Last Updated : 10 Jul, 2016 11:02 AM

Published : 10 Jul 2016 11:02 AM
Last Updated : 10 Jul 2016 11:02 AM

ஆதிக்கங்களின் கதை - மண்குதிரை

ஈழத் தமிழ் இலக்கியத்தைப் போல் தனித்துவம்கொண்டது மலையகத் தமிழ் இலக்கியம். இலங்கைச் சுதந்திரத்திற்குப் பிறகுதான் வடக்கில் பிரச்சினை. ஆனால் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோட்டப் பயிரிடுதலுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து அடிமைகளாகக் கொண்டுசெல்லப்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது மலையகத்தின் பிரச்சினை. அங்கு நிலவுடைமை ஆதிக்கத்தில் அடிமைப்பட்ட தங்கள் தினப்பாட்டை பாட அங்கு இலக்கியம் பாடலாக வடிவெடுத்தது எனலாம்.

...

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மலையகம் என்னும் பதம் பரவலான பயன்பாட்டுக்கு வருகிறது. ஆனால் மலைநாட்டின் இலக்கியத்தின் வரலாறு முன்பே தொடங்கிவிட்டது. 1869-ல் பிரிட்டிஷாருக்காக ஆப்ரஹாம் ஜோசப்பால் இயற்றப்பட்ட கோப்பிக் கிருஷிக் கும்மி மலையகத்தின் முதல் நூல்.

மலையக உரைநடை இலக்கிய நூல்கள் 1920 வாக்கில் வெளிவரத் தொடங்கிவிட்டன. அடுத்த சில பத்தாண்டுகளுக்குள் நாவல்களும் வெளிவந்தன. ஆனால், மலையகத்தின் நாவல் எனச் சொல்லிக்கொள்ளும் யோக்கியதை உள்ள நாவல் என சி.பி.வேலுப்பிள்ளையின் ‘வாழ்வற்ற வாழ்’வை (1959) ஆய்வாளர்கள் சாரல் நாடன், க. அருணாசலம் ஆகியோர் முன்மொழிகிறார்கள். இதற்கு அடுத்து முன்மொழியப்படும் நாவல் கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சை’.

இந்த இரு எழுத்தாளர்களுக்குப் பிறகு மலையக இலக்கியத்தில் முன்னிலைப்படுத்தக்கூடிய எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். 1960-களில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் ஜோசப். தற்காலச் சமூக நிகழ்வுகளைக் கதைப் பின்னணியாகக் கொண்டு சிறுகதை இலக்கியத்தின் தேர்ந்த நுட்பங்களுடன், தன் கதைகளை இவர் சிருஷ்டித்தார். இந்தத் தன்மை தமிழ் இலக்கியத்தில் தனிக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இவரது ‘குடை நிழல்’ 2010-ம் ஆண்டு வெளிவந்த நாவல். ஆனால், இந்த நாவல் அதற்கு முன்பே வீரகேசரியில் தொடராக வெளிவந்துள்ளது.

...

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள இனவாத எழுச்சி, ஆட்சியாளர்களால் உருவாக்கப்படுகிறது. இதற்கு எதிராக வடக்கில் போராட்டக் குழுக்கள் ஆயுதங்களை எடுக்கத் தொடங்குகின்றன. இந்த இரு சமூக நிகழ்வுகளும் எப்படி ஒரு சாமானியனின் அன்றாடத்திற்குள், மலையகக் காட்டு விலங்குகளைப் போல் இறங்குகின்றன, என்பதைச் சித்திரிப்பது ‘குடை நிழ’லின் பிரதான நோக்கம் எனலாம்.

கொழும்பு நகரத்தில் புலம்பெயர்ந்து வாழும் மலையகத் தமிழ்க் குடும்பத்தின் கதையாக இந்த நாவல் விரிவுகொள்கிறது. ஆனால், இதன் பகைப்புலன் கொழும்பையும் தாண்டி நீள்கிறது. சிங்கள அரசின் ஆதிக்கத்தையும் மலையகக் கங்காணிகளின் ஆதிக்கத்தையும் காட்சிப்படுத்துகிறது. சொந்த வீட்டுக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தையும் சொல்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இதை ஆதிக்கத்தின் கதை என்கிறார்.

நல்லுறக்கத்தில் இருக்கும் ஒரு சாமானியன் வீடு, பலமாகத் தட்டப்படுவதில் சட்டெனக் கதையைத் தொடங்கிவிடுகிறார் ஜோசப். தட்டுவது இலங்கைப் போலீசார். சந்தேகப்படும் நபராக கதைசொல்லி கைதுசெய்யப்படுவதில் இருந்து, கதை பின்னோக்கி தன் சிறகை விரிக்கிறது. ஒருவகையில் வாடகைக்கு வீடு தேடி அலைந்த சாமானியனின் கதையாகத்தான் ஜோசப் நாவலை நகர்த்திச் செல்கிறார். அவன் திராணிக்கு ஏற்றபடியான விஷயங்களைத்தான் கதையும் சொல்கிறது. ஆனால், அவை அந்தச் சூழலின் தன்மையால் முக்கியமான கருத்தாக வெளிப்படுகிறது.

