

காந்தி கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம்
வார்தா புயல் பிரச்சினை, பணமதிப்பு நீக்கப் பிரச்சினை போன்றவற்றையெல்லாம் மீறி, சென்னை மக்கள் இவ்வளவு பேர் புத்தகக் காட்சிக்கு வந்தார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது. பணப் பிரச்சினையைத் தவிர்க்க, அரங்குக்குள் இரண்டு, வெளியே ஒன்று என 3 ஏ.டி.எம். மெஷின்கள், 50 ஸ்வைப்பிங் இயந்திரங்களை ஏற்பாடு செய்திருந்தோம். அதைப் பயன்படுத்தியதோடு நில்லாமல், பேடிஎம் வாலட்டையும் பயன்படுத்தி வாசகர்கள் புத்தகங்கள் வாங்கியிருக்கிறார்கள். பண நெருக்கடி, பொங்கல் செலவு, ஊருக்குப் போய்வர வேண்டிய நெருக்கடி இத்தனைக்கும் மத்தியில், புத்தகம் வாங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பொதுவாக, சிக்கன நடவடிக்கையைப் பெண்கள்தான் மேற்கொள்வார்கள். ஆனால், புத்தகம் வாங்குவது வீண்செலவல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை, பெண்கள் கூட்டமே உணர்த்தியது.
காந்தி கண்ணதாசன்
ராஜாராம், விடியல் பதிப்பகம்
இந்தப் புத்தகத் திருவிழா மறக்க முடியாத நிகழ்வு. எங்கள் அரங்கில் நல்ல விற்பனை. நாங்கள் புத்தகக் காட்சிக்காக வெளியிட்ட ‘பெரியார் இன்றும் என்றும்’ புத்தகம் முதல் பதிப்பு விற்றுத்தீர்ந்து, இரண்டாம் பதிப்பும் காலியாகிவிட்டது.
ராஜாராம்
லோகநாதன், புலம் வெளியீடு
கூட்டத்துக்குக் குறைவில்லை. ஆனால், வார நாட்களில் புத்தக விற்பனை மிகக் குறைவு. நெட்வொர்க் கிடைக்காததால், சில நேரங்களில் ஸ்வைப் மெஷின்கள் காலை வாரின. அதுவும் பரபரப்பான ஞாயிறு மாலை 6 மணிக்கு அது சேட்டை பண்ணியது விற்பனையில் இழப்பை ஏற்படுத்திவிட்டது. ‘அட்டையைத் தேய்க்கலாம்னுதான் வந்தோம்’ என்று தலையைச் சொறிந்தபடி சிலர் அரங்கைக் கடந்துவிட்டார்கள். அதற்காக எங்களுக்கு நஷ்டம் என்று சொல்ல மாட்டேன். இன்னும் கொஞ்சம் விற்பனை நடந்திருக்கலாம்.
லோகநாதன்
புருசோத்தமன், சர்வோதயா இலக்கியப் பண்ணை
சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வாசகர் கூட்டம் அலைமோதியது. பொங்கல், காணும் பொங்கலுக்கும் நிறைய கூட்டம் வந்ததோடு, விற்பனையும் நன்றாக நடந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விடுமுறை என்பதால், செவ்வாய்க் கிழமையை முழுநேரக் கண்காட்சியாக மாற்றினார்கள். அதுவும் வசதியாகிவிட்டது. புத்தகம் வாங்க வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பண அட்டையையே பயன்படுத்தினார்கள். எங்களுக்கு 60% வியாபாரம் ரொக்கமில்லாப் பரிவர்த்தனையாகவே இருந்தது.
புருசோத்தமன்
சபாபதி, என்சிபிஎச்
புத்தகக்காட்சியில் வசதிக் குறைவு என்று எதுவுமே இல்லை. விற்பனையும் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே உள்ளது. எங்கள் வெளியீடுகளில் அம்பேத்கர், அயோத்திதாசர் நூல்களும், ரொமிலா தாப்பரின் ‘முற்கால இந்தியா’, ரஷ்ய மொழிபெயப்பு நூல்கள் போன்றவையும் அதிகமாக விற்றன. அதேபோல குழந்தைகளுக்கான நூல்வரிசையும், 20 ரூபாய்க்குப் போடப்பட்ட சிறுநூல் வரிசையும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பதிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான புத்தகக்காட்சி இது.
சபாபதி
ஜான், பனுவல் பதிப்பகம்
ஜான்
கூட்டத்துக்குக் குறைவில்லை. ஆனால், விற்பனை எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தால், அந்தச் சாலையில் வேறு வேலையாகச் செல்லும் யார் வேண்டுமானாலும், சட்டென்று வாகனத்தை நிறுத்திவிட்டு புத்தகக்காட்சிக்கு வரக்கூடிய வசதி இருந்தது. இந்த இடத்துக்குப் பிரதான சாலையிலிருந்து சந்து வழியாகச் செல்ல வேண்டியிருப்பதால், திடீர் பார்வையாளர்கள் வராமல் போய்விட்டார்கள். முன்திட்டத்தோடு வீட்டிலிருந்து புறப்படுபவர்கள் மட்டுமே வருகிறார்கள். பணமதிப்பு நீக்கப் பிரச்சினையும் விற்பனைக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.