Published : 21 Jun 2016 10:45 am

Updated : 14 Jun 2017 13:29 pm

 

Published : 21 Jun 2016 10:45 AM
Last Updated : 14 Jun 2017 01:29 PM

கதாநதி 23: கவின் மலர்- புதுயுகம் நோக்கிய வல் எழுத்து!

23

கவின் மலர் ஊடகத்துறையாளராக இப் போது இருக்கிறார். இவர் கட்டுரைகள் பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிப்பதைத் தீவிர வாசகர்கள் அறிவர். கவிஞராக, எல்லோரை யும் போல எழுதத் தொடங்கி இன்று உரைநடை யில் கை பதித்துள்ளார். அண்மையில் வெளி வந்திருக்கும் ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’ என்ற கட்டுரைத் தொகுதி, அதன் உண்மை சார்ந்த அடர்ந்த வெளிப்பாட்டுக்காகப் பேசப் படும் பதிவாக மிளிர்கிறது.

இப்போது என் முன் ‘நீளும் கனவு’ என்ற அவருடைய கதைத் தொகுதி நம் கவனம்கொள்ள இருக்கிறது. இது இவருடைய முதல் கதைத் தொகுதி. ‘கயல் கவின்’ பதிப்பகம் வெளியீடு. எட்டுக் கதைகள் கொண்ட இத்தொகுதி, பல வகையில் வாசிக்க வேண்டிய முக்கியத்துவம் உடைய கதைகளாகும்.


முதலில் தோன்றுவது ரெளத்ரம் மிளிர்ந்த அவர் கட்டுரைகளுக்கு மாறாக, சிறுகதை வடிவம் குறித்த கவின்மலரின் தெளிவு, மகிழ்ச்சி தருகிறது. கதை கோரும் கலை அமைதியும் கதை படரவிடும் தொனியும் கதைகளை வாசிக்கத் தக்கதாகவும் மேலான தரத்திலும் வைக்கத் துணைபுரிகின்றன. எந்த எரியும் பிரச்சினையும் கதையாகலாம். எந்தச் சுவையிலும் கதை எழுதப்படலாம். அது கதை என்ற முகலட்சணம் கொண்டதாக (எழுதியவரின் முகம்தான்)அவருடைய வாழ்க்கைப் பார்வை யும் கொண்டதாக இருக்க வேண்டும் என்கிற அடிப்படை இலக்கணம் தவிர, கதைக்கு வேறு சூட்சுமம் இல்லை.

கவின்மலரின் கதைகள், புனைவுகளாக, அவர் பார்வையைத் துல்லியமாக வெளிப்படுத்து கின்றன. இவ்வளவு விரிந்த பூமிப் பந்தில் மனிதர்களின் இருப்பு, குறிப்பாகப் பெண்களின் இருப்பு ஏன் இத்தனை நெருக்குதலுக்கும், விளிம்பில் நிறுத்தப்படுவதற்கும் ஆன காரணம் பற்றிய கேள்விகள், அவர் கதைகள் எனலாம். இந்தியா போன்ற, பழம்பெரும் ஆனால், புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று ஒட்டாரம் பிடிக்கிற தேசத்துக்குள் மரபு என்கிற, வரையறுக்கப்பட்ட ஒழுக்கம் மற்றும் நடைமுறை மீறுகிற எவரையும் சகித்துக் கொள்ளாத மனோபாவம் பற்றிய கேள்விகளே இவர் கதைகளில் அடித்தளம் எனலாம்.

ஆறு ஆண்டுகளுக்கு முன், கவின் மலரின் முதல் கதை வெளிவந்தது. ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்பது கதையின் தலைப்பு. அக்கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்:

இப்போதெல்லாம் கயல்விழியின் நினைவு ஓயாமல் வருகிறது என்று தொடங்குகிறார் கதைசொல்லி. சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதெல்லாம் கயல்விழி நினைவுகள். அவள் வீட்டில் இருந்து இவர் வீடுவரை வந்து, இருவரும் ஒன்றாகப் பள்ளிக்குப் புறப்படுகிறார்கள். கயல்விழி கொஞ்சம் சிவப்பு. இவள் கருப்பு. பையன்கள் பிளாக் அண்ட் வொயிட் என்பார்கள். ரெட்டைப் புறா, நீலக் குயில்கள் என்றும் கூடப் பல பெயர்கள். பையன்கள் பின்னால் வந்து உரக்க இப்பெயரை அழைக்கும்போது, இவர்கள் சிரித்தபடி சைக்கிள் ஓட்டிக்கொண்டுச் செல்வார்கள்.

