

ஜெயகாந்த நினைவுகள் தொகுப்பு: சேதுபதி
விலை:ரூ. 300, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625001, போன் : 0452-2345971
இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய உலகில் தன்னிகரற்ற ஆளுமையாகத் திகழ்ந்தவர் ஜெயகாந்தன். சென்ற தலைமுறை வாசகர்கள் மட்டுமல்ல;இந்த தலைமுறை வாசகர்களையும் வசீகரிக்கும் வல்லமையுடையவை அவரது எழுத்துகள். தன் எழுத்தைப் போலவே கம்பீரத்தோடு வாழ்ந்த ஜெயகாந்தனின் படைப்புத் திறன், ‘சபை’யில் அவரது உரையாடல்கள், அவரது குணநலன் என அனைத்தையும் பதிவுசெய்துள்ள தொகுப்பிது. இந்திரா பார்த்தசாரதி, சா. கந்தசாமி, ஈரோடு தமிழன்பன்,நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், பிரபஞ்சன், வண்ணதாசன் போன்றோரின் கட்டுரைகள் ஜெயகாந்தனை நெருக்கமாக நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன.
பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள்
தொகுப்பாசிரியர்: முனைவர் இரா.மோகன்
விலை:ரூ. 450, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை-625001. போன் : 0452-2345971
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும், பல்கலைக்கழக துணைவேந்தராகத் தனது பணியை நிறைவு செய்தவர் பேராசிரியர் ம. திருமலை. அவரது மணிவிழாவையொட்டி, 1975-ம் ஆண்டு முதல் 2011 வரை அவர் எழுதிய கட்டுரைகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஒப்பியல் நோக்கு, திறனாய்வுப் பார்வை, இலக்கியச் சுவை, பக்தி நெறி, புனைகதைத் திறன், இலக்கிய வித்தகர்கள், ஆளுமை வளர்ச்சி ஆகிய 7 தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள 40 கட்டுரைகளும் ம.திருமலையின் ஆழ்ந்த வாசிப்புக்கும் விரிவான தேடலுக்கும் சான்றாதாரமாக அமைந்துள்ளன.
நகுலன் ஆ. பூமிச்செல்வம்
விலை: ரூ. 50, சாகித்திய அகாதெமி, சென்னை- 18.
போன் : 044-24354815
‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல், அரை நூற்றாண்டு காலம் நவீன தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் சளைக்காமல் எழுதிக்கொண்டிருந்த நகுலனைப் பற்றிய அறிமுகத்தைத் தந்துள்ளது. டி.கே. துரைசாமி எனும் இயற்பெயரோடு கும்பகோணத்தில் பிறந்து, தன் கடைசிக் காலம் வரை திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் நகுலன். அவரின் சிறுகதை, நாவல், கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு என அனைத்துத் தளங்களையும் தனித்தனியாக ஆய்வுசெய்துள்ள நூலாசிரியர், ‘நகுலன் ஒரு புதிர்’ என்று நிறைவாகச் சொல்வதுதான் எவ்வளவு பொருத்தமானது.
இந்து மத அகராதி மார்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி தமிழில்: உதயகுமார் பாலன், விலை: ரூ. 600, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17.
போன் : 044 24332682
உலக சமயங்கள் மற்றும் நாட்டாரியலில் அறிஞர்களான மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி தொகுத்த இந்து மதக் கலைக்களஞ்சியம் இது. கி.மு. 1500 முதல் கி.பி. 1500 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த இந்து சமயம் சார்ந்த புராணிகங்கள், நாட்டாரியல், தத்துவம், இலக்கியம் மற்றும் இந்து சமய வரலாற்றிலுள்ள 2,500 கருப்பொருட்களை அறிமுகம் செய்யும் தொகுப்பு இது. இந்து மதத்தையும் இந்தியாவையும் புரிந்துகொள்வதற்கு இந்தக் கையேடு உதவுகிறது. மொழிபெயர்ப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆய்வாளர்களுக்கும் இந்து மத ஆர்வலர்களுக்கும் உதவும் நூல் இது.
வஞ்சிக்கப்படும் மேற்கு மற்றும் தெற்குத் தமிழகம்
சி.க.கருப்பண்ணன், ஐ.ஆர்.எஸ். (ஓய்வு)
விலை: ரூ. 150, வெளியீடு: செல்லம்மாள் பதிப்பகம், நாமக்கல் 637003
போன் : 04286291999
நிர்வாக வசதிக்காகத் தமிழ்நாட்டை மூன்று மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்னும் கருத்தை முன்வைக்கும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. மத்திய அரசின் பொறுப்புமிக்க பதவி வகித்த கருப்பண்ணன் பல ஆய்வுத் தகவல்கள், ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாதத்தை முன்வைத்துள்ளார். 1956-ல் வெறும் 9 மாவட்டங்கள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 32 மாவட்டங்கள் உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். வட தமிழகம் மட்டுமே வளமாக இருப்பதாகவும் தெற்கு, மேற்குத் தமிழகங்கள் வஞ்சிக்கப்படுவதையும் எடுத்துக்காட்டுகிறார். நிர்வாக வசதிக்காக மாநிலத்தைப் பிரிப்பது அனுகூலமாகவே இருக்கும் என்னும் முடிவுக்கும் வருகிறார் ஆசிரியர்.