியும், முசுண்டைக் கொடியும் பம்மிப் படர்ந்திருப்பதால் வேறு பந்தல் வேண்டாத வீட்டு முற்றம். யானை வேட்டை ஆடி வந்த வேட்டுவன் ஆழ்ந்து தூங்குகிறான். சற்றுத் தள்ளி இளைய பெண் மானைத் தழுவி, ஆண்மான் புணர்ந்து திளை கொண்டிருக்கிறது. வாசலில் மான்தோலில் காய வைக்கப்பட்டிருக்கிற தினையரிசியைக் கொத்த வருகிறது காட்டுக்கோழி. அதை விரட்டுவதற்கான ஒலியுடன் கூடிய தனது அசைவுகளால், கணவனின் உறக்கம் கலையும் என்று அஞ்சியும், மான்களின் புணர்நிலை இன்பம் சிதையும் என்று அஞ்சியும், தனக்கு உரிமையான வீட்டின் வெளியில் நடக்க மறுத்து, ஒருபுறமாக ஒதுங்கி நிற்கிறாள் அந்த வேட்டுவப் பெண். அத்தகைய மெல்லிய இயல்புடைய அந்தப் பெண்ணின் இல்லத்துக்குச் சென்றால், நல்ல உணவை அருந்தித் தங்கியும் செல்லலாம் என்று புதிதாக வரும் பாணனை நோக்கிச் சொல்வதாய் முடிகிறது வீரைவெளியனாரின் கவிதை.

‘இன்புறு புணர்நிலை கண்ட மனையோன்

கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே

பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்

இல் வழங்காமையின்’

என்ற வரிகள் வேட்டுவ வெளிக்கு முரணாக அமைந்த அந்தப் பெண்ணின் மென்மையான அக அசைவுகளையும், மௌனமான பாலியல் அதிர்வுகளையும் பொதிந்தவையாக இருக்கின்றன. ‘அவன் வனத்தில் நுழையும்போது சருகுகள் நொறுங்குவதில்லை’ என்ற ஜென் கவிதையின் சாயலை அவளது நிசப்தத்தில் உணரமுடிகிறது.

‘சலனமற்ற வெளி, உடலோடு உடல் உரசும் இரைச்சல் நிறைந்த வெளி, பாழ்வெளி, தகிப்பு நிறையும் வெளி, ஊதல் எடுக்கும் வெளி, வெயிலின் முட்கள் குத்தும் வெளி, உடலை நீர் இழுத்துச் செல்லும் வெளி’ – எனப் பெண்ணுடலுக்குப் பரிச்சயமான, பரிச்சயமாகாத வெளிகளைப் பற்றி குறிப்பிடுகிறார் நவீன கவிஞர் குட்டி ரேவதி. பெண் உடலின் தகிப்பு நிறையும் வெளி, சலனமற்ற வெளி- என்ற இரண்டுக்குமான வகை மாதிரிகளைப் புறநானூறு என்ற புறம் சார்ந்த கவிதைத் தொகுதியில் சந்திக்கிறோம் என்பதுதான் ஆச்சரியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x