பிள்ளைகளைத் தமிழ்வழிப் பள்ளியில் சேர்ப்பதற்காக வீடு மாற நினைக்கிறான் கதைசொல்லி. வீடு மாறியிருந்தால் இந்தப் போலீஸிடம் பிடிபட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வீடு தேடும் பிரச்சினைதான், இலங்கையின் வெலிகடாச் சிறைவரை கொண்டுபோய் அவனை நிறுத்திவிடுகிறது. இதற்கிடையில் இந்தச் சித்திரிப்பில் திகிலூட்டும் விவரிப்போ வன்முறையோ இல்லை. ஆனால் இவை எல்லாம் கதைசொல்லிக்கு அருகிலேயே நிகழ்கின்றன; எந்த நேரமும் அவனுக்கும் நிகழலாம் என்பதைப் போல.

...

இலங்கைக்கு வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு ‘தமிழர்-சிங்களவர்’ என்னும் இரு அடையாள மோதல்கள் மட்டுமே. ஆனால் உள்ளே தமிழர் என்னும் அடையாளத்துக்குள்ளே ஈழத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் இஸ்லாமியர் என்னும் மூன்று முரண்கள் உள்ளன. அவற்றை இந்த நாவல் பதிவுசெய்துள்ளது. வெலிகடா சிறையில் தமிழில் பேசும் போலீசிடம் கதைசொல்லி கேட்கிறான், ‘நீங்கள் தமிழா?” என்று, “இல்லை, முஸ்லீம்…” என்று அதற்குப் பதில் வருகிறது. யாழ்ப்பாணப் பிரச்சினையில் மலையகத் தமிழருக்கு அவ்வளவு கவனம் இல்லை என்ற தொனியும் நாவலில் உண்டு. ஆனால் அதன் பின்விளைவுகள் தமிழ் பேசும் எல்லோருக்கும் பொதுவானது என்பதையும் நாவல் உணர்த்துகிறது.

கதை தொடங்கியதில் இருந்து, சாமானியனான கதைசொல்லி தன் இயல்புகளையே பகடிசெய்துகொண்டே இருக்கிறார். இது அவல நகைச்சுவையாக வெளிப்பட்டுள்ளது. சரியாகப் பூட்டாத வாசல் கதவை போலீசாருக்காகத் திறந்துவிடுவதில் இருந்து, வெலிகடா சிறைக் கம்பிகளுக்கு இடையில் ஒரு பன்றியைப் போல் ‘மூஸ் மூஸ்’ என்று மூச்சை விட்டுக்கொண்டு காத்திருப்பதுவரை, இதைப் பார்க்க முடிகிறது. இந்த அம்சத்தில் அசோகமித்திரனின் விவரிப்புடன் ஜோசப்பின் மொழியை ஒப்பிடலாம்.

...

ஜோசப் கதைச் சம்பவங்களை ஒன்றபின் ஒன்றாக அடுக்கிச் செல்வதில் உள்ள தெளிவு விஷேசமானது. அதனால் கதை, விவரிப்புகளின் கோவையாக அயர்ச்சி தராமல், சம்பவங்களின் கோவையாக வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன. மிகப் பெரிய வன்முறையை சிறு சம்பவங்கள், சொற்கள் கொண்டு உருவாக்கும் திராணியும் இந்த நாவலின் கவனிக்கத்தக்க அம்சங்கள். இந்த நூற்றாண்டின் பெரிய வன்முறையை தன் வீட்டின் சமையற்கட்டில் நடக்கும் ஒரு காட்சியாகச் சொல்ல அவரால் முடிகிறது. சந்தையிலிருந்து வாங்கி வந்த மீனின் வயிற்றில் ஒரு துண்டு விரல் இருக்கிறது. ஓர் அதிர்ச்சியூட்டும் காட்சி, அவர்களது அன்றாடத்திற்குள் நிகழ்கிறது. மகள் அதுமுதல் மீனே சாப்பிடுவதில்லை எனக் கடக்கிறார் கதை சொல்லி.

மலையகத்தைப் பாகற்காய் என்கிறார். அதன் உள்ளே கிடந்த பூச்சி நான் என்கிறார். இந்த உருவகம் மலையகத்தின் மொத்த இன்னலையும் ஒரு உமிழ்நீர்ச் சுவைப்பில் உணர்த்திவிடுகிறது எண்ணுக்கும் எழுத்துக்குமான வாழ்க்கைத் தொடர்பை விவரிக்கும் விதத்தில், இந்தப் படைப்பு வாசகனுக்கு மிகுந்த மனவெழுச்சியைத் தருவதாக உயர்ந்துவிடுகிறது.

...

வெலிகடா சிறையில் இரண்டாவது தளத்திலிருக்கும் அப்பாவியான கதைசொல்லி, பத்திரிகைகளில் வருவதுபோல மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பும் கதையில் இருக்கிறது. ஆனால், குற்றமற்ற அவன் முறையாக வெளிவரும் வாய்ப்பு இருக்கும் என நம்புகிறான். அதற்கான ஜனநாயக நம்பிக்கையை விதைப்பதுடன் நாவல் முடிகிறது. ஆனால், அது துளிர்விட்டதாகத் தெரிய வில்லை.

தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x