கயல் இவளுக்கு ஒன்பதாம் வகுப்பில்தான் சினேகிதியானாள். காரணம் இருந்து அல்லது இல்லாமல் சிரித்துத் திட்டு வாங்காத நாட்கள் இல்லை. தூங்கி எழுந்ததில் இருந்து தூங்கப் போகும் வரைக்கும் நிகழ்ந்த அத்தனையையும் அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

திடுமென ஒரு பையன் கதை சொல்லி முன்வந்து நின்று ‘ஐ லவ் யூ’ என்ற, உலகம் சாகும் வரைக்கும் சாகாத வார்த்தையை மொழிந் தான். இவளுக்கு மட்டும் அல்ல; கயலுக்கும் ஒரு பையன். என்ன பண்ண? தும்பிக்குத் தெரிந்துவிடுகிறது, பூ மலரும் இடம். முத லில் பயம். அப்புறம் சிரிப்பு. பையன்கள் கிண்டலையும், கேலியையும் சிரித்தே எதிர்கொள்ளத் தொடங்கினார்கள் அவர்கள்.

இரண்டு பேரின் அப்பாவும் தமிழாசிரியர்கள். ஆகவே, பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள். கயல்விழி மற்றும் சுடர் மொழி. பிளஸ் டூ பரீட்சை வந்தது. ரிசல்ட் வந்தபோது சுடர் மட்டும் பாஸ். சேர்ந்து படிக்க முடியாமையே வருத்தம். கயல் அழுதாள். சுடர் கல்லூரிக்குப் போனாள். அப்போதுதான் வீட்டுக்குத் தொலைபேசி வந்தது. பேசுவதற்குத்தானே பேசி. அவர்கள் பேசித் தீர்த்தார்கள் மணிக்கணக்கில். கொஞ்சம் பேச்சு. கொஞ்சம் சிரிப்பு.

கல்லூரியில் கயலுக்குப் பல தோழிகள். தோழிகளோடு அவளைப் பார்த்தால் சுடருக்கு எரிச்சல். சுடரோடுச் சுற்றும் தோழிகள் மேல் கயலுக்கு கோபம். இறுதியாண்டு வந்தது. விடை கொடுக்கும் விழா. ஏழு தோழிகள் ஒரே நிறத்தில் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். எதுக்கு எல்லோரும் ஒரே நிறத்தில் சாரி என்று கயல் கோபித்தாள். அழுதாள்.

கயலுக்குத் திருமணம் ஆகி, மகனும் பிறந்தான். கணவர் வெளிநாட்டில் இருந்தார். சுடருக்கும் ஏதோ ஒரு பணி. ஒரு சந்தர்ப்பத்தில் சுடருக்கு வீடு பார்க்கும் பிரச்சினை. அப்போது கயல் கோபித்தாள். ‘‘உடனே தன் வீட்டுக்கு வந்து சேர்’’ என்றாள் கயல்.

கயல் வீட்டில் வந்து தங்கினாள் சுடர். ஒருநாள் வேலை முடிந்து வீடு திரும்பும்போது இரவு மணி 11. அழைப்பு மணியை அழுத்தும்போது விழித்துக்கொண்ட கயலின் குழந்தை அழுதது. கயல், அந்தச் சமயத்திலும் தோசை வார்த்து தந்தாள். அச்சமயம், கயலின் அத்தை அறை வாசலில் வந்து நின்றாள். ‘‘வேறு வீடு பார்த்தியாம்மா..?’’ என்று கேட்டாள் அத்தை. அன்று சுடருக்கு உறக்கம் வரவில்லை. அத்தை அப்படி ஏன் கேட்க வேண்டும்?

அன்றும் சோதனையாக வேலை 10 மணி வரையில் நீடித்தது. திரும்பவும் கயல் வீடு வந்து… அழைப்பு மணி. குழந்தை அலறல். அத்தை. அவள் முன் திருவண்ணாமலை பஸ் வந்தது. ஏறி அமர்ந்தாள். ஊர் சேர்ந்து, ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்தாள். சென்னை பஸ் நின்றது. ஏறி அமர்ந்துகொண்டாள். ஊர் சேர்ந்தாள். என்ன ஆச்சு என்றாள் கயல். வேலை. ஆபீஸிலேயே தங்கிவிட்டேன். கயல், அவள் திருமணம் பற்றிக் கேட்டாள். தேவை இல்லை என்றாள் சுடர். இரவு முழுக்கப் பயணம் செய்த அன்று இரவு, கயல் போன் செய்து என்ன ஆயிற்று என்று கேட்கவே இல்லை என்பது திடுமென்று தோன்றியது.

ஒரு மாலை கயல் கேட்டாள்:

‘‘அடுத்த வாரம் என் நாத்தனார் வர்றார். பழைய மாதிரி ஆள். நீ யார், எதுக்கு இங்கே தங்குகிறார் என்றெல்லாம் கேள்வி கேட்பார். அடுத்த வாரத்துக்குள் வேறு வீடு பார்த்துக்க முடியுமா..?’’

‘‘பார்த்துக்கலாம் கயல்!’’

நண்பர் செல்வத்துக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள்: ‘இன்று உன் அறையில் தங்கிக்கொள்ளலாமா?’

‘தாராளமாக வாருங்கள்’ என்று பதில் வந்தது.

அறையில் இருந்தபோது கயல் பேசினாள்.

‘‘கோபம் இல்லையே…’’

‘‘சேச்சே…’’

‘‘என்னைப் புரிஞ்சுக்கோ, சுடர். நான் சூழ்நிலைக் கைதியாக இருக்கிறேன்…’’

கயலுக்குச் சுடர் குறுஞ்செய்தி அனுப்பினாள்.

‘எனக்கு உன்னைத் தெரியும். உன்னைப் புரியும்!’

திடீரென்று ஒன்று உறைத்தது. அவள் வீட்டில் இருந்த இத்தனை நாட்களிலும், ஒரு முறைகூட நாங்கள் இருவரும் சிரிக்கவே இல்லை என்பது.

இதே போன்ற ‘நீளும் கனவு’ என்று ஒரு கதை. தன்பால் பெண் என்பதை அறிந்துகொள்ள நேர்ந்த சிறுவர்கள் கடந்து தீர வேண்டிய அந்த பெரும் அவஸ்தை, பெற்றோர் என்பவர்கள் அந்தக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய காயத்தையும் மிகவும் நட்பு தோன்றும் சொற்களால் மிகவும் அழகிய கலைநயம் தோன்ற எழுதி இருக்கிறார் கவின் மலர்.

அவமானம், குடும்ப கவுரவம் என்பது போன்ற அர்த்தம் இழந்த வார்த்தைகளால் குடும்பமும் பெற்றோரும் பால் மாற்றம் நேர்ந்த குழந்தைகளுக்கு, அது உடம்பின் சின்ன மாற்றம்தான் என்பதைப் புரியவைக்கத் தவறியதால் அக்குழந்தைகள் எதிர்கொள்ள நேர்ந்த மிகப்பெரிய பாதிப்புகள் பற்றிய பிரச்சினைகளை, எதிர்கொள்ள நேர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய கதை இது. தமிழ்ப் பரப்பில் ஒரு முக்கியமான கதை இது.

கவின் மலர் கொஞ்சமாகவே எழுதுகிறார். சில நேரங்களில் அது நல்லது. களம் சென்று ஆய்கிற சமூகப் பொறுப்பையும் அவர் ஏற்றுச் செயல்படுகிறார். அந்த அனுபவங்கள், மனிதர்களையும், சமூகத்தையும் புரிந்துகொள்ள அவருக்கு உதவும். நல்லது. நன்றாக எழுத முடிகிறவர்கள், தொடர்ந்து எழுதுவது படைப்பு என்பதையும் தாண்டி சமூக ஆவணமாகவும் இருக்கும்.

- நிறைந்தது.

என் எழுத்து வாழ்க்கையின் முக்கியப் பணி!வாசகர்க்கு அன்பான வணக்கம்!

கடந்த பல வாரங்களாக, நான் மதிக்கும் பல எழுத்தாளர் படைப்புகள் பற்றி எழுத நேர்ந்தமைக்காக நான் மிகவும் மகிழ்கிறேன். என் எழுத்து வாழ்க்கையின் முக்கியப் பணியாக இந்தக் கட்டுரைகளை நினைக்கிறேன். நல்ல எழுத்தாளர்களை, நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லத் தயங்கும் சூழலில், இதுவொரு தேவையான இலக்கியக் கடமை. இத்தனை வாரங்கள் எனக்கு எழுத வாய்ப்பு தந்த ‘தி இந்து’ தமிழுக்கு மனமார்ந்த நன்றியைச் சொல்வதும் என் கடமை. இது இப்போதைக்கான விடைபெறல்தான். மீண்டும் ‘தி இந்து’ தமிழ் வாசகர்களைச் சந்தித்து உரையாட விரைவில் நான் தயார் ஆவேன். இன்னும் சிறந்த, இன்னும் மேலான எழுத்துக்களுடன் உங்களைச் சந்திக்க வருவேன். நன்றி. வணக்கம்.


பிரபஞ்சன்தொடர்கதாநதிமொழிகதைஇலக்கியம்பிரபஞ்சன் தொடர்எழுத்தாளர் அறிமுகம்புத்தக அறிமுகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author