

தஞ்சைப் பெரிய கோயில் பிரமாண்டத்தின் அற்புதம் என்றால் தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயிலை நுண்மையின் அற்புதம் எனலாம். தாராசுரம் கோயிலைப் பற்றித் தமிழில் வந்திருக்கும் பதிவுகளும் புத்தகங்களும் மிகக் குறைவு. தாராசுரத்தை நமக்கு விரிவாகவும் நுட்பமாகவும் அறிமுகப்படுத்தும் இந்த நூலில் 500-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் தமிழர்களின் சிற்பக் கலையின் உச்சத்தை நமக்குக் காட்டுகின்றன. மகாமாயா, அன்னபூரணி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரு சிற்பத்தை அது ‘கங்காதேவி’ சிற்பம் என்று இந்த நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் நிறுவியிருக்கிறார். இணையத்தில் ஒரு கட்டுரை வாசிக்கும்போது சம்பந்தப்பட்ட சொற்களுக்கு ‘சுட்டி’ (லிங்க்) தருவதுபோல் சிற்பங்களுக்கு இலக்கியத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் ‘சுட்டி’ தந்திருக்கிறார் குடவாயில் பாலசுப்பிரமணியன். வரலாற்று நூல் மட்டுமல்ல, நல்ல ஒரு வழிகாட்டியும்கூட.
குடவாயில் பாலசுப்பிரமணியன், விலை: ரூ. 1000, வெளியீடு: சